இல்லம் தேடிக் கல்வி' திட்டம் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 'திராவிட மாடல்' ஆட்சியில் பல அதிரடியான மாற்றங்களைப் பள்ளிக் கல்வித்துறை அடைந்திருக்கிறது. இத்திட்டத்தினை 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி மரக்காணம் அருகே உள்ள முதலியார் குப்பத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது பள்ளிக்கல்வித்துறைக்கு மிக நெருக்கடியான காலகட்டம். கொரோனா பெருந்தொற்று உலகையே முடக்கிப் போட்டதில், பள்ளிக்கூடத்திற்குச் செல்ல முடியாமல் குழந்தைகள் வீட்டிற்குள்ளாகவே முடங்கப்பட்டனர். அவர்களின் கற்றல் இடைவெளி என்பது அதிகரித்தது. எதிர்காலத்தில் இந்த இடைவெளி மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறலாம் என உலக அளவிலான பல்வேறு ஆய்வுகள் எச்சரித்து வந்தன.
அதை மிகச் சரியாக உணர்ந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், இந்தக் கற்றல் இடைவெளியைக் குறைக்க 'இல்லம் தேடிக் கல்வி'யை அறிமுகப்படுத்தினார். அதற்கு 'பள்ளியைத்தாண்டி வகுப்பறையை விரிவுபடுத்துவது' என்று ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
அப்போது சிலர் இதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் விமர்சித்தனர். ஆனால், இன்றைக்கு இத்திட்டத்தால், கிட்டத்தட்ட 92 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகளில் உள்ள 34,05,856 அரசுப்பள்ளி மாணவர்கள் இதன் மூலம் பலனடைந்துள்ளனர் என்று விளக்கம் அளித்துள்ளது. ஆரம்பத்தில் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைக் குறைப்பதே இத்திட்டத்தின் இலக்காக இருந்தது. ஆகவே, சில மாதங்களுக்குப் பிறகு இதன் சேவையை அரசு நிறுத்தவும் திட்டமிட்டிருந்தது.
அந்த நேரத்தில்தான் மாலை நேரங்களில் தங்களின் பிள்ளைகளுக்கு டியூஷன் வைக்க வசதி இல்லாத ஏழை, எளிய பெற்றோர்கள் இதனை நடப்பு ஆண்டுக்கும் தொடர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். அதை மனதில் வைத்து மீண்டும் இத்திட்டம் நடப்பாண்டு தொடரும் என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். மேலும் அவர், ஐ.நா. சபையில் 'இல்லம் தேடிக் கல்வி' திட்டம் குறித்துப் பேசப் பட்டுள்ளதாக ஒரு தகவலைச் சுட்டிக்காட்டினார்.
அதேபோல் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஓர் ஆய்வு, இல்லம் தேடிக் கல்வித் திட்டமானது கற்றல் இடைவெளியிலிருந்த தடைகளைத் தகர்த்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. ஆகவே இதனை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்த வேண்டும் என்றும் அந்த ஆய்வு பரிந்துரைத்தது. அந்த ஆய்வானது 'Covid-19 Learning Loss and Recovery: Panel Data Evidence from India' என்ற தலைப்பில் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட 'இல்லம் தேடிக் கல்வி' மூலம் கடந்த 6 மாதங்களில் பன்மடங்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை எல்லாம் கடந்து மலைக்கிராமங்களில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சாதிய பாகுபாடுகள் மிகக் குறைந்துள்ளது என்கிறார்கள் இதன் ஒரு பகுதியாக உள்ள தன்னார்வலர்கள்.
இத்திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 2 லட்சம் தன்னார்வலர்கள், 35 லட்சம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கல்வி கற்பித்து வருகின்றனர். பள்ளி நேரத்திற்குப் பிறகு தினமும் 1 முதல் 1;30 மணிநேரம் வரை ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்கள் கொண்டு இந்தக் கற்றல் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மதுரையில் மட்டும் 5,800 மையங்களில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது. 7,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் மாணவர்களுக்கு ஆதரவளிக்க ஆர்வமுள்ள 10,000 தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். 99402 55455 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால், அரசு தன்னார்வலர்கள் மூலம் குழந்தைகளுக்கு வீடு தேடி வந்து கல்வியைக் கற்றுத்தர ஏற்பாடு செய்துவிடும். ஆகவே பெரிய அளவில் அலைச்சல் இல்லை.
தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும்படி இந்தத் தன்னார்வலர்கள் ஆலோசனை வழங்கியதன் மூலம் 11 இலட்சம் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளியைப் பற்றிய விழிப்புணர்வு பன்மடங்கு பெற்றோரிடத்தில் அதிகரித்துள்ளதையே இந்த எண்ணிக்கை எடுத்துக் கூறுகிறது. 2023-24 ஆம் ஆண்டு கல்வியாண்டில் மட்டும் ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்காக 60,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்தத் தன்னார்வலர்கள் சுமார் 4,33,353 மாணவர்களை நேரடியாகச் சந்தித்துள்ளனர் என அரசு அளித்துள்ள விளக்கத்தின் மூலம் அறிய முடிகிறது.