shabd-logo

அத்தியாயம் 41 - நிலவறை

14 December 2023

1 பார்த்தது 1

இருண்ட சுரங்கப் பாதையில் வந்தியத்தேவன் காலை ஊன்றி வைத்து, விழுந்து விடாமல் நடந்தான். படிகள் கொஞ்ச தூரம் கீழே இறங்கின. பிறகு சமநிலமாயிருந்தது. மறுபடியும் படிகள். மீண்டும் சமதரை. இரண்டு கைகளையும் எட்டி விரித்துப் பார்த்தான் சுவர் தட்டுப்படவில்லை. ஆகவே, அந்தச் சுரங்க வழி விசாலமானதாகவே இருக்க வேண்டும். மறுபடி சற்றுத் தூரம் போனதும் படிகள் மேலே ஏறின. வளைந்து செல்வதாகவும் தோன்றியது. அப்பப்பா! இத்தகைய கும்மிருட்டில் தட்டுத் தடுமாறி இன்னும் எத்தனை தூரம் நடக்க வேண்டுமோ தெரியவில்லையே!
ஆகா! இது என்ன! இருள் சிறிது குறைந்து வருகிறதே! மிக மிக மங்கலான ஒளி தோன்றுகிறதே! இந்த மங்கிய ஒளி எப்படி எங்கிருந்து வருகிறது? மேலே கூரையில் எங்கிருந்தாவது வரும் நிலவின் ஒளியா? அல்லது சுவர்களில் உள்ள பலகணி வழியாக வரும் ஒளியா? மறைவான இடத்தில் வைத்திருக்கும் விளக்கிலிருந்து பரவும் ஒளியா?…
இல்லை, இல்லை! இது என்ன அற்புதம்? நம் கண் முன்னால் தெரியும் இந்தக் காட்சி மெய்யான காட்சிதானா? அல்லது நமது மூளை கலங்கியதால் ஏற்பட்ட தோற்றமா?
அது ஒரு விசாலமான மண்டபம். கல்லைக் குடைந்து எடுத்து அமைத்த நிலவறை மண்டபம். அதனாலேதான் தலையை இடித்து விடும் போல் அவ்வளவு தாழ்வாகச் சமமட்டமான மேல் தளம் அமைந்திருக்கிறது. அந்த நிலவறையில் குடிகொண்டுள்ள மங்கிய நிலவொளி வெளியிலிருந்து வருவது அல்ல; கூரை வழியாகவோ பலகணி வழியாகவோ வருவதும் அல்ல. அங்கங்கே அந்த நிலவறையில் கும்பல் கும்பலாகவும் சில இடங்களில் பரவலாகவும் வருகிறது. ஆ! அப்படி நிலவொளி வீசும் அப்பொருள்கள் எத்தகைய பொருள்கள்! ஒரு மூலையில் மணி மகுடங்கள்; முத்தும் மணியும் வைரமும் பதித்த மகுடங்கள்; இன்னொரு பக்கத்தில் ஹாரங்கள்; முத்து வடங்கள்; நவரத்தின மாலைகள், அதோ அந்த வாயகன்ற அண்டாவில் என்ன? கடவுளே! அவ்வளவும் புன்னை மொட்டுக்களைப் போன்ற வெண் முத்துக்கள்! குண்டு குண்டான கெட்டி முத்துக்கள்! அதோ அந்தப் பானையில் பளபளவென்று மஞ்சள் வெயில் வீசும் பொற்காசுகள். இதோ இங்கே குவிந்து கிடப்பவை தங்கக் கட்டிகள். தஞ்சை அரண்மனையின் நிலவறைப் பொக்கிஷம் இதுதான் போலும்! தனாதிகாரி பழுவேட்டரையரின் மாளிகையையொட்டி இந்த இருள் மாளிகையும் அதில் இந்தப் பொக்கிஷ நிலவறையும் இருப்பதில் வியப்பில்லையல்லவா? அம்மம்மா! இந்த நிலவறைக்குள் நாம் வந்து சேர்ந்தோமே? பாக்கிய லட்சுமியும் அதிர்ஷ்ட தேவதையும் சேர்ந்தல்லவா நம்மை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்? எப்படிப்பட்ட அதிசயமான, அபூர்வமான இரகசியத்தை, நம்முடைய முயற்சி ஒன்றும் இல்லாமலே நாம் தெரிந்து கொண்டோம்! இதை எப்படிப் பயன்படுத்துவது? பயன்படுத்துவது அப்புறம் இருக்கட்டும்; இங்கிருந்து போவதற்கே மனம் வராது போலிருக்கிறதே! இங்கேயே சுற்றிச் சுழன்று கொண்டிருக்கலாம் போலத் தோன்றுகிறதே! இங்கேயே இருந்தால் பசி, தாகம் தெரியாது! உறக்கம் அருகிலும் அணுகாது! நூறு வருஷ காலமாகச் சோழ நாட்டு வீர சைன்யங்கள் அடைந்த வெற்றிகளின் பலன்கள் எல்லாம் இங்கே இருக்கின்றன. நவநிதி என்று சொல்வார்களே; அவ்வளவும் இங்கே இருக்கிறது! குபேரனுடைய பொக்கிஷத்தையும் தோற்கடிக்கும் செல்வக் களஞ்சியம் இங்கே இருக்கிறது இதை விட்டு எதற்காகப் போக வேண்டும்!
வந்தியத்தேவன் அந்த நிலவறையைச் சுற்றிச் சுற்றி வந்தான். ஒரு மூலையில் கிடந்த மணிமகுடங்களைத் தொட்டுப் பார்த்தான். இன்னொரு பக்கத்தில் கிடந்த ரத்தின ஹாரங்களைக் கையில் எடுத்துப் பார்த்தான்.அவற்றைப் போட்டுவிட்டு இன்னொரு பக்கம் சென்று செப்புப் பானையில் நிறைந்திருந்த முத்துக்களில் கைகளை விட்டு அளைந்தான். வேறொரு பானையில் கையை விட்டுப் பொற்காசுகளை அள்ளிச் சொரிந்தான். ஒரு மூலையில் தரையில் பளபளவென்று ஏதோ பரவலாக ஜொலிப்பதைக் கண்டு அங்கே சென்றான். முதலில் என்னவென்று தெரியவில்லை பிறகு, குனிந்து உற்றுப் பார்த்தான். ஐயோ! ஆண்டவனே! அது ஓர் எலும்புக்கூடு! ஒரு காலத்தில் சதையும் இரத்தமும் தோலும் உரோமமும் மூக்கும் முகமும் கண்ணும் காதுமாக இருந்த மனித உடலின் எலும்புக்கூடு!
ஆ! இந்த எலும்புக்கூடு அசைகிறதே! உயிர்பெற்று எழுகிறதே! பொற்காசுகளைப் போலவே சத்தமிடுகிறதே! நமக்கு ஏதோ சேதி சொல்ல எழுந்திருப்பதாய்க் காண்கிறதே!….. வல்லவரையனுடைய உடம்பிலிருந்து ஒவ்வொரு ரோமமும் குத்திட்டு நின்றது. தனக்குப் பைத்தியந்தான் பிடித்து விட்டது என்று நினைத்தான். சீச்சீ! எலும்புக்கூடு எழுந்திருக்கவில்லை! அதற்குள்ளேயிருந்து ஒரு பெருச்சாளி ஓடி வருகிறது! நம் கால் மீது விழுந்து ஓடுகிறது!… ஆம்; இப்போது பார்த்தால் எலும்புக்கூடு தரையிலேதான் விழுந்து கிடக்கிறது! ஆனால் அது நமக்கு ஒரு சேதி சொல்லுகிறது என்பது உண்மை. “ஓடிப் போ! இங்கே தாமதியாதே! நானும் உன்னைப் போல் உடல் படைத்த மனிதனாயிருந்தேன். இங்கு வந்து அகப்பட்டுக் கொண்டேன். இங்கேயே மாண்டு மடிந்தேன்! இப்போது எலும்புக்கூடாகக் கிடக்கிறேன்! ஓடிப் போ!” என்று அது நம்மை எச்சரிக்கிறது. இங்கிருந்து, உடனே தப்பிச் சென்றோமோ, பிழைத்தோம். இல்லாவிட்டால் அதோகதி தான்; அந்த மனிதனுக்கு ஏற்பட்ட கதிதான்.
வந்தியத்தேவன் அந்த நிலவறையிலிருந்து வெளியேற எண்ணினான். ஆனால் வெளியேறும் வழிதான் தெரியவில்லை. வந்த வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நிலவறையின் ஓரமாக எங்கே போனாலும் இருள் என்னும் பூதம் வாயைப் பிளந்து கொண்டிருந்தது. கீழே பார்த்தால் அதலபாதாளப் படுகுழியாகத் தோன்றியது. ஏறி வந்த படிக்கட்டு எங்கேயோ ஓரிடத்தில் இருக்கத்தான் வேண்டும். அதைக் கண்டுபிடிக்க வந்தியத்தேவன் மேலும் முயன்றான். தேடித் தேடி அலைந்தான். அப்படி அலையும் போது ஓரிடத்தில் சுவர் ஓரமாக ஒரு குப்பல் தங்கக் காசுகள் கிடப்பதைக் கண்டான். அந்தக் குப்பலின் மீது ஏதோ வலை பின்னியது போலிருந்தது. உற்றுப் பார்த்தபோது, அக்குவியலின் பேரில் சிலந்தி வலை கட்டியிருப்பதாகத் தெரிந்தது. சிலந்தியின் வலை அவனது சிந்தனையைத் தூண்டியது.
பெரியோர்கள் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசைகளைச் சிலந்தி வலைக்கு ஒப்பிட்டிருக்கிறார்கள். வலையை விரித்துக் கொண்டு சிலந்தி காத்திருக்கிறது. எங்கிருந்தோ பறந்து வந்து ஈ அதில் அகப்பட்டுக் கொள்கிறது. பிறகு சிறிது சிறிதாகச் சிலந்தி ஈயை இழுத்து விழுங்குகிறது. மூன்று வித ஆசைகளும் அப்படித்தான். மனிதன் வழி தவறிச் சென்று அந்த ஆசை வலைகளில் விழுந்து அகப்பட்டுக் கொள்கிறான்; அப்புறம் மீளுவதில்லை! மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்று ஆசைகளின் இயல்பையும் அன்று ஒரே நாளில் நாம் அனுபவித்தாகி விட்டது. நந்தினி என்னும் பழுவூர் இளையராணி தன்னுடைய வலையில் நம்மை அகப்படுத்தப் பார்த்தாள். பழைய வாணர்குல ராஜ்யத்தை அடையலாம் என்னும் மண்ணாசையும் காட்டினாள்.கடைசியாக, இங்கே இந்தப் பயங்கரமான பொன்னாசைப் பூதம் நம்மை அடியோடு விழுங்கப் பார்க்கிறது. முதலாவது இரண்டிலிருந்தும் தப்பினோம், இந்த மூன்றாவது அபாயத்திலிருந்தும் தப்ப வேண்டும். நமக்கு எதற்காக இந்த வம்பெல்லாம்? இராஜ்யம் எதற்கு? செல்வம் எதற்கு? பெண்களின் கூட்டுறவுதான் எதற்காக? வானத்தைக் கூரையாகப் பெற்ற அகண்டமான பூமியே நமது அரண்மனை! “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பண்டைத் தமிழ் நாட்டுப் பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்களே! எல்லா ஊரும் நம்முடைய ஊர்தான். எல்லா மனிதர்களும் நம்முடைய உறவினர்கள் தான். ஊர் ஊராகப் போக வேண்டியது; புதுவெள்ளம் பொங்கி வரும் நதிகளையும், புதிய இலைகள் தளிர்த்து விளங்கும் மரங்களையும், பல வர்ணப் பட்சிகளையும், மகான்களையும், மயில்களையும் மலைகளையும் மலைகளின் சிகரங்களையும், வானத்தையும், மேகத்தையும், கடலையும் கடல் அலைகளையும் பார்த்துக் களிக்க வேண்டியது; பசிக்கு உணவு கிடைக்கின்ற இடத்திலே உண்ண வேண்டியது; உறக்கம் வந்த இடத்தில் உறங்க வேண்டியது! ஆகா! இதுவல்லவா இன்ப வாழ்க்கை! எளிதில் கிடைக்கக்கூடிய இத்தகைய ஆனந்த வாழ்க்கையை விட்டு விட்டு, தொல்லைகளும் சூழ்ச்சிகளும் ஆசைகளும் அபாயங்களும் நிறைந்த வாழ்க்கையை ஏன் மேற்கொள்ள வேண்டும்? எப்படியாவது இந்த நிலவறையை விட்டு இப்போது வெளியேறி விட்டால் போதும்; பிறகு இந்த இருள் மாளிகையையும் தஞ்சாவூர்க் கோட்டையையும் விட்டு வெளியேறி விடவேண்டும். பின்னர், இத்தகைய தொல்லைகளில் என்றைக்கும் அகப்பட்டுக் கொள்ளவே கூடாது…..
ஆகா! கதவு திறந்து மூடும் ஓசை!… மறுபடியும் காலடி ஓசை!… இன்றைய இரவின் அதிசயங்களுக்கு முடிவே கிடையாது போலும்! அதிசயங்களுக்கும் அளவில்லை! பயங்கரங்களுக்கும் எல்லையில்லை! இம்முறை வெகு தூரத்திலிருந்து அந்தக் காலடிச் சத்தங்கள் கேட்டன. இரண்டு பக்கங்களிலிருந்தும் வருவதாகத் தோன்றியது. வந்தியத்தேவன் காது கொடுத்துக் கவனமாகக் கேட்டான். பொக்கிஷ நிலவறையில் நாலுபுறமும் சூழ்ந்திருந்த இருளைக் கிழித்துக் கொண்டு பார்ப்பவனைப் போல் உற்றுப் பார்த்தான். சிறிது நேரத்துக்கெல்லாம் அவன் எதிர்பார்த்தது போலவே அபூர்வமான காட்சியைக் கண்டான்.
கூத்து மேடையிலிருந்து மிகத் தொலைவிலே உட்கார்ந்திருப்பவனுக்கு மேடையில் தோன்றும் காட்சிகள் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது வந்தியத்தேவன் அப்போது கண்ட காட்சி. அவன் அச்சமயம் இருந்த இடத்துக்கு உயரமான ஓர் இடத்தில், தொலை தூரம் என்று தோன்றிய தூரத்தில் அது நடந்தது. கூத்து மேடையின் ஒரு பக்கத்திலிருந்து ஒரு தீவர்த்தி வந்தது. இன்னொருபுறத்துப் பக்கம் படுதாவை நீக்கிக் கொண்டு மற்றொரு தீவர்த்தி வந்தது. தீவர்த்திகள் இரண்டும் நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தன. ஒரு தீவர்த்தி வெளிச்சத்தில் இரு நெடிய கரிய உருவங்கள் தெரிந்தன. இன்னொரு தீவர்த்தியின் ஒளியில் மற்றும் இரு உருவங்கள் காணப்பட்டன. அவற்றில் ஒற்று நெடிய கம்பீரமான உருவம்; மற்றொன்று சிறிது குட்டையான மெல்லிய வடிவம். இருதரப்பு உருவங்களும் ஒன்றையொன்று நெருங்கி வந்து கொண்டிருந்தன. வந்தியத்தேவன் மேலும் கண் விழிகள் பிதுங்கும்படி உற்றுப் பார்த்து அந்த உருவங்கள் யாருடையவை என்பதை ஒருவாறு தெரிந்து கொண்டான். இடது பக்கத்திலிருந்து வந்த இரு உருவங்கள் மதுராந்தகத்தேவரை அழைத்துச் சென்ற கந்தமாறனும் காவலனும்; வலது புறத்திலிருந்து வந்த உருவங்கள் பெரிய பழுவேட்டரையரும் அவருடைய இளையராணி நந்தினி தேவியும்.
இந்த இரு கோஷ்டியாரும் சந்திக்கும் போது என்ன நடக்கும்? ஏதாவது விபரீதமாக நடக்குமா? அல்லது ஒருவருக்கொருவர் வழி விட்டு விட்டுச் சாவதானமாகப் போய் விடுவார்களா?… வந்தியத்தேவன் அந்தப் பரபரப்பில் மூச்சு விடுவதைக் கூட நிறுத்திக் கொண்டு அத்தனை கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
இரு கோஷ்டியாரும் சந்தித்தார்கள். அவர்கள் தடுமாறித் தயங்கி நின்றதிலிருந்து இரு சாராருக்கும் அச்சந்திப்பு வியப்பையும் திகைப்பையும் அளித்திருக்க வேண்டுமென்று தோன்றியது. ஆனால் விபரீதம் ஒன்றும் நேர்ந்துவிடவில்லை. பழுவேட்டரையர் கந்தமாறனைப் பார்த்து ஏதோ கேட்டார். அதற்குக் கந்தமாறன் ஏதோ விடை சொன்னான். கேள்வியும் விடையும் என்னவென்பது வந்தியத்தேவனின் காதில் விழவில்லை. பிறகு, பழுவேட்டரையர் கையினால் சமிக்ஞை செய்து சுரங்க வழியின் படிக்கட்டைச் சுட்டிக்காட்டினார். கந்தமாறன் அவரைப் பணிவுடன் வணங்கினான். வணங்கி விட்டுப் படிக்கட்டில் இறங்கினான். அவனுக்குப் பின் கையில் தீவர்த்தியுடன் வந்த காவலனைப் பார்த்துப் பழுவேட்டரையர் ஏதோ சமிக்ஞை செய்தார். அவனும் மறு மொழி சொல்லாமல் ஒரு கையினால் வாயைப் பொத்திக் கொண்டு வணங்கினான். பிறகு கந்தமாறனைத் தொடர்ந்து படிக்கட்டில் இறங்கினான். பழுவேட்டரையரும் இளையராணியும் இடதுபக்கம் நோக்கிச் சென்றார்கள்.
நிழலாட்டத்தையும் பொம்மலாட்டத்தையும் ஒத்த மேற்கூறிய நிகழ்ச்சிகள் எல்லாம் சில கண நேரத்தில் நடந்து விட்டன. இவ்வளவும் சுரங்க வழியில் இறங்கும் படிக்கட்டின் அருகில் நிகழ்ந்தன என்பதை வந்தியத்தேவன் கவனித்துக் கொண்டான். ஆகா! நாம் வழியில் எங்கும் நில்லாமல் இந்த நிலவறையில் வந்து சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று! நாம் மட்டும் அந்த இரு கோஷ்டிக்கும் நடுவில் அகப்பட்டுக் கொண்டிருந்தால் நம் கதி என்னவாகியிருக்கும்? ஏதோ அந்த மட்டுக்கும் பிழைத்தோம். தப்பித்துக் கொள்ள வழி என்ன? கந்தமாறன் மதுராந்தகத்தேவரை அழைத்து வந்த சுரங்க வழியில் திரும்பிச் செல்கிறான் என்பதில் ஐயமில்லை. அந்த வழியிலிருந்து நாம் சிறிது விலகி இந்தப் பொக்கிஷ நிலவறைக்கு வந்திருக்க வேண்டும். இப்போது கந்தமாறன் போகும் வழியைத் தொடர்ந்து சென்றால், எப்படியும் வெளியேறும் வாசலைக் கண்டு கொள்ளலாம். பிறகு ஏதேனும் உபாயம் செய்து தப்பிக்கலாம். அப்படி அவசியம் நேர்ந்தால், கந்தமாறனிடமே உதவி கேட்கலாம். இல்லாவிட்டால் அவனையும் அந்தக் காவலனையும் ஒரு கை பார்த்து விட்டுத் தப்பிச் செல்லலாம். எனவே, கந்தமாறனை இப்போது பின் தொடரலாம்.
முதலில், தீவர்த்தி வெளிச்சம் நிலவறைக்கு அருகில் வருவது போலிருந்தது. வந்தியத்தேவன் மூச்சைப் பிடித்துக் கொண்டு நின்றான். பிறகு அவ்வெளிச்சம் அகன்று செல்வது போலிருந்தது. அதற்குள் வந்தியத்தேவன் சுற்றுமுற்றும் பார்த்தான். அந்த நிலவறைக்குள் பிரவேசித்த படிக்கட்டு எது என்பதை அறிந்து கொண்டான். அதன் வழியாகக் கீழே இறங்கி மீண்டும் மேலேறினான். தீவர்த்தி வெளிச்சத்தை விட்டு விடாமல், அதிகமாகவும் நெருங்காமல், காலடி ஓசை கேட்காதபடி மெதுவாக அடிவைத்து நடந்து சென்றான். வளைந்தும் வெளிந்தும் சுற்றியும் சுழன்றும் ஏறியும் இறங்கியும் சென்ற அந்தச் சுரங்கப் பாதையில் நாமாக இருளில் நடந்து வழி கண்டுபிடித்துப் போவது எவ்வளவு அசாத்தியமான காரியம்! வாழ்க கந்தமாறன்! அவன் இப்போது தன்னை அறியாமல் நமக்குச் செய்யும் உதவிக்கு எப்போது என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்!…
அதற்கு ஒரு சந்தர்ப்பம் அவ்வளவு சீக்கிரத்திலேயே கிடைக்கும் என்று வந்தியத்தேவன் எண்ணவேயில்லை!…
சுரங்கப் பாதையின் முடிவு வந்து விட்டது. எதிரில் ஒரு பெருஞ்சுவர் தெரிந்தது. அதில் ஒரு வாசலோ, கதவோ இருக்கும் என்று யாரும் கருத முடியாது. ஆயினும் இருக்கத்தான் வேண்டும்! சுரங்கப் பாதைக்கு ஒரு இரகசிய வாசல் இருந்தே தீர வேண்டுமல்லவா?
காவலன் தன் வலது கையிலிருந்த தீவர்த்தியை இடது கைக்கு மாற்றிக் கொள்கிறான். வலது கையினால் சுவரில் ஓரிடத்தில் கைவைத்து ஏதோ செய்கிறான். திருகாணியைத் திருகுவது போல் திருகுகிறான். சுவரில் மெல்லிய கோடு போல் ஒரு பிளவு தோன்றுகிறது. அப்பிளவு வரவரப் பெரிதாகி வருகிறது. ஓர் ஆள் நுழையும்படியான பிளவாகிறது. காவலன் ஒரு கையினால் அதைச் சுட்டிக்காட்டுகிறான். கந்தமாறன் அவனிடம் ஏதோ சொல்லிவிட்டுச் சுவரில் தோன்றிய பிளவில் ஒரு காலை வைக்கிறான். ஒரு கால் இன்னும் சுரங்கப் பாதையிலேதான் இருக்கிறது. இப்பொழுது அவனுடைய முதுகுப் பிரதேசம் முழுதும் புலனாகிறது!
ஆகா! இது என்ன? இந்தக் காவலன் என்ன செய்கிறான்? அரையில் செருகியிருந்த கூரிய வளைந்த சிறு கத்தியை எடுக்கிறானே? கடவுளே! கந்தமாறனுடைய முதுகில் ஓங்கிக் குத்தி விட்டானே! படு பாதகன்! ஒருவனுக்குப் பின்னாலிருந்து முதுகில் குத்தும் சண்டாளன்!…
வந்தியத்தேவன் தான் ஒதுங்கி நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து வெளி வந்தான். ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தான்! அந்தச் சத்தத்தைக் கேட்டுக் காவலன் திரும்பினான்! தீவர்த்தியின் ஒளி வந்தியத்தேவனின் கோபாவேச முகத்தில் விழுந்தது.

இரா. கிருஷ்ணமூர்த்தி ( கல்கி) மூலம் மேலும் புத்தகங்கள்

57
கட்டுரைகள்
பொன்னியின் செல்வன்- முதல் பாகம்(புது வெள்ளம்)
0.0
பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. சோழர்களின் பொற்கால ஆட்சியைப் பற்றி சரித்திர நூல்களில் இருந்து தெரிந்துகொண்டதைக் காட்டிலும், பொன்னியின் செல்வனில் இருந்தே பெரும்பாலான தமிழர்கள் ஆர்வத்துடன் கற்றிருக்கிறார்கள். தமிழர்களின் உயிரோடும் உணர்வுகளோடும் ஒன்றிக் கலந்துவிட்ட பொன்னியின் செல்வனை திரும்பத் திரும்ப வாசியுங்கள். அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துங்கள்
1

அத்தியாயம் 1 - ஆடித்திருநாள்

5 December 2023
1
0
0

ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்

2

அத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி

5 December 2023
0
0
0

ஏரிக் கரையிலிருந்து கீழிறங்கித் தென்திசை சென்ற பாதையில் குதிரையைச் செலுத்தியபோது வந்தியத்தேவனுடைய உள்ளம் ஏரி அலைகளின் மீது நடனமாடிய படகைப் போல் ஆனந்தக் கூத்தாடியது. உள்ளத்தின் உள்ளே மறைந்து கிடந்த குத

3

அத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்

5 December 2023
0
0
0

சில சமயம் சிறிய நிகழ்ச்சியிலிருந்து பெரிய சம்பவங்கள் விளைகின்றன.வந்தியத்தேவன் வாழ்க்கையில் அத்தகைய ஒரு சிறிய நிகழ்ச்சி இப்போது நேர்ந்தது. சாலையோரத்திலே நின்று பழுவேட்டரையரின் பரிவாரங்கள் போவதை வந்தியத

4

அத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை

6 December 2023
0
0
0

இத்தனை நேரம் இளைப்பாறியிருந்த வல்லவரையனுடைய குதிரை இப்போது நல்ல சுறுசுறுப்பைப் பெற்றிருந்தது; ஒரு நாழிகை நேரத்தில் கடம்பூர்ச் சம்புவரையர் மாளிகை வாசலை அடைந்துவிட்டது. அந்தக் காலத்துச் சோழ நாட்டுப் பெர

5

அத்தியாயம் 5 - குரவைக் கூத்து

6 December 2023
0
0
0

அந்தப்புரத்திலிருந்து நண்பர்கள் இருவரும் வெளியே வந்தார்கள். உள்ளேயிருந்து, ஒரு பெண் குரல், “கந்தமாறா! கந்தமாறா!” என்று அழைத்தது. “அம்மா என்னைக் கூப்பிடுகிறாள், இங்கேயே சற்று இரு! இதோ வந்து விடுகிறேன்”

6

அத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்

6 December 2023
0
0
0

குரவைக் கூத்துக்கும் வெறியாட்டுக்கும் பின்னர், வந்திருந்த விருந்தினருக்குப் பெருந்தர விருந்து நடைபெற்றது. வல்லவரையனுக்கு விருந்து ருசிக்கவில்லை. அவன் உடம்பு களைத்திருந்தது; உள்ளம் கலங்கியிருந்தது. ஆயி

7

அத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்

7 December 2023
1
0
0

அரசுரிமையைப் பற்றிப் பழுவேட்டரையரின் வார்த்தைகளைக் கேட்டதும் வந்தியத்தேவன் உடனே ஒரு முடிவுக்கு வந்தான். அரசுரிமையைப் பற்றி இவர்கள் என்ன பேசப் போகிறார்கள்? இவர்கள் யார் பேசுவதற்கு? இந்தக் கூட்டத்தில் ந

8

அத்தியாயம் 8 - பல்லக்கில் யார்?

7 December 2023
0
0
0

சற்று நேரம் அந்தக் கூட்டத்தில் ஒருவருக்கொருவர் ஏதோ பேசி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். பல குரல்கள் ஒருங்கே கலந்து ஒலித்தபடியால் வந்தியத்தேவன் காதில் ஒன்றும் தெளிவாக விழவில்லை. சம்புவரையர் உரத்த

9

அத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு

7 December 2023
0
0
0

பாலாற்றுக்கு வடக்கேயுள்ள வறண்ட பிரதேசங்களிலேயே வந்தியத்தேவன் அதுகாறும் தன் வாழ்நாளைக் கழித்தவன் ஆகையால் ஆற்று வெள்ளத்தில் நீந்துவதற்கு அவனுக்குத் தெரியாமலிருந்தது. ஒரு சமயம் வடபெண்ணைக் கரையில் எல்லைக்

10

அத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்

8 December 2023
0
0
0

குடகு நாட்டில் பிறந்து வளர்ந்த பொன்னி நதி கன்னிப் பருவம் கடந்ததும் தன் மணாளனாகிய சமுத்திர ராஜனிடம் சென்றடைய விரும்பினாள். காடும் மேடும் கடந்து பாறைகளையும் பள்ளங்களையும் தாண்டிக் கொண்டு விரைந்து சென்றா

11

அத்தியாயம் 11 - திடும்பிரவேசம்

8 December 2023
1
0
0

இந்நாளில் கும்பகோணம் என்ற பெயரால் ஆங்கில அகராதியிலேகூட இடம் பெற்றிருக்கும் நகரம், நம்முடைய கதை நடந்த காலத்தில் குடந்தை என்றும் குடமூக்கு என்று வழங்கப்பட்டு வந்தது. புண்ணிய ஸ்தல மகிமையையன்றி, ‘குடந்தை

12

அத்தியாயம் 12 - நந்தினி

8 December 2023
1
0
0

கொள்ளிட கரையில் படகில் ஏற்றி நாம் விட்டு விட்டு வந்த வந்தியத்தேவன் குடந்தை சோதிடரின் வீட்டுக்கு அச்சமயம் எப்படி வந்து சேர்ந்தான் என்பதை சொல்ல வேண்டும் அல்லவா? ஆழ்வார்க்கடியான் படகில் ஏறியதை ஆட்சே

13

அத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்

8 December 2023
2
0
0

இளவரசிகளின் ரதம் கண்ணுக்கு மறைந்த பிறகு, சோதிடர் வந்தியத்தேவனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். தம்முடைய ஆஸ்தான பீடத்தில் அமர்ந்தார். சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்த அவ்வாலிபனையும் உட்காரச் சொன்

14

அத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை

9 December 2023
1
0
0

குடந்தை நகரிலிருந்து தஞ்சாவூர் செல்வோர் அந்தக் காலத்தில் அரிசலாற்றங்கரையோடாவது காவேரிக் கரையின் மேலாவது சென்று, திருவையாற்றை அடைவார்கள். அங்கிருந்து தெற்கே திரும்பித் தஞ்சாவூர் போவார்கள். வழியிலுள்ள க

15

அத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்

9 December 2023
0
0
0

இளையபிராட்டி குந்தவைதேவியும் கொடும்பாளூர் இளவரசி வானதியும் ரதத்தில் ஏறிக் குடந்தை நகரை நோக்கிச் சென்றார்கள் அல்லவா? அதன் பிறகு படகில் இருந்த பெண்கள் என்ன பேசினார்கள், என்ன செய்தார்கள் என்பதை நாம் சிறி

16

அத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்

9 December 2023
0
0
0

இன்றைக்குச் சுமார் (1950ல் எழுதப்பட்டது) 980 ஆண்டுகளுக்கு முன்னால் கோ இராசகேசரிவர்மர் பராந்தக சுந்தர சோழ மன்னர் தென்னாட்டில் இணையில்லாத சக்கரவர்த்தியாக விளங்கி வந்தார். நம் கதை நடக்கும் காலத்துக்குப்

17

அத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது!

9 December 2023
0
0
0

ஒப்புவமையில்லாத தன் சகோதரன் அருள்மொழிவர்மனுக்குத் தகுந்த மணமகள் வானதிதான் என்று குந்தவை தீர்மானித்திருந்தாள்.ஆனால் வானதியிடம் ஒரே ஒரு குறை இருந்தது; அது அவளுடைய பயந்த சுபாவந்தான். வீராதி வீரனை மணக்கப்

18

அத்தியாயம் 18 - இடும்பன்காரி

11 December 2023
0
0
0

கொள்ளிடத்துப் பரிசில் துறையில் ஆழ்வார்க்கடியான்நம்பி என்னும் திருமலையப்பனை விட்டு விட்டு வந்துவிட்டோம். அந்த வீர வைஷ்ணவரை இப்போது கொஞ்சம் கவனிக்கலாம். வந்தியத்தேவன் குதிரை ஏறிக் குடந்தை நகர் நோக்கிச்

19

அத்தியாயம் 19 - ரணகள அரண்யம்

11 December 2023
0
0
0

பழந்தமிழ்நாட்டில் போர்க்களத்தில் உயிர்துறந்த மகாவீரர்களின் ஞாபகமாக வீரக் கல் நட்டுக் கோயில் எடுப்பது மரபு. வெறும் கல் மட்டும் ஞாபகார்த்தமாக நாட்டியிருந்தால் ‘நடுகற் கோயில்’ என்று வழங்குவார்கள். அத்துட

20

அத்தியாயம் 20 - "முதற் பகைவன்!"

11 December 2023
0
0
0

தக்க சமயத்தில் ஆந்தை செய்த உதவியை ஆழ்வார்க்கடியான் மனத்திற்குள் பெரிதும் பாராட்டினான். ஏனெனில், காட்டின் மத்தியில் கூடியிருந்த சதிகாரர்கள், சிறகடித்துக் கொண்டு உறுமிய ஆந்தையைப் பார்த்து அதனால் ஏற்பட்ட

21

அத்தியாயம் 21 - திரை சலசலத்தது!

11 December 2023
0
0
0

ஒரே சமயத்தில் ஒருவனுக்குள்ளே இரண்டு மனங்கள் இயங்க முடியுமா? முடியும் என்று அன்றைக்கு வந்தியத்தேவனுடைய அனுபவத்திலிருந்து தெரிய வந்தது. சோழ வள நாட்டிற்குள்ளேயே வளம் மிகுந்த பிரதேசத்தின் வழியாக அவன் போய

22

அத்தியாயம் 22 - வேளக்காரப் படை

11 December 2023
0
0
0

முதலில், பல்லக்கின் வெளிப்புறத்திரை – பனை மரச் சின்னம் உடைய துணித் திரை – விலகியது. பின்னர் உள்ளிருந்த பட்டுத் திரையும் நகரத் தொடங்கியது. முன்னொரு தடவை வல்லவரையன் பார்த்தது போன்ற பொன் வண்ணக் கையும் தெ

23

அத்தியாயம் 23 - அமுதனின் அன்னை

11 December 2023
0
0
0

வேளக்கார வீரர் படை பெரிய கடைவீதியின் வழியாகப் போயிற்று. படையின் கடைசியில் சென்ற சில வீரர்கள் கடைத்தெருவில் சில திருவிளையாடல்களைப் புரிந்தார்கள். ஒருவன் ஒரு பட்சணக் கடையில் புகுந்து ஒரு கூடை நிறைய அதிர

24

அத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்

11 December 2023
0
0
0

இரவெல்லாம் கட்டையைப் போல் கிடந்து தூங்கிவிட்டுக் காலையில் சூரியன் உதித்த பிறகே வந்தியத்தேவன் துயிலெழுந்தான். விழித்துக் கொண்ட பிறகும் எழுந்திருக்க மனம் வராமல் படுத்திருந்தான். மேலக்காற்று விர்ரென்று வ

25

அத்தியாயம் 26 - "அபாயம்! அபாயம்!"

11 December 2023
1
0
0

ஆஸ்தான மண்டபத்தில் புலவர்களுக்கு முன்னதாகவே வந்தியத்தேவன் பிரவேசித்தான். அங்கே ஓர் உயர்ந்த சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருப்பவர் தான் சின்னப் பழுவேட்டரையராயிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டான்.

26

அத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்

11 December 2023
0
0
0

பராக்! பராக்! இதோ வருகிறார்கள் புலவர் பெருமக்கள்! கவிஞர் சிகாமணிகள்! தமிழ்ப் பெருங்கடலின் கரை கண்டவர்கள்! அகத்தியனாரின் வழி வந்தவர்கள்! தொல்காப்பியம் முதலிய சங்க நூல்களைக் கரைத்துக் குடித்தவர்கள்! சில

27

அத்தியாயம் 28 - இரும்புப் பிடி

11 December 2023
0
0
0

திடீரென்று பொங்கிய புது வெள்ளம் போன்ற ஆச்சரியத்தின் வேகம் சிறிது குறைந்ததும், புலவர் தலைவரான நல்லன் சாத்தனார், “பிரபு! அப்படியானால், இந்தப் பாடலை இயற்றிய கவி…” என்று தயங்கினார். “உங்கள் முன்னால், கா

28

அத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே

12 December 2023
1
0
0

பனை இலச்சினை தாங்கிய மோதிரம் கதைகளில் வரும் மாய மோதிரத்தைப் போல் அபாரமான மந்திர சக்தி வாய்ந்ததாயிருந்தது. காலை நேரத்தில் பால், தயிர் விற்பவர்கள், பூக்கூடைக்காரர்கள், கறிகாய் விற்பவர்கள், பழக் கடைக்கார

29

அத்தியாயம் 29 - "நம் விருந்தாளி"

12 December 2023
1
0
0

புலவர்கள் சென்ற பிறகு அரண்மனை மருத்துவர் சக்கரவர்த்திக்கு மருந்து கலந்து கொண்டு வந்தார். மலையமான் மகளான பட்டத்தரசி அதைத் தன் திருக்கரத்தால் வாங்கிக் கணவருக்குக் கொடுத்தாள். அதுவரை பொறுமையாய்க் காத்த

30

அத்தியாயம் 30 - சித்திர மண்டபம்

12 December 2023
1
0
0

சின்னப் பழுவேட்டரையர் வந்தியத்தேவனைத் தம்முடன் ஆஸ்தான மண்டபத்துக்கு அழைத்துப் போனார். சக்கரவர்த்தியிடம் அவன் கூறியது என்ன என்பதைப் பற்றி அவன் சொன்ன சமாதானம் அவருக்கு அவ்வளவாகப் பூரண திருப்தி அளிக்கவில

31

அத்தியாயம் 31 - "திருடர்! திருடர்!"

12 December 2023
0
0
0

விஜயாலய சோழர் முதல், இரண்டாம் பராந்தகராகிய சுந்தர சோழர் வரையில் சோழ மன்னர்களின் உயிர்ச் சித்திரங்களை நம் வீரன் வந்தியத்தேவன் பார்த்து மகிழ்ந்தான். ஆஹா! இவர்களில் ஒவ்வொருவரும் எப்பேர்ப்பட்டவர்கள்? எத்த

32

அத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை!

12 December 2023
0
0
0

கோட்டைத் தளபதியின் இரு ஆட்களும் தன் இரண்டு பக்கத்தில் வர, வந்தியத்தேவன் தஞ்சைக் கோட்டையைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டான். தான் தப்பித்து ஓடிவிடாமல் பார்த்துக் கொள்ளவே அவர்கள் தன்னுடன் வருகிறார்கள் எ

33

அத்தியாயம் 34 - லதா மண்டபம்

12 December 2023
0
0
0

அடர்ந்த மாந்தோப்புக்கிடையே சென்ற ஒற்றையடிப் பாதையின் வழியாக அம்மங்கை விடுவிடுவென்று நடந்து செல்ல, வந்தியத்தேவனும் விரைவாகத் தொடர்ந்து சென்றான். மரஞ் செடிகளின் மீது மோதிக் கொள்ளாமல், அந்த இருளில் நடந்த

34

அத்தியாயம் 32 - பரிசோதனை

13 December 2023
0
0
0

சின்னப் பழுவேட்டரையரைக் கண்டதும் வந்தியத்தேவன் சண்டையை நிறுத்திவிட்டு அவரை நோக்கி நடந்தான். காவலர்கள் எழுந்து ஓடி வந்து அவனைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களை அவன் சிறிதும் இலட்சியம் செய்யாமல் நாலு அட

35

அத்தியாயம் 35 - மந்திரவாதி

13 December 2023
0
0
0

தூரத்தில் பேரிகைகளின் பெருமுழக்கம் கேட்டது. எக்காளங்கள் சப்தித்தன. மனிதர்களின் குரல்கள் ஜயகோஷம் செய்தன. கோட்டைக் கதவுகள் திறந்து மூடிக் கொள்ளும் சத்தமும், யானைகள் குதிரைகளின் காலடிச் சத்தமும் எழுந்தன.

36

அத்தியாயம் 36 - "ஞாபகம் இருக்கிறதா

14 December 2023
0
0
0

லதா மண்டபத்தின் தோட்ட வாசலண்டை வந்து நின்று நந்தினி மூன்று தடவை கையைத் தட்டினாள். அப்போது அவள் முகத்தில் படிந்திருந்தது பயத்தின் ரேகையா அல்லது மரங்களின் இருண்ட நிழலா என்று சொல்ல முடியாது. தோட்டத்த

37

அத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின!

14 December 2023
0
0
0

பழுவூர்ச் சகோதரர்கள் மீது தஞ்சைபுரிவாசிகள் தனிப்பட்ட அபிமானம் வைத்திருந்தார்கள். அந்தப் பழைய நகருக்குப் புதிய பெருமையும் செல்வாக்கும் அளித்தவர்கள் பழுவேட்டரையர்கள் அல்லவா?  யானை, குதிரை, ஒட்டகைகளுடன்

38

அத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்

14 December 2023
0
0
0

பெரிய பழுவேட்டரையர் கடைசியாகத் தமது மாளிகைக்குத் திரும்பிய போது நள்ளிரவு கழிந்து மூன்றாவது ஜாமம் ஆரம்பமாகியிருந்தது. வீதிப் புழுதியை வாரி அடித்துக் கொண்டு சுழன்று சுழன்று அடித்த மேலக் காற்றைக் காட்டில

39

அத்தியாயம் 39 - உலகம் சுழன்றது!

14 December 2023
0
0
0

முதிய பிராயத்தில் தாம் கலியாணம் செய்து கொண்டது பற்றிப் பலர் பலவிதமாகப் பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் பழுவேட்டரையர் அறிந்திருந்தார். அப்படி நிந்தனையாகப் பேசியவர்களில் குந்தவைப் பிராட்டியும் ஒருத்தி என்

40

அத்தியாயம் 40 - இருள் மாளிகை

14 December 2023
0
0
0

காணாமற்போன வந்தியத்தேவன் என்ன ஆனான் என்பதை இப்போது நாம் கவனிக்கலாம். இருளடர்ந்த மாளிகைக்கு அருகில் சென்று அவன் மறைந்து நின்றான் என்பதைப் பார்த்தோம் அல்லவா? மந்திரவாதியும் நந்தினியும் என்ன பேசிக் கொள்க

41

அத்தியாயம் 41 - நிலவறை

14 December 2023
0
0
0

இருண்ட சுரங்கப் பாதையில் வந்தியத்தேவன் காலை ஊன்றி வைத்து, விழுந்து விடாமல் நடந்தான். படிகள் கொஞ்ச தூரம் கீழே இறங்கின. பிறகு சமநிலமாயிருந்தது. மறுபடியும் படிகள். மீண்டும் சமதரை. இரண்டு கைகளையும் எட்டி

42

அத்தியாயம் 42 - நட்புக்கு அழகா?

15 December 2023
0
0
0

வந்தியத்தேவனுடைய முதலாவது எண்ணம், எப்படியாவது கந்தமாறனைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான். ஆனால் அவனைக் காப்பாற்றும் பிரயத்தனம் முதலில் செய்தால், அவனுடைய கதிதான் நமக்கும் ஏற்படும். ஆகையால் இந்தக் கொடூரக

43

அத்தியாயம் 43 - பழையாறை

15 December 2023
0
0
0

வந்தியத்தேவன் வழியில் பல கஷ்டங்களுக்கு உள்ளாகி, பல அபாயங்களுக்குத் தப்பிப் பழையாறை நகருக்கு வந்து சேர்வதற்கு முன்னால், நம்முடன் பழையாறைப் பதிக்கு விஜயம் செய்யும்படி நேயர்களை அழைக்கிறோம். அரிசிலாற்று

44

அத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை!

15 December 2023
0
0
0

மாமல்லபுரத்து மகா சிற்பிகளின் பரம்பரையில் தோன்றிய சிற்பக் கலைஞர் ஒருவர் இப்போது முன் வந்தார். புதிய முறையில் கருங்கற்றளி அமைப்பதற்கு அவருடைய மனோதர்ம கற்பனைப்படி சிறிய பொம்மைக் கோயில் ஒன்று அவர் செய்து

45

அத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்

15 December 2023
0
0
0

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகால் பெருவளத்தான் என்னும் சோழ மன்னன் காவேரி நதிக்கு இருபுறமும் கரை எடுத்தான். வெகு காலம் அந்தக் கரைகள் நல்ல நிலைமையில் இருந்து காவேரி ஆற்றைக் கட்டுக்குள் வைத்திருந்த

46

அத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு

15 December 2023
0
0
0

சோழகுல மூதாட்டியின் சந்நிதியிலிருந்து ஆழ்வார்க்கடியான் இளையபிராட்டியின் மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்றான். வழியில் பழையாறை வீதிகளில் கண்ட காட்சிகள் அவனுக்கு மிக்க உற்சாகத்தை அளித்தன. கண்ணன் பிறந்த தி

47

அத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்

15 December 2023
0
0
0

ஆழ்வார்க்கடியான் அரசிளங்குமரியைப் பார்த்துவிட்டு அவனுடைய தமையனார் ஈசான சிவ பட்டரின் வீட்டுக்குச் சென்றான். அவருடைய வீடு வடமேற்றளி சிவன் கோயிலுக்கு மிக அருகில் இருந்தது. அரண்மனையிலிருந்து அரைக் காத தூர

48

அத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்

15 December 2023
0
0
0

கடவுள் படைத்த ஆதி மனிதன் ஒரு மலையின் சாரலில் வசித்தான். மழைக்கும், காற்றுக்கும் அவனுக்கு மலைக்குகை அடைக்கலம் தந்தது. வன விருட்சங்கள் அவனுக்குத் தேவையான கனி வர்க்கங்களை உணவாக அளித்தன. காட்டு மிருகங்கள்

49

அத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை!

15 December 2023
0
0
0

குந்தவைப் பிராட்டி வந்தியத்தேவன் நீட்டிய ஓலையைப் பெற்றுக் கொண்டு படித்தாள். அதுவரையில் நெரிந்த புருவங்களுடன் சுருங்கியிருந்த அவள் முகம் இப்போது மலர்ந்து பிரகாசித்தது. வல்லவரையனை நிமிர்ந்து நோக்கி, “

50

அத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை

16 December 2023
0
0
0

மறு நாள் காலையில் சூரிய பகவான் உதயமாகி உலகத்தை ஒளிமயமாகச் செய்து கொண்டிருந்தார். சூரியனுடைய செங்கிரணங்கள் பழையாறை அரண்மனைகளின் பொற்கலசங்களின் மீது விழுந்து தகதகா மயமாய்ச் செய்து கொண்டிருந்தன. குந்தவைப

51

அத்தியாயம் 51 - மாமல்லபுரம்

16 December 2023
0
0
0

நேயர்கள் ஏற்கெனவே நன்கு அறிந்துள்ள மாமல்லபுரத்துக்கு இப்போது அவர்களை அழைத்துச் செல்ல விரும்புகிறோம். மகேந்திர பல்லவரும் மாமல்ல நரசிம்மரும் இத்துறைமுகப்பட்டினத்தை அற்புதச் சிற்பவேலைகளின் மூலம் ஒரு சொ

52

அத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்

16 December 2023
0
0
0

மாமல்லபுரத்துக் கடற்கரையில் சிறிய சிறிய கற்பாறைகள் பல உண்டு. சில சமயம் கடல் பொங்கி வந்து அப்பாறைகளின் மீது அலைகள் மோதிக் கொண்டிருக்கும். சில சமயம் கடல் பின்வாங்கிச் சென்று அப்பாறைகள் உலருவதற்கு அவகாசம

53

அத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்

16 December 2023
0
0
0

அறிவைப் போலவே ஆற்றலும் ஆற்றலைப் போல அனுபவமும் பெற்று முதிர்ச்சி அடைந்திருந்த திருக்கோவலூர் மலையமான் அரசர் கடைசியாகக் கூறிய வார்த்தைகளைக் கேட்டு, ஆதித்த கரிகாலன் மூர்ச்சையடைந்து விழுந்து விடவில்லைதான்!

54

அத்தியாயம் 54 - "நஞ்சினும் கொடியாள்"

16 December 2023
0
0
0

மாமல்லபுரத்தில் பழைய பல்லவ சக்கரவர்த்திகளின் மாளிகை ஒன்றில் அன்றிரவு அம்மூன்று வீரசிகாமணிகளும் தங்கினார்கள். இரவு உணவு அருந்தியானதும் மலையமான் அரசர் ஐந்து ரதங்களுக்கு அருகில் அரவான் கதை நடக்கிறது என்ற

55

அத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்

16 December 2023
0
0
0

“முதன் முதலாக என்னுடைய பன்னிரண்டாம் பிராயத்தில் நந்தினியை நான் சந்தித்தேன். ஒருநாள் பழையாறையில் எங்கள் அரண்மனையின் பின்புறத்திலுள்ள நீர் ஓடையில் நானும் என் தங்கையும் தம்பியும் ஓடம் விட்டு விளையாடிக் க

56

அத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்

16 December 2023
0
0
0

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் காஞ்சியில் மகேந்திர பல்லவ சக்கரவர்த்தி அரசு புரிந்த காலத்தில் நாடெங்கும் மகா பாரதக் கதையைப் படிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார். பௌத்த சமண மதங்களின் பிரசாரத்தினால் மக்கள்

57

அத்தியாயம் 57 - மாய மோகினி

16 December 2023
0
0
0

ஆரம்பத்திலிருந்து அவ்வளவாக அனுதாபம் இல்லாமலே கரிகாலன் கதையைக் கேட்டுக் கொண்டு வந்த பார்த்திபனுக்கும் இப்போது நெஞ்சு உருகி விட்டது. தன்னுடைய கண்களில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். “அரசே! ஒ

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்