shabd-logo

கவலை சூழ்ந்தது!

28 December 2023

2 பார்த்தது 2

துறைமுகத்தில் நீண்ட நேரம் அலைந்து திரிந்து கொண்டிருந்த நகைவேழம்பருக்கு இறுதியில் வெற்றியே கிடைத்தது. சீனத்துக் கப்பல் தலைவனை அவர் சந்தித்து விட்டார். எடுத்துக் கொண்ட காரியத்தை முறையாகத் திட்டமிட்டு முயன்று சூழ்ச்சித் திறனோடு முடிப்பதுதான் அவர் வழக்கமாயிற்றே. அன்று காலை துறை சேர்ந்த கப்பல்களைப் பற்றித் தெரிந்துகொண்டு ஒவ்வொரு கப்பல் தலைவனிடமும் சென்று, “இன்று காலை கப்பல் கரப்புத் தீவிலிருந்து யாராவது ஒரு பெண்ணை உங்கள் கப்பலில் ஏற்றி வந்து கரை சேர்த்தீர்களா? அப்படிக் கரை சேர்த்தவர் நீங்களானால் அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் உங்களுக்கு நன்றி செலுத்திப் பரிசளிக்கக் காத்திருக்கிறார்கள்” என்று சொல்லிக் கொண்டே வந்தார். சீனத்துக் கப்பல் தலைவனிடம் அதையே சொல்லியபோது, நகை வேழம்பருக்கு வேண்டிய செய்தி அவனிடமிருந்து கிடைத்தது.

“ஐயா! நீங்கள் கேட்பதுபோல் ஒரு பெண்ணும் அவளுடைய அன்புக்குரிய காதலர்போல் தோன்றிய ஓர் இளைஞரும் கப்பல் கரப்புத் தீவிலிருந்து எங்கள் கப்பலில் இடம் பெற்றுக் கரை சேர்ந்தார்கள். அந்தப் பெண் கப்பலில் வரும்போது உடன் வந்த இளைஞரிடம் பிணக்குக் கொண்டதுபோல் கோபமாக இருந்தாள். அவள் இந்த நகரத்தில் உள்ள பெரிய கப்பல் வணிகரின் பெண் என்று உடனிருந்த இளைஞர் எங்களிடம் கூறினார். அதனால் விருப்பத்தோடு எங்களுடைய கப்பலில் கொண்டு வந்த பட்டுக்களையும் மற்ற அலங்காரப் பொருள்களையும் அவளிடம் எடுத்துக் காண்பித்தோம். அவள் அவற்றில் எதுவும் தனக்குத் தேவையில்லை என்று மறுத்து விட்டாள்! நீங்கள் கூறுவதுபோல் அவளையும் அந்த இளைஞரையும் கரை சேர்த்ததற்கு அவள் பெற்றோரிடம் பரிசு எதுவும் வாங்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. உதவி செய்வதில் இருக்கிற ஒரே பெருமை கைம்மாறு கருதாமல் உதவி செய்தோம் என்பதுதானே? பரிசு வாங்கிக் கொண்டால் அந்தப் பெருமையை நான் அடைய முடியாது” என்று சீனத்துக் கப்பல் தலைவன் நகைவேழம்பரிடம் கூறினான். அவன் கூறிய அடையாளங்களிலிருந்து அவளுடைய கப்பலில் வந்தது சுரமஞ்சரியாகத்தான் இருக்க வேண்டுமென்பது உறுதிப்பட்டது. உடன் வந்ததாகச் சொல்லப்படும் இளைஞன் இளங்குமரனாகத்தான் இருக்க முடியும் என்பதிலும் நகைவேழம்பருக்குச் சந்தேகம் ஏற்படவில்லை.

‘இளங்குமரன் எப்படி அங்கே அவளைச் சந்தித்தான்? கப்பலில் அவன் உடன் வந்ததைச் சுரமஞ்சரி ஏன் எல்லாரிடமும் சொல்லாமல் மறைத்தாள்’ என்ற சிந்தனையில் மூழ்கியது நகைவேழம்பர் மனம் யாரோ ஒரு படகோட்டி தன்னைக் கப்பல் கரப்புத் தீவுவரை காப்பாற்றிக் கரை சேர்த்ததாகக் கூறினாளே? அந்தப் படகோட்டிதான் கப்பலில் அவள் கூட வந்தானோ என்று முதலில் சிறிது மனம் குழம்பினார் அவர். ஆனால் கப்பல் தலைவன் இளைஞனைப் பற்றிக் கூறிய அடையாளங்கள் இளங்குமரனுக்கே பொருந்தின. எண்ணங்களை ஒன்றோடொன்று பின்னிச் சூழ்ச்சிமயமாக முனைந்து உண்மையைக் கண்டு பிடிக்கும் வேகம் அவருக்கே உரிய சாதுரியமாகும். அவர் அச்சாதுரியத்தை எப்போதும் இழந்ததில்லை. இப்போதும் இழக்கவில்லை.

“சீனத்துக் கப்பல் தலைவரே! நீங்களே சற்றே சிரமத்தைப் பாராமல் என்னுடன் பட்டினப்பாக்கத்துக்கு வரலாம் அல்லவா? அந்தப் பெண்ணையும், இளைஞரையும் நேரில் பார்த்தால் அடையாளம் சொல்லி விடுவீர்களென நினைக்கிறேன். சீனத்துக் கப்பல் தலைவராகிய நீங்கள் பூம்புகாரின் சிறந்த கப்பல் தலைவரான பெருஞ்செல்வர் ஒருவரை அறிமுகம் செய்து கொண்டாற்போலவும் இருக்கும். என்னோடு இப்போதே புறப்படுங்கள்” என்று துணிந்து அவனை அழைத்தார் நகைவேழம்பர்.
மறுக்காமல் அவனும் உடனே அவரோடு புறப்பட்டு விட்டான். இருவரும் பட்டினப்பாக்கத்து மாளிகையை அடைந்தபோது சுரமஞ்சரி முதலியோர்கள் கோவிலுக்குப் போயிருந்தார்கள்.
சுரமஞ்சரியின் தந்தையாரிடம் அந்தக் கப்பல் தலைவனை அறிமுகம் செய்து வைத்தார் நகைவேழம்பர். அவன் துறைமுகத்தில் தன்னிடம் கூறிய விவரங்களையும் அவரைத் தனியே அழைத்துப் போய்க் கூறினார்.

“உங்கள் பெண்ணரசி நம்மையெல்லாம் ஏமாற்றியிருக்கிறாள். தன்னுடன் கப்பலில் வந்த இளங்குமரனைப் பற்றிச் சொல்லாமலே மறைத்து விட்டாள்.”
“உடன் வந்தவன் அந்தப் பிள்ளைதான் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“இதோ, அதையும் நிதர்சனமாகத் தெரிந்து கொண்டு விடுகிறேன்” என்று கூறிவிட்டுச் சுரமஞ்சரியின் மாடத்துக்குப் போய் அங்கேயிருந்த இளங்குமரனின் சித்திரத்தை எடுத்துக் கொண்டு வந்து சீனத்துக் கப்பல் தலைவனிடம் காண்பித்தார் நகைவேழம்பர். கப்பல் தலைவனின் முகம் அந்தச் சித்திரத்தைக் கண்டதுமே மலர்ந்தது.

“இதே இளைஞன்தான். இதே அழகிய கண்கள்தான். எனக்கு மிக நன்றாக நினைவிருக்கிறது.”
இதைக் கேட்டவுடன் சுரமஞ்சரியின் தந்தைக்கு அடங்காத சினம் மூண்டது. பெண் உயிர் பிழைத்து வந்தாளே; அதே போதும் என்று காலையில் உண்டாகியிருந்த மகிழ்ச்சிகூட இப்போது ஏற்பட்ட இந்தச் சினத்தில் ஒடுங்கிவிட்டது. அந்நியனான அந்தக் கப்பல் தலைவனுக்கு முன் தம் குடிப் பெருமையை விட்டுக் கொடுக்கலாகாதே என்ற நினைவு மட்டும் தடுத்திராவிட்டால் அவர் இன்னும் கடுமையாக உணர்ச்சிவசப்பட்டிருப்பார்.
சீனத்துக் கப்பல் தலைவன் அவர் நிலையைக் கண்டு ஒன்றும் புரியாமல் மருண்டான். ‘பெண்ணைக் காப்பாற்றியதற்காக அவள் பெற்றோர் தனக்கு நன்றி சொல்லப் போவதாய்ப் கூறியல்லவா இந்த ஒற்றைக் கண் மனிதர் நம்மை அழைத்து வந்தார்; நடப்பதென்னவோ வேறு விதமாக இருக்கிறதே’ என்று எண்ணி வியந்தான் அவன்.

‘சுரமஞ்சரி நீராட்டு விழாவில் நீந்துவதுபோல் தப்பிச் சென்று முன்பே இளங்குமரனைப் படகுடன் ஆற்றில் காத்திருக்கச் செய்து அவனுடன் புறப்பட்டுப் போயிருப்பாளோ?’ என்று தன் மனம் எண்ணிப் பழகிய கெட்ட வழியிலேயே எண்ணினார் நகைவேழம்பர். அதைச் சுரமஞ்சரியின் தந்தையிடம் காதருகில் சென்று மெல்லக் கூறினார். தன்னை வரவழைத்து உட்கார வைத்துக் கொண்டு அவர்கள் இருவரும் தங்களுக்குள்ளேயே ஏதோ பேசிக் கொள்வதும், எதற்காகவோ கோபப்படுவதும் கண்டு சீனத்துக்கப்பல் தலைவன் வருந்தினான். அவர்கள் பண்புக் குறைவாக நடந்து கொள்வதாகத் தோன்றியது அவனுக்கு. இனிமேலும் தான் அங்கே இருப்பதில் பயனில்லை என்ற எண்ணத்துடன் மெல்ல எழுந்து நின்றான் அவன். “நான் போய் வருகிறேன், ஐயா!” என்று கூறி அவர்களிடம் விடை பெற்றான்.
அந்த நேரத்தில் கோவிலுக்குச் சென்றிருந்த தேர் திரும்பி வந்து வாயிலிலே நின்றது. சுரமஞ்சரியும், வசந்த மாலையும் தேரிலிருந்து இறங்கிச் சேர்ந்தாற் போல நடந்து வந்து உள்ளே புகுந்தார்கள். உள்ளே அந்தக் கப்பல் தலைவனையும், இளங்குமரனின் ஓவியத்தையும் சேர்த்துப் பார்த்தபோது சுரமஞ்சரி திடுக்கிட்டாள்.

“உங்கள் கப்பலில் வந்தது இந்தப் பெண்தானே?” என்று சுரமஞ்சரியின் பக்கம் கைநீட்டிக் காண்பித்துச் சீன வணிகனைக் கேட்டார் நகைவேழம்பர்.
அவர்கள் தன்னிடம் பண்புக் குறைவாக நடந்து கொண்டதில் சிறிது மனம் குழம்பியிருந்த சீனத்துக் கப்பல் தலைவன் ஒரேவிதமான தோற்றத்தில் தெரிந்த இரண்டு பெண்களையும் கண்டு இப்போது இன்னும் குழப்பமடைந்து தன் கப்பலில் வந்தது யாரென்று சொல்லத் தெரியாமல் மருண்டான். மாறி மாறி இருவரையும் மருண்டு போய்ப் பார்த்தான்.
“இவள் தானே?” என்று சுரமஞ்சரியைச் சுட்டிக் காண்பித்து அவனை இரண்டாம் முறையாகக் கேட்டார் நகைவேழம்பர்.

அவசரத்திலும் குழப்பத்திலும் அங்கிருந்து உடனே வெளியேறிப் போக வேண்டுமென்ற பதற்றத்திலும் அந்தக் கப்பல் தலைவன் திகைத்து, “இவள் இல்லை! அவள்தான் என் கப்பலில் வந்தவள். சந்தேகமே இல்லை. அந்தப் பெண்தான்” என்று வானவல்லியைச் சுட்டிக் காட்டிக் காண்பித்துவிட்டு வேகமாக வெளியேறிச் சென்று விட்டான்.
சீனத்துக் கப்பல் தலைவன் கூறிவிட்டுச் சென்றதைக் கேட்ட நகைவேழம்பர் பெரிதாக வாய்விட்டுச் சிரித்தார். அவர் அதைச் சிறிதும் நம்பவில்லை என்பதை அந்த சிரிப்பு எடுத்துக் காட்டியது.
’இவர்கள் இரட்டைப் பிறவி என்பது அந்தக் கப்பல் தலைவனுக்குத் தெரியாது. ஐயோ பாவம்! போகிற போக்கில் ஏதோ பிதற்றிவிட்டுப் போகிறான் அவன். அவனுடைய கப்பலில் வந்தவர்கள் சுரமஞ்சரி தேவியும் அந்தப் பிள்ளையாண்டான் இளங்குமரனும்தான் என்பதைப் பற்றி உங்களுக்கு சிறிதும் சந்தேகமே வேண்டாம். இதோ உங்களுக்கு முன் சுரமஞ்சரி தேவியார் திகைத்துத் தலைகுனிந்து நிற்பதே இதற்குச் சான்றுகள்…” இவ்வாறு நகைவேழம்பர் கூறி விளக்கியபோது சுரமஞ்சரியின் தந்தை சீற்றத்தோடு அவளை நிமிர்ந்து பார்த்தார். அவள் நாணி நடுங்கித் தலை தாழ்ந்து நின்றாள். தந்தையார் சுரமஞ்சரியைக் கோபித்துக் கொள்ளும்போது தாங்கள் அருகிலிருப்பது நாகரிகமல்ல என்று கருதிய வானவல்லியும், தோழி வசந்தமாலையும் அங்கிருந்து மெல்ல விலகி உள்ளே சென்று விட்டார்கள். சுரமஞ்சரி தனியே நின்றாள். நகைவேழம்பர் இவ்வளவு விரைவாக அந்தச் சீனத்துக் கப்பல் தலைவனைத் தேடி அழைத்து வருவாரென்றோ அவனிடம் தனது மாடத்திலுள்ள இளங்குமரனின் ஓவியத்தைக் காண்பித்துத் தன்னுடன் இளங்குமரனும் கப்பலில் வந்ததைக் கண்டுபிடித்து விடுவாரென்றோ அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. கோவிலிலிருந்து திரும்பி மாளிகைக்குள் நுழைந்ததுமே தான் இவ்வளவு விரைவில் எதிர்பாராத இந்த நிகழ்ச்சி, தன்னை எதிர் கொண்டதைக் கண்டபின் திகைப்பிலிருந்தும் அச்சத்திலிருந்தும் அவளால் விடுபட இயலவில்லை. தந்தையாரின் குரல் சீற்றத்தோடு அவளை நோக்கி ஒலித்தது;
“நமது குடிப்பெருமைக்கு மாசு தேடும் செயல்களையே தொடர்ந்து நீ செய்து கொண்டு வருகிறாய்?”
“அப்படியானால் நான் உயிர் பிழைத்து வந்ததே உங்கள் குடிப்பெருமைக்கு மாசு தேடும் செயல்தான்! என்னைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவருக்கு நன்றியும் பரிசும் தந்து மகிழ வேண்டிய நீங்கள் அவரைப் பற்றி இப்படி நினைப்பது சிறிதும் நன்றாயில்லை அப்பா!”
“இப்போது இப்படி நினைக்கிற நீங்கள் முதலில் உங்களைக் காப்பாற்றியவரைப் பற்றிய உண்மையை ஏன் பொய் சொல்லி மறைத்தீர்கள், யாரோ ஒரு படகோட்டி உங்களைக் கரை சேர்த்ததாகவும் அங்கிருந்து சீனத்துக் கப்பலில் இடம் பெற்று வந்ததாகவும் கூறி உங்களோடு வந்த உதவியாளரை ஏன் மறைத்தீர்களோ?” என்று குறுக்கிட்டுக் கேள்வி கேட்டார் நகைவேழம்பர்.
“உங்களுக்கெல்லாம் அவரைப் பிடிக்காது என்று தெரிந்துதான் கூறவில்லை” என்று சுரமஞ்சரியும் இந்தக் கேள்விக்குத் தயக்கமின்றி மறுமொழி கூறினாள்.

“நீங்கள் கூறாவிட்டால் என்னம்மா? நாங்கள் கண்டுபிடித்துத் தெரிந்து கொண்டோமா, இல்லையா? சொந்த மகளிடமே ஏமாந்து போய் நிற்கிற அளவுக்கு உங்கள் தந்தை ஆற்றல் குறைந்தவரில்லை, அவரும், அவரைச் சுற்றியிருப்பவர்களும் ஏழு உலகத்தை ஏமாற்றி விட்டு வருகிற சாதுரியம் படைத்தவர்கள்” என்று நகைவேழம்பர் தற்பெருமை பேசிச் சிரித்தபோது, தன் தந்தையும் அவரோடு சேர்ந்து சிரித்ததைக் கண்டு சுரமஞ்சரி தன் மனத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் பொறுமையிழந்து கொதிப்படைந்தாள்.
“என் தந்தையார் பெருமைப்படுவதற்கு மற்றவர்களை ஏமாற்றுகிற திறமை அவரிடம் இருப்பது ஒன்றுதான் காரணமென்று அவருக்கு முன்பே துணிந்து கூறுகிற அளவுக்கு அவர் உங்களுக்கு இடமளித்திருப்பதை எண்ணி வெட்கப்படுகிறேன்” என்று சுரமஞ்சரி குமுறிப் பேசத் தொடங்கிய போது—
“பேசாதே; நீ உள்ளே போ!” என்று அவளை நோக்கி இரைந்தார் அவள் தந்தையார். தலை குனிந்தபடி உள்ளே செல்வதைத் தவிர சுரமஞ்சரியால் அப்போது வேறு ஒன்றும் பேச முடியவில்லை. தன் தந்தையார் நகைவேழம்பருக்கு அளவு மீறித் தகுதி மீறி இடங் கொடுப்பதன் காரணம் என்ன என்பது அவளுக்கு விளங்காத மர்மமாயிருந்தது.
மாளிகையும், மதிப்பும், செல்வமும், சிறப்பும் உள்ளவருக்கு மகளாகப் பிறந்திருக்கிற தன்னைக் காட்டிலும் புறவீதியில் கிழத் தந்தையோடு தன் தேருக்கு முன்வந்து நின்ற அந்த வீரக்குடிப் பெண்ணே எவ்வளவோ விதத்தில் கொடுத்து வைத்தவள் என்று எண்ணும் தாழ்வுமனப்பான்மையை அப்போது சுரமஞ்சரி அடைந்தாள்.
அந்த வீரக்குடிப் பெண்ணின் தந்தை ஆதரவாக அவளோடு தெருவில் நடந்து வந்ததையும், தன் தேருக்கு முன் நின்று இளங்குமரனைப் பற்றி அறிய முயன்றதையும் நினைத்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள் சுரமஞ்சரி, புறவீதியின் வீரக் குடும்பங்களில் ஏதாவதொன்றில் தானும் பிறந்திருக்கக் கூடாதா என்று நினைத்துத் தவித்தது அவள் உள்ளம். செல்வமும் செல்வாக்கும் நினைத்தபடி வாழ முடியாமற் செய்யும் தடைகளாக அந்தக் கணத்தில் அவளுக்குத் தோன்றின. ‘புறவீதியிலுள்ள ஆயிரக்கணக்கான மறவர் குடும்பங்களில் ஏதாவது ஒன்றில் யாராவதோர் அன்பு நிறைந்த தந்தைக்கு மகளாய்ப் பிறந்திருந்தால் தேரையும், பல்லக்கையும் எதிர்பாராமல் மனம் விரும்பிய வரைச் சந்திக்கக் கால்களால் நடந்தே புறப்படலாம். வான்வெளிப் பறவைபோல் தன்போக்கில் திரியலாமே!’ என்று எண்ணிய போது புறவீதியிற் சந்தித்த மறக்குலத்து நங்கை மேல் சுரமஞ்சரி சிறிது பொறாமையும் கொண்டாள். தன்னைவிட அந்தப் பெண்ணே வசதிகள் நிறைந்தவளாக அந்நிலையில் அவளுக்குத் தோன்றினாள்.

அன்று மாலை சுரமஞ்சரி மேலும் கலக்கமடையும் படியானதொரு செய்தி தோழியின் மூலம் அவளுக்குத் தெரிய வந்தது. இளங்குமரனின் ஓவியத்தைக் கொடுத்து அவன் பூம்புகாரிலும், அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் எங்கே தென்பட்டாலும் அவனைத் தேடிக் கண்டுபிடித்து உடனே தன் மாளிகைக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்று நாலைந்து முரட்டு யவன ஊழியர்களைத் தன் தந்தையாரும் நகைவேழம்பரும் சேர்ந்து இரகசியமாக அனுப்பி வைத்திருக்கும் செய்தியை வசந்தமாலையின் வாயிலாக அறிய நேர்ந்தபோது சுரமஞ்சரியைப் பெருங் கவலை சூழ்ந்தது.

‘இந்தச் செய்தியை முன்அறிவிப்புச் செய்து ‘அவரை’ எங்காவது பாதுகாப்பாக இருக்கச் செய்யலாமே’ என்ற எண்ணத்துடன், “வசந்தமாலை! ஒவியன் மணிமார்பன் எங்கிருந்தாலும் நான் கூப்பிட்டேன் என்று உடனே அழைத்து வா. ஒவியன் மூலமாக அவருக்கு முன்பே இந்தச் செய்தியைக் கூறி எச்சரிக்கை செய்யலாம்” எனறாள்.
“ஓவியன் சில நாட்களாக இந்த மாளிகையில் எங்குமே தென்படவில்லை அம்மா! திடீரென்று காணாமற் போனதன் காரணமும் எனக்குப் புரியவில்லை. ஆனாலும் தேடிப் பார்க்கிறேன்” என்று புறப்பட்டாள் வசந்தமாலை.
முன்பு தான் இளங்குமரனுக்கு எழுதிய அன்பு மடல் நகைவேழம்பர் கைக்குக் கிடத்ததைக் கண்டதிலிருந்தே ஓவியன்மேல் ஐயம் கொண்டு வெறுப்பாயிருந்தாள் சுரமஞ்சரி. ஆயினும் இப்போது இரண்டாம் முறையாகவும் அவன் உதவியை நாடுவது தவிர வேறு வழி அவளுக்குத் தோன்றவில்லை. அவன் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தாள் அவள்.

22
கட்டுரைகள்
மணிப்பல்லவம் 2
0.0
"ஆழ்ந்த புவியியல் வரலாறு! எகிப்து நாட்டு அடியாட்கள் காவிரிக் கரையில்! சீன தேச கப்பல் தலைவன் பூம்புகாரிலே! கேரள துறைமுக பண்டகசாலை உறவுகள். ''மணிபல்லவ தீவு எனும் அன்றைய இலங்கையில் தமிழ்(தமிழர்)ஆளுமை. காவிரி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு ''கச்சத் தீவில்''கரை ஒதுங்கும் கன்னியும் காளையும்! திருமண ''சுயம்வரத்தில் புத்தர்சிலைக்கு மாலை அணிவிக்கும் பேரழகி இளவரசி விசாகை'' ''இலங்கை புத்தமத வீச்சு ஆரம்பகட்ட'' வரலாறு!''
1

முதல் நாள் பாடம்

28 December 2023
1
0
0

நிலத்தைப் போல் தன்னை அடைந்தவர்களைத் தாங்கும் பொறுமையும், மலையைப் போல் நிலை கலங்காமல் தன்னிடமிருந்து கொள்ளக் குறையாத வளமும், மலரைப்போல் மென்மையும், துலாக்கோலைப் போல் நடுநிலை பிறழாத தன்மையும் உடையவர்கள்

2

சுரமஞ்சரியின் அச்சம்

28 December 2023
1
0
0

சீனத்துக் கப்பலிலிருந்து இறங்கி நடந்த போது, ‘உங்கள் கருணை எனக்குத் தேவையில்லை. என் மாளிகைக்குப் போய்ச் சேரும் வழி எனக்குத் தெரியும்’ என்று சீற்றத்தோடு அலட்சியமாக இளங்குமரனிடம் பேசியிருந்தாலும் சுரமஞ்ச

3

வீதியில் நிகழ்ந்த விரோதம்

28 December 2023
1
0
0

தன்னைக் காப்பாற்றியது இளங்குமரனே என்பது தந்தையாருக்கும், நகைவேழம்பருக்கும் தெரிய நேர்ந்து அதன் காரணமாக இளங்குமரனுக்குத் துன்பம் வரக் கூடாதே என்பதுதான் சுரமஞ்சரியின் பயமாக இருந்தது. அந்தப் பயத்துடனேயே

4

கவலை சூழ்ந்தது!

28 December 2023
1
0
0

துறைமுகத்தில் நீண்ட நேரம் அலைந்து திரிந்து கொண்டிருந்த நகைவேழம்பருக்கு இறுதியில் வெற்றியே கிடைத்தது. சீனத்துக் கப்பல் தலைவனை அவர் சந்தித்து விட்டார். எடுத்துக் கொண்ட காரியத்தை முறையாகத் திட்டமிட்டு மு

5

இவள்தான் விசாகை!

28 December 2023
1
0
0

திருநாங்கூர் அடிகளின் பூம்பொழிலில் அவரிடமிருந்து முதற் சுவடியை வணங்கி வாங்கிக் கொண்ட அந்தக் கணத்தில் இளங்குமரன் மனம், நாள் தவறாமல் ஊர்வம்புகளையும் அடிபிடி சண்டைகளையும் ஏற்றுக்கொண்டு முரட்டுப் பிள்ளையா

6

வேழம்பர் விரைந்தார்

29 December 2023
0
0
0

சுரமஞ்சரியின் வேண்டுகோளுக்கு இணங்கி அவசரமாக ஓவியன் மணி மார்பனைத் தேடிக் கொண்டு புறப்பட்டாள் தோழி வசந்தமாலை. சில நாட்களாக அவள் அறிந்தமட்டில் ஓவியன் மணிமார்பன் அந்த மாளிகையின் எல்லையில் இருப்பதாகவே தெரி

7

பூதம் புறப்பட்டது

29 December 2023
0
0
0

வானளாவி நின்ற அந்தப் பெரு மாளிகையிலிருந்து வெளியேறிப் பட்டினப்பாக்கத்தின் அகன்ற வீதியில் விரைந்து விரைந்து நடந்தபோது ஓவியன் மணிமார்பனின் உள்ளத்தில் துன்பங்களின் கோட்டையிலிருந்து விடுதலையடைந்து வந்துவி

8

வல்லவனுக்கும் வல்லவர்

29 December 2023
0
0
0

பெருமாளிகையின் வெளிப்புறம் முதல் தலைவாயில் வரை உடன் வந்து, ஓவியன் மணிமார்பனை வழியனுப்பி விட்டு உள்ளே திரும்பிச் சென்ற வசந்தமாலை, நகைவேழம்பர் ஓவியனைப் பின்தொடரும் செய்தியைச் சுர மஞ்சரியிடம் போய்க் கூறி

9

பெண்ணில் ஒரு பெருமை

29 December 2023
0
0
0

பெண்மை என்னும் தமிழ்ச் சொல்லுக்கு ‘கண்ணிற் புலனாவதோர் அமைதித் தன்மை’ என்று இளங்குமரன் பலரிடம் பொருள் விளக்கம் கேட்டு அறிந்திருந்தான். இன்று விசாகை என்னும் பெண்ணைப் பார்த்தபோது கேட்டு அறிந்திருந்த அந்த

10

தலைவணங்கிய தன்மானம்

29 December 2023
0
0
0

விசாகையின் கதையை முற்றிலும் கேட்டு முடித்ததும் தான் மீண்டும் இளைத்துப் போய்விட்டதாக உணர்ந்தான் இளங்குமரன். மனத்தின் வலிமையால் உலகத்தை வென்று நிற்பவர்களைப் பற்றி அறிந்தாலும், நினைத்தாலும், அந்தக் கணத்த

11

வழித்துணை வாய்த்தது!

29 December 2023
0
0
0

சினங்கொண்டு பாய்ந்த நகைவேழம்பரை எதிர்த்துத் தடுத்தபோது ‘சிங்க நோக்கு’ என்று இலக்கிய ஆசிரியர்கள் சிறப்பித்துச் சொல்லியிருக்கும் நேராய் நிமிர்ந்த கம்பீரப் பார்வையை நீலநாக மறவரிடம் கண்டான் ஓவியன் மணிமார்

12

காவிரியில் கலந்த கண்ணீர்

30 December 2023
0
0
0

மணிமார்பனைச் சாவர்களின் வழித் துணையோடு மதுரைக்கு அனுப்பிவிட்டு நீலநாக மறவர் புறவீதி வழியே ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். விடிவதற்கு இன்னும் நிறைய நேரம் இருந்தது. பகல் நே

13

வேங்கை சீறியது

30 December 2023
0
0
0

தந்தையார் உடன் அனுப்பியிருந்த ஊழியன் நிழலைப் போல் விடாமல் அருகிலேயே இருந்ததனால் நெய்தலங் கானலின் அழகிய கடற்கரையில் சுரமஞ்சரியும், வசந்தமாலையும் தங்களுக்குள் மனம் விட்டுப் பேசுவதற்காகத் தவித்துக் கொண்ட

14

நேருக்கு நேர்

30 December 2023
0
0
0

அமைதியான இரவு நேரத்தில் பட்டினப்பாக்கத்து மாளிகையில் பெருநிதிச் செல்வரின் தனிமையான அந்தரங்க மண்டபத்தில், அவரும் நகை வேழம்பரும் நேருக்கு நேர் நின்றார்கள். பெருநிதிச் செல்வரின் அளவிட முடியாத நிதிச் செல்

15

பேய்ச் சிரிப்பு!

30 December 2023
0
0
0

ஆலமுற்றத்துப் பெருவீரரான நீலநாக மறவரிடம் அவமானமடைந்து வந்திருந்த நகைவேழம்பரை ஆறுதல் அடையச் செய்வதற்குப் பெருநிதிச் செல்வர் அரும்பாடு பட வேண்டியிருந்தது. பல பேர்களை அடிமையாக வைத்துக் கொண்டு ஆள்கிற அளவு

16

தாயின் நினைவு

30 December 2023
0
0
0

தரையில் நீர்த்துளி விழுவதற்கு முன் மண்ணுலகத்து வண்ணமும் சுவையும் கலவாத மேக மண்டலங்களிலேயே அவற்றைப் பருகும் சாதகப் புள்ளைப்போல் விசாகையின் ஞானம் உலகத்து அழுக்கையெல்லாம் காணாத பருவத்தில், முன் பிறவி கண்

17

பயங்கர நண்பர்கள்

30 December 2023
0
0
0

அப்போது அந்த பாதாள அறையில் நிலவிய சூழ்நிலையில் கூண்டுக்குள் இருந்த புலிகளைக் காட்டிலும் கொடுமையான புலியாக மாறிப் பாய்வதற்கு முற்பட்டுக் கொண்டிருந்தவர் நகைவேழம்பர்தாம் என்பதை அங்கே இருந்த எல்லாரும் உணர

18

நாணற் காட்டில் நடந்தது!

1 January 2024
1
0
0

அந்த நாணற் காட்டின் நடுவே பெருநிதிச் செல்வரை அழைத்துக் கொண்டு சென்றார் நகைவேழம்பர். “இங்கே என்ன காரியம்? இவ்வளவு பெரிய காவிரிப் பூம்பட்டினத்தில் நீங்களும் நானும் பேசுவதற்கு இடமில்லயென்றா இங்கே அழைத்

19

பவழச் செஞ்சுடர்மேனி

1 January 2024
1
0
0

’ஒலிகள் ஒலியின்மையிலிருந்து பிறக்கின்றன. ஒலியின்மை, ஒலியுண்மையால் உணரப்படுகிறது” என்று தருக்க நூற்பாடத்தின் போது அடிகள் தனக்குச் சொல்லியிருந்த உண்மையை நினைத்துக் கொண்டு எதிரே பார்த்தான் இளங்குமரன். மு

20

செல்வச் சிறை

1 January 2024
1
0
0

பொழுது புலர்ந்து கொண்டிருந்த அந்த வைகறை நேரத்திலே இருகாமத்திணை ஏரியின் கரையும் காமவேள்; கோயிலும் தனிமையின் அழகில் அற்புதமாய்த் தோற்றமளித்துக் கொண்டிருந்தன. கிழக்கு வானத்தில் வைகறைப் பெண் செம்மண் கோலம்

21

தெய்வ நாட்கள் சில

1 January 2024
1
0
0

காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து தனக்காகவே திருநாங்கூர் வந்திருந்த முல்லையினிடமும் கதக்கண்ணனிடமும் மனம் நெகிழ்ந்து பழகாமல் அவர்களுடைய அன்பையும் ஆர்வத்தையும் புறக்கணித்துத் திருப்பியனுப்பியதை நினைத்தபோத

22

கடைசி நாளில் கற்றது

1 January 2024
1
0
0

திருநாங்கூர்ப் பூம்பொழிலின் ஒரு மேடையில் அடிகளும் இளங்குமரனும் வீற்றிருந்தனர். சாயங்கால வேளை உலகம் பகல் என்னும் ஒளியின் ஆட்சியை இழந்து போய்விட்டதற்காகச் சோக நாடகம் நடத்துவதுபோல விளங்கும் மேற்கு வானம்.

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்