shabd-logo

வேடிக்கை பார்ப்பவன் - 12

16 January 2024

1 பார்த்தது 1

வீடென்பது யாதெனில்...

"எனது புறநகர் குடியிருப்பு வயல்களின் சமாதி என்று நினைவுபடுத்தியவை தவளைகளே!"

- சுகுமாரன் - 'பூமியை வாசிக்கும் சிறுமி' கவிதைத் தொகுப்பில் இருந்து...

இன்னமும் இவனுக்கு லிஃப்ட்டில் செல்வது என்றால், அடிவயிற்றில் இருந்து ஒரு பயம் லேசாக எட்டிப் பார்க்கும். ஒவ்வொரு முறை லிஃப்ட்டுக்குள் நுழையும்போதும், திறந்து மூடும் சவப்பெட்டிக்குள் நுழைவதுபோலவே நினைத்துக்கொள்வான். முதன்முறையாக ரயிலின் ஓட்டத்தைப் பார்த்து மரத்துக்குப் பின்னால் ஒதுங்கிய காட்டுமிராண்டியின் பயம் அது.

தலைமுறைகள் கடந்து இவன் டி.என்.ஏ- வில் ஏதோ ஒரு முப்பாட்டன் அந்தப் பயத்தைக் கடத்தியிருக்கிறான். மாநகரத்துக்கு வந்த புதிதில், உயரமான கட்டடங்களுக்குள் நுழையும்போதெல்லாம். இவன் பழைய பயத்துடன் லிஃப்ட்டைப் புறக்கணித்து கால்களாலேயே அந்த உயரங்களைத் தாண்டியிருக்கிறான்.

இவன் இப்படியென்றால், இவன் மனைவிக்கு எஸ்கலேட்டரைக் கண்டால் பயம். சேலையின் கால் பகுதி படிக்கட்டில் மாட்டிக்கொண்டால் என்னாவது? எஸ்கலேட்டரில் கால் வைக்கும் போது தலைகீழாக விழுந்துவிடுவேனா..? எனப் பல சந்தேகங்கள் கேட்டு இவன் அச்சத் தீயில் நெய் ஊற்றுவாள்.

இவன் என்னமோ பெரிய வீரன் மாதிரி, 'இது நம்மள மேல தூக்கிட்டுப் போற ஒரு மெஷின். அவ்வளவுதான். இதைப் பார்த்துப் பயப்பட வேண்டாம்' என்று கடைசி படிக்கட்டில் இருந்து காலை எப்படி எடுப்பது என்று பாடம் நடத்துவான். எஸ்கலேட்டரில் கால் வைத்ததுமே. தோளோடு சேர்த்து மனைவியைப் பிடித்துக்கொள்வான். தன் பாதுகாப்புக்காகத்தான் கணவன், தோள் சாய்த்துக்கொள்கிறான் என்று மனைவி நினைத்தாலும், இவனுக்குள் இருக்கும் அச்சத்தால்தான் அவளைப் பிடித்துக்கொள்கிறான் என்று இன்று வரை அவளுக்குத் தெரியாது. காட்டுமிராண்டிக்கு ஏற்ற காட்டுச்சி!

இவன் இப்போது வசிப்பது ஒரு அபார்ட்மென்டின் நான்காவது தளத்தில் மொத்தம் ஆறு

பிளாக்குகள். 400 ஃப்ளாட்டுகள். குடும்பத்துக்கு ஐந்து பேர் என்று கணக்கிட்டாலும் 2,000 பேர்

வசிக்கும் ஒரு நவீன காலனி அது. இவன் வசிப்பது, 'Sun flower' பிளாக்கில். ஒவ்வொரு முறை

அதற்குள் நுழையும்போதும் வான்கா வரைந்த சூரியகாந்தி ஓவியமும், கூடவே காதலிக்காக

அறுத்துக்கொடுத்த அவன் காதும்தான் இவன் ஞாபகத்துக்கு வரும்.

ஒவ்வொரு நாளும் இவன் லிஃப்ட்டையும், லிஃப்ட் இவனையும் எதிரிகளைப் போல

சந்தித்துக்கொள்வார்கள். சில மாதங்களுக்கு முன்பு பள்ளி விட்டு வந்த மகனுடன் லிஃப்ட்டுக்குள்

நுழைந்தான். அங்கே ஏற்கெனவே ஒருவர் நின்றிருந்தார். ஆறரை அடி உயரத்தில்

செக்கச்செவேலென இருந்த அவரை, இவன் பல முறை பார்த்திருக்கிறான்; பேசியது இல்லை.

இவன் இருக்கும் பிளாக்கில் ஏதோ ஒரு தளத்தில் வசிக்கிறார்.

அவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றுகிறார் என்றும், காரில் செல்லும்போது இவன் எழுதிய பாடல்களை விரும்பிக் கேட்பார் என்றும் அவரது டிரைவர் இவனிடம் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. இவன் அவரைப் பார்த்து ஒரு சிநேகப் புன்னகை வீசினான். அவர் லேசாகத் தலையாட்டி இவனிடம், "எந்த ஃப்ளோர்ல இருக்கீங்க?" என்றார்.

இவன் "ஃபோர்த் ஃப்ளோர்" என்றான்.

"ஹவுஸ் ஒனரா? டெனன்ட்டா?"

"டெனன்ட்தான் சார்."

"ஓ! வாடகை வீடா?" என்று வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டார். அந்த 'ஓ'வின் அலட்சியத்தாலும் முகத் திருப்பலிலும், இவன் சற்றுக் காயப்பட்டுப்போனான்.

"ஹலோ சார்" என்றான் அவரைப் பார்த்து.

"என்ன?" என்றார் எரிச்சலுடன்.

"இந்த உலகமே ஒரு வாடகை வீடுதான். இன்னும் சொல்லப்போனா, நம்ம உடம்பே ஒரு வாடகை வீடுதான். இங்க யாரும் எதுக்கும் ஓனர் இல்லே" என்றான்.

இதற்குள் அவர் இறங்கவேண்டிய ஃப்ளோர் வந்ததும், "அதனால்தான் நீங்க இன்னமும் வாடகை வீட்டிலேயே இருக்கீங்க" என்று மீண்டும் காயப்படுத்திவிட்டுக் கடந்து போனார். லிஃப்ட் இயங்கத் தொடங்கியதும் இவர்களின் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த மகன், "அப்பா வாடகை வீடுனா என்ன?" என்றான்.

இவன் அவனுக்கு எப்படிப் புரியவைப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது, 'ஆதவன் நான் சொல்றேன்' என்ற குரல் கேட்டு, அப்பனும் பிள்ளையும் திடுக்கிட்டார்கள்.

"யாரோ பேசுறாங்கப்பா" என்றான் மகன் ஆச்சர்யத்துடன்.

'யாரோ இல்ல. மேலே நிமிர்ந்து பாரு' என்ற குரல் கேட்டு மேலே நிமிர்ந்தார்கள்.

ஒரு சின்ன வட்டத்துக்குள் கோடு கோடுகளாகப் பொருத்தப்பட்டிருந்த லிஃப்ட்டின் மின் விசிறியில் இருந்து, மீசையை ஆட்டியபடி ஒரு கரப்பான் பூச்சி வெளிவந்தது.

"வணக்கம் கவிஞரே" என்றது கரப்பான் பூச்சி.

இவன் வணக்கம் சொன்னான்.

"அப்பா, கரப்பான் பூச்சி பேசுதுப்பா!" என்றான் மகன் ஆச்சர்யத்துடன். கரப்பான் பூச்சி பேசியது.

"ஒரு கவிதை சொல்லலாமா?"

"அப்பா... கவிதையாம்ப்பா... சொல்லு சொல்லு. என்ன கவிதை?" என்று துள்ளிக் குதித்தான் மகன்.

"வாடகை வீட்டைப் பத்தித்தான்! கேக்கிறியா?" என்றது கரப்பான் பூச்சி.

"ம்" என்றான் மகன் ஆர்வத்துடன்.

"இது மலையாளக் கவிஞர் ஸ்ரீவத்ஸன் எழுதி, கே.வி.ஷைலஜா தமிழில் மொழிபெயர்த்தது" என்று கரப்பான் பூச்சி சொன்ன அந்தக் கவிதை...

"நமதில்லை மகனே, இந்த வீடும் கதவுகளும் மாடங்களும் படிக்கல்லும் வெளிப்புற வேலிப்படர்ப்பும் பொன் பூக்களும்.

நமதில்லை மகனே, இந்த வீடும் வாசலும் நந்தியாவட்டை நிழலும் அரளியும் இலஞ்சிப்பூ மணமும்.

நமதில்லை மகனே, இந்த வீடும் குளமும் கோயிலும் குளிர் சாமரம் வீசும் காற்றும்.

நமதில்லை மகனே, இந்த வீடும் சித்திர விதானங்களும் கண்ணாடி பார்க்கும் மரச்சிற்பக் கன்னிகளும்.

நமதில்லை மகனே, இந்த வீட்டின் கோடியில் தொங்கவிட்டிருக்கும் ஆலோலம் கிளிக் கூடும் நெல்மணிக் குதிர்களும். (கூட்டில் வந்து உட்காரும் கிளியைக் காணாமல் நீ துக்கத்தில் தேம்பின எத்தனை அந்திகள் போயிருக்கிறது இந்த வாசம் வழியாக!)

நமதில்லை மகனே, இந்த வீடும் வீட்டின் சங்கீதமும். நாம் போகிறோம். கால தேசங்கள் அறியாமல் பூமியின் எல்லைக்கோடு வரை முடிவில்லா யாத்திரையாய்...

யாத்திரையின் இடையில் ஒரு நொடி தலைசாய்க்க வீடு தேடிப் போகிறோம் மகனே நாம்!"

புரிந்தும் புரியாமலும் மகன் கேட்டுக்கொண்டிருக்க, இவன் தன் உணர்வை வரிகளாகச் சொன்ன ஸ்ரீவத்ஸனையும் கரப்பான் பூச்சியையும் நன்றியுடன் பார்த்தான்.

திருமணத்துக்குப் பிறகு எத்தனை வீடுகள் இவன் மாறியிருக்கிறான்! இவன் மனைவி, மிக்ஸியில் எதையோ அரைத்துக்கொண்டிருப்பாள். காலிங்பெல்கூட அடிக்காமல், ஹவுஸ் ஒனர் பெண்மணி உள்ளே நுழைவார்.

"ஆணி அடிக்கக் கூடாதுனு சொன்னேன்ல! எதுக்கு ஆணி அடிக்கிறீங்க?"

"நாங்க ஆணி எதுவும் அடிக்கலயே!"

"சத்தம் மாடி வரைக்கும் கேக்குது"

"மிக்ஸில் சட்னி அரைச்சிட்டு இருந்தேன்" என்று மனைவி சொன்னதும்,

"இனிமே சத்தம் போடாத மிக்ஸி வாங்குங்க" என்று ஹவுஸ் ஓனர் பெண்மணி வெளியேறுவதைப் பார்த்து இவன் பதைபதைத்துப் போய், அடுத்த மாதமே அந்த வீட்டைக் காலி செய்தான்.

இன்னொரு வீட்டில் தண்ணீர் பிரச்னை. வாட்டர் டேங்க் துருப்பிடித்திருக்க, குழாயைத் திறந்தால் செந்நிறத்தில் சக்கை சக்கையாக இரும்புத் துண்டுகள் பக்கெட்டில் மிதந்தன. அந்தக் காலகட்டத்தில்தான் ஐ.டி. இளைஞர்கள் மாநகரத்தில் மும்முடங்காக வாடகையை ஏற்றியிருந்தனர். இவன் சினிமாக்காரன் என்பதால், நான்கு மடங்கு வசூலித்துக்கொண்டிருந்தார் ஹவுஸ் ஒனர். அவரை வீட்டுக்கு வரவழைத்து தண்ணீர் பக்கெட்டைக் காட்டினான்.

"இரும்பும் ஒரு சத்துதான் சார். உடம்புக்கு நல்லது. இதயெல்லாம் பாத்தா சிட்டியிலே வாழ முடியுமா? அதுவும் நீங்க குடுக்கற வாடகையில?" என்று சிடுசிடுத்தபடி வெளியே போனார்.

இவனுக்குள் இருக்கும் வைராக்கிய வேதாளம் வெளியே கிளம்பி, இப்போது இருக்கும் இந்த

வீட்டுக்கு குடி வந்தான். இந்த ஹவுஸ் ஒனர் தஞ்சாவூரில் டாக்டர். இந்த மூன்று ஆண்டுகளில்

ஒருமுறைதான் அவரைச் சந்தித்திருக்கிறான். வாடகை வீட்டிலும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும்

சுகத்தைத் தந்துகொண்டிருப்பவர்.

லிஃப்ட்டில் பார்த்த கரப்பான் பூச்சி இவர்களது சிநேகிதன் ஆனது. கரப்பான் பூச்சிக்கு மகன்

'டிங்கு' என பெயர் வைத்தான். தினமும் காலையில் பள்ளிக்குக் கிளம்பும்போது, மகனுக்கான

உணவை இவன் மனைவி டிபன் பாக்ஸில் எடுத்துவைக்கும்போதே "அம்மா, டிங்குவுக்கு?"

என்பான் மகன்.

பிளாஸ்டிக் தட்டில் பரிமாறப்பட்ட இட்லியையோ, பூரியையோ, உப்புமாவையோ, கீரை சாதத்தையோ கடவுளுக்குப் படைக்கச் செல்லும் பக்தனைப் போல, உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு இவனுடன் லிஃப்ட்டுக்குள் நுழைந்ததும் மகன், "டிங்கு... சாப்பிட வா" என்பான். மின்விசிறிக்குள் இருந்து வெளியே வந்து டிங்கு மீசையை ஆட்டும்.

இன்று வரை டிங்கு அந்த உணவைச் சாப்பிட்டதா... இல்லையா என்று இவர்களுக்குத் தெரியாது. ஆனால் அடுத்த முறை லிஃப்ட்டுக்குள் நுழையும்போது அந்த உணவு காணாமல் போயிருக்கும்.

பள்ளி விட்டுத் திரும்புகையில் மகன் கேட்பான். "டிங்கு, இன்னிக்கு என்ன பண்ணின?"

"தேர்ட் ஃப்ளோர் ஆன்ட்டி லிஃப்ட்டுக்குள் நுழைஞ்சதும் அழுதுக்கிட்டே இருந்தாங்க. அப்புறம் கண்ணாடியைப் பாத்து கண்ணைத் துடைச்சுக்கிட்டு வெளில போயிட்டாங்க. பாவம், அவங்களுக்கு என்ன கஷ்டமோ? ஒண்ணும் புரியாமப் பாத்திட்டே இருந்தேன்."

"அய்யோ பாவம்" என்பான் மகன்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் உரையாடல். மகனும் டிங்குவும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு லிஃப்ட் கீழிறங்கும் நிமிடத்துக்கும் குறைவான அந்தக் கணம், இவனுக்கு கடவுள் கொடுத்த வரமாகத் தோன்றும்.

நேற்று மகன், டிங்குவிடம் கேட்டான்: "எதுக்கு லிஃப்ட்லயே இருக்க? பேசாம எங்க வீட்டுக்கு வந்துடேன். நாம ஒண்ணா சேர்ந்து விளையாடலாம்."

டிங்கு சொன்னது, "இல்ல ஆதவன், வாடகை வீடுனா என்னனு உன்னை மாதிரி ஒரு பையன் கேப்பான்ல? நான் உங்க வீட்டுக்கு வந்துட்டா... அந்தக் கவிதையை அவனுக்கு யாரு சொல்றது?"

ஒரு கணம் இவன் திகைத்துப்போனான்.

டிங்குவை கீழே இறங்கி வரச்சொல்லி, ஆத்மார்த்தமாகக் காலில் விழுந்து வணங்கினான். ஒரு மனிதன், பூச்சியின் காலில் விழுந்து வணங்குவதை, லிஃப்ட் ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது!


நா. முத்துக்குமார் மூலம் மேலும் புத்தகங்கள்

1

வேடிக்கை பார்ப்பவன் -2

15 January 2024
0
0
0

குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்! ஜென் கவிதை சனி, ஞாயிறு தவிர்த்து, தினமும் காலையில் இவனும் இவன் மகனும் பள்ளிக்குக் கிளம்புவார்கள். மகன் படிக்கும் பள்ளி ய

2

வேடிக்கை பார்ப்பவன் -1

15 January 2024
0
0
0

வெந்து தணிந்தது காடு முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானு  ம் இட்ட தீ மூள்க மூள்கவே! - பட்டினத்தார் ஒரு மிகப் பெரிய பொருட்காட்சிசாலையாக இந்தப்

3

வேடிக்கை பார்ப்பவன் - 3

15 January 2024
0
0
0

'என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித்தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்!' - கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் அம்மா இறந்த பிறகு, இவன் அப

4

வேடிக்கை பார்ப்பவன் - 4

15 January 2024
0
0
0

'அவன், குதிங்காலிட்டு உட்கார்ந்தான்; சப்பணமிட்டு உட்கார்ந்தான்; ஒரு காலை நீட்டி உட்கார்ந்து பார்த்தான்; வயிற்றோடு முழங்காலைச் சேர்த்து ஒட்டி உட்கார்ந்து பார்த்தான். இப்படியும் அப்படியுமாக எப்படி உட்கா

5

வேடிக்கை பார்ப்பவன் - 5

15 January 2024
0
0
0

சமூகம் என்பது நான்கு பேர்.' - ஜெயகாந்தன் 5, 4, 3, 2, 1, 0 என்று தலைகீழாக கவுன்ட் டவுன் சொல்லி, ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புவதைப் போலத்தான் தினமும் இவன் தன் மகனை பள்ளிக்கு அனுப்புவதும். திருவாளர் ம

6

வேடிக்கை பார்ப்பவன் - 6

16 January 2024
0
0
0

வயதென்னும் ரயில் வண்டி 'அந்த மாபெரும் வெற்றிடத்தில் முன்னும் இல்லை, பின்னும் இல்லை பறவையின் பாதை கிழக்கையும் மேற்கையும் அழித்துவிடுகிறது.' ஜென் தத்துவம் பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு 10 நிமிட

7

வேடிக்கை பார்ப்பவன் - 7

16 January 2024
0
0
0

பள்ளித் தலமனைத்தும்... "உண்மையில், பள்ளிக்கூடம் எனக்கு அவ்வளவு பிடிக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. திடீரென என் உலகம் மிகவும் பெரிதாகிவிட்டது. வீட்டைவிட்டு தினமும் வெளியே செல்வதற்கு இப்படி ஓர் அற்ப

8

வேடிக்கை பார்ப்பவன்-8

16 January 2024
0
0
0

 எமக்குத் தொழில் கவிதை 'முதலாளிமார்கள் விரல் எல்லாம் மோதிரங்கள் மனசெல்லாம் தந்திரங்கள்!' - கவிஞர் விக்ரமாதித்யன் ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும், இவனுக்குள் கோடீஸ்வரக் கனவு ஒன்று பூக்கத் தொடங்கும்

9

வேடிக்கை பார்ப்பவன்-9

16 January 2024
0
0
0

புன்னகைக்க மறந்த கதை "கண் சிமிட்டும் நேரத்தில் ஓர் உன்னதத் தருணம் புகைப்படம் ஆகிறது. அந்தத் தருணத்துக்கான காத்திருத்தலே, புகைப்படக் கலை. இருளை உணர்ந்தவனே, ஒளியில் வாழக் கற்றுக்கொள்கிறான்!" -பி.சி.ஸ்

10

வேடிக்கை பார்ப்பவன் - 10

16 January 2024
0
0
0

இவன், இவனான கதை! "இப்பொழுதும் அங்குதான் இருக்கிறீர்களா?" என்று கேட்டார். "எப்பொழுதும் அங்குதான் இருப்பேன்" என்றேன். - நகுலன் ('கோட் ஸ்டாண்ட்' கவிதைகள் தொகுப்பிலிருந்து...) போலந்து திரைப்பட இயக்கு

11

வேடிக்கை பார்ப்பவன் - 11

16 January 2024
0
0
0

தீராத விளையாட்டு வாழ்க்கையின் இருக்கலாம். கேள்விகள் ஆனால், எளிமையாகத்தான் இருக்கின்றன!" வேடிக் கடினமாக விடைகள் 211 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் "நா"ன்தான் டாம். நீங்க ஜெர்ரியாம். ஓடிப்போயி ஒளிஞ்சிக்குங்க.

12

வேடிக்கை பார்ப்பவன் - 12

16 January 2024
0
0
0

வீடென்பது யாதெனில்... "எனது புறநகர் குடியிருப்பு வயல்களின் சமாதி என்று நினைவுபடுத்தியவை தவளைகளே!" - சுகுமாரன் - 'பூமியை வாசிக்கும் சிறுமி' கவிதைத் தொகுப்பில் இருந்து... இன்னமும் இவனுக்கு லிஃப்ட்டில

13

வேடிக்கை பார்ப்பவன் - 13

16 January 2024
0
0
0

நிலாக் காலம் 'எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ? எந்த அழகை எந்த விழியில் கொண்டுசெல்வோமோ? இந்த நாளை வந்த நாளில் மறந்துபோவோமோ?' -கவியரசு கண்ணதாசன் ('பசுமை நிறைந்த நினைவுகளே...' பாடலில் இருந்து)

14

வேடிக்கை பார்ப்பவன் - 14

17 January 2024
0
0
0

சாலைகளின் பாடல் "நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சினிமா பார்ப்பதைப் போலத்தான். ஆனால், படம் முடிந்த பின் க்ளைமாக்ஸ் என்ன என்பது படம் பார்த்தவருக்குத் தெரியாது!" -ரோமன் பொலன்ஸ்கி, போலந்து திரைப்பட இயக்குந

15

வேடிக்கை பார்ப்பவன் - 15

17 January 2024
0
0
0

கனவின் கைப்பிடியில் "கட்டடங்களின் விரிசல்களுக்கு இடையே வேர் விட்டுப் பூக்கும் ரோஜாச் செடிகளை நீங்கள் பார்த்ததுண்டா? இயற்கை விதிகளைத் தவறாக்கி கால்கள் இல்லாமல் நடக்க அவை கற்றுக்கொடுக்கின்றன; அவை கனவுக

16

வேடிக்கை பார்ப்பவன் - 16

17 January 2024
0
0
0

குறுக்கு வெட்டுத் தோற்றம் தாமிரக் காசை தண்டவாளத்தில் வெச்சி நாம பதுங்க ரயில் நசுக்கும் - ராமையா கால ரயிலோட நாமெல்லாம் காசானோம் வாலிபம் போய் ஆச்சே வயசு! பார்ப்பவன் -வெ.சேஷாசலம் ('ஆகாசம்பட்டு' தொகுப்

17

வேடிக்கை பார்ப்பவன் - 17

17 January 2024
0
0
0

முன்பனிக்காலம் "நீ கிளையைக் கவனமாக வரைய முடியுமானால், உன்னால் காற்றின் ஒலியைக் கேட்க முடியும்!" - ஜென் தத்துவம் (எஸ்.ராமகிருஷ்ணனின் ஜென் கவிதைகள் நூலில் இருந்து) சினிமா, விநோதமான ஒரு ரங்கராட்டினம்.

18

வேடிக்கை பார்ப்பவன் - 18

17 January 2024
0
0
0

பின் பனிக் காலம் "பழத்தைப் பார்த்து பூ கேட்டது, 'இத்தனை நாளாய் எங்கு இருந்தாய்?' பூ சொன்னது, 'உன் இதயத்தில்தான் ஒளிந்திருந்தேன்!"' -தாகூர் (வழி தப்பிய பறவைகள் தொகுப்பில் இருந்து) வேலையற்றவனின் பகலு

19

வேடிக்கை பார்ப்பவன் - 19

17 January 2024
0
0
0

இவன் நானாகும் அத்தியாயம் 'நான் இல்லாமல் போகிறேன் ஆனால் வசந்த காலம் என்னுடைய நினைவுகளுடன் இருந்து கொண்டேதானிருக்கும்!' -இறக்கப்போகிற கடைசி நிமிடத்தில் ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ அன்புள்ள பாலுமகேந்த

20

வேடிக்கை பார்ப்பவன் - 20

17 January 2024
0
0
0

இளவேனிற் காலம் 220 இதற்கு மேல் உருள முடியாது கல் நதியைவிட்டு கரையேறிற்று. இதற்கு மேல் வழ வழப்பாக்க முடியாது கல்லை ஒதுக்கிவிட்டு நதி ஏகிற்று! கல்யாண்ஜி பத்திரிகையில் வேலை செய்தாலும், இவனது தீராக்கா

21

வேடிக்கை பார்ப்பவன -21

17 January 2024
0
0
0

'பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்' "உனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிந்துகொள்வதுதான் உண்மையான ஞானம்!" - சாக்ரடீஸ் இவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு 'சுதந்திரம்'. நூற்றுக்கும் 5. நூற்று

22

வேடிக்கை பார்ப்பவன் 22

18 January 2024
0
0
0

என்ன நடக்கிறது என்று என்ன நடக்கிறது என்று தெரிய மேஜையில் தேநீர் பதளமாய் கவிஞர் தேவநர்கள் இரண்டு சூரியன்" தொழும்பில் இருந்து கோப்பையைப் வைக்கிறேன் நடனமாய் மாறியபடி ஞாயிற்றுக்கிழமைகளை இவன் எந்த வே

23

வேடிக்கை பார்ப்பவன் - 23

18 January 2024
0
0
0

பசித்த புலியின் வேகம் "மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!" நகுலன் ('நினைவுப் பாதை' நாவலில் இருந்து...) எழுத்தாளர் சுஜாதா இவன் மேல் திருப்பிவிட்ட

24

வேடிக்கை பார்ப்பவன்-24

18 January 2024
0
0
0

நீங்கள் இயக்கிய 'சைக்கோ' திரைப்படத்தில் இடம்பெற்ற பாத்ரூம் கொலைக் காட்சியைப் பார்த்த பிறகு ஒரு மாதமாக என் மகள் குளிக்கவே இல்லை!" என்று ஒரு நாய் என்னிடம் சொன்னாள். நான் அவளிடம் சொன்னேன். 'தயவுசெய்து உங

25

வேடிக்கை பார்ப்பவன் -25

18 January 2024
0
0
0

குட்டிப் புத்தரின் கேள்வி "வாழ்க்கை, ஒரு மகாநதியைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதன் கரையில் நின்று, என் கண்ணுக்கு பட்டவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்." - எழுத்தாளர் வண்ணநிலவன் இந்த அத்தியாயத்த

26

வேடிக்கை பார்ப்பவன் - 26

18 January 2024
0
0
0

இவன் அவனாகும் அத்தியாயம் 'கீழைக்காட்டு வேம்பு கசந்தது அம்மாவின் சோகம் கேட்டுத்தான்!' -கவிஞர் த.பழமலய் ('சனங்களின் கதை' தொகுப்பில் இருந்து) அந்தப் பையனைக் காப்பாற்றுங்கள். அவன் ஏன் இப்படி இருக்கிறான

27

வேடிக்கை பார்ப்பவன் - 27

18 January 2024
0
0
0

பட்டாம்பூச்சி விற்ற கதை "ஒரு தேர் சக்கரத்தின் அளவு பூர்ண சந்திரன், இன்று ஒரு வீட்டுக் கூரையின் மேல் உதயமானான். தீப்பிடித்துவிட்டதோ என்று நினைத்தேன்!" தி.க.சிவசங்கரன் ('தி.க.சி-யின் நாட்குறிப்புகள்'

28

வேடிக்கை பார்ப்பவன் - 28

18 January 2024
0
0
0

அவையிடத்து முந்தியிருப்பச் செயல் 'ரத்தமும் சதையும் அல்ல... இதயம்தான் எங்களை தந்தை மகனாக இணைத்தது!' - எழுத்தாளர் ஓரான் பாமுக் எம்.ஏ., முடித்ததும், பச்சையப்பன் கல்லூரியிலேயே இவன் எம்.ஃபில்., சேர்ந்தா

29

வேடிக்கை பாறிப்பலன்-29

18 January 2024
0
0
0

'நிஜம்தாள் தாங்க முடியாத பாரம். அந்தப் பாரத்தை இறக்கியைக்க அல்ல, எவ்வளவு எடை என்று பார்த்துக்கொள்ளத்தான் இதை உல்களுக்கு எழுதுகிறேன். வெயிலில் உலர்த்துவது என் ஆகிவிட்டது. எல்லா இடத்திலும்நாளே வெயில் வி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்