ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி. இவர் ஸ்ரீ ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் லோகேந்திர சிங் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த அமைப்பில் இருந்து பிரிந்து 2015ம் ஆண்டு ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பு 2018ம் ஆண்டு வெளியான பத்மாவதி திரைப்படத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்தியது.
இதனிடையே, ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் நேற்று ஜெய்ப்பூரின் ஷாய்ம் நகரில் உள்ள தனது வீட்டில் 3 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா என்ற தலைசிறந்த அணிக்கு தலைமை தாங்கிய கோகமேடி, அவருடன் தங்கும் அறையில் தேநீர் அருந்திய மூன்று நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது..
கோல்டி ப்ரார் மற்றும் லாரன்ஸ் பிஷ்னோய் ஆகியோரின் கும்பலுடன் நெருங்கிய தொடர்புடைய ரோஹித் கோதாரா என்ற கும்பல், பேஸ்புக் பதிவில் கொலைக்கு பொறுப்பேற்றுள்ளார்.
சுக்தேவ் சிங்கின் வீட்டிற்கு வந்த 3 பேர் அவருடன் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுக்தேவ் சிங் மீது தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் சுக்தேவ் சிங் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
சுக்தேவ் சிங் கோகமேடி ஜெய்ப்பூர் வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் இன்று ராஜஸ்தான் பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால், ராஜஸ்தானில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.