இந்தியாவில் டிசம்பர் 18ஆம் தேதி தேசிய சிறுபான்மையினர் உரிமை தினமாக அனுசரிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் சிறுபான்மையினரின் நிலை எப்படியிருக்கிறது?
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18ஆம் தேதியை சிறுபான்மையினர் உரிமை தினமாக தேசிய சிறுபான்மையினர் ஆணையம் கடைப்பிடித்து வருகிறது.
சிறுபான்மையினரை வரையறுத்தல்:
ஒரு சிறுபான்மைக் குழு, ஐக்கிய நாடுகள் சபையின்படி, சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக ஆதிக்கம் செலுத்தாத மற்றும் குறிப்பிட்ட நாட்டிற்குள் மக்கள்தொகையில் தாழ்ந்த சமூகமாகும். இந்த குழுக்கள் கலாச்சாரம், இனம் அல்லது இனம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடலாம் ஆனால் பரந்த தேசிய கட்டமைப்பிற்குள் இணைந்து வாழ்கின்றன. இந்த சிறுபான்மையினரின் உரிமைகள் சமத்துவம் மற்றும் நீதியின் கொள்கைகளுக்கு அடிப்படையாகும்.
சிறுபான்மையினர் உரிமைகள் தினம் 2023க்கான கருப்பொருள், 'பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தைக் கொண்டாடுதல்,' பன்முகத்தன்மை ஒரு சமூகத்திற்கு கொண்டு வரும் செழுமையை அங்கீகரித்து அரவணைப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தேசத்தின் கூட்டு முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் வகையில் பல்வேறு பின்னணியில் உள்ள தனிநபர்கள் இணக்கமாக இணைந்து வாழக்கூடிய உள்ளடக்கிய அணுகுமுறையை இது ஊக்குவிக்கிறது.
1992ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை மத ரீதியான, மொழி ரீதியான, இன ரீதியான சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தனிநபர்களின் உரிமை குறித்த சாஸனத்தை பிரகடனம் செய்தது. அதன் அடிப்படையிலேயே டிசம்பர் 18ஆம் தேதியன்று இந்த தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது.
கலாச்சார ரீதியாக, மொழி, இன ரீதியாக, தேச ரீதியாக சிறுபான்மையினராக இருப்பவர்களின் அடையாளங்கள் மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டுமென்கிறது ஐ.நாவின் பிரகடனம். சிறுபான்மையினரின் நிலையை மேம்படுத்துவது என்பது அந்தந்த நாட்டு அரசுகளின் கடமை என்றும் கூறுகிறது இந்த சாஸனம்.
இதையடுத்து இந்தியாவில் 1992ல் தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் நிறைவேற்றப்பட்டு சிறுபான்மையினருக்கான ஆணையம் அமைக்கப்பட்டது. துவக்கத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள் ஆகிய ஐந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டார்கள். 2014 ஜனவரி 27ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, ஜைனர்களும் மத சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டார்கள்.
இந்தியாவில் சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் கீழ் இந்தத் துறை செயல்பட்டு வந்த நிலையில், 2006ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி இதற்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது.
சிறுபான்மையினர் உரிமைக்கென தனியாக அமைச்சகம், ஆணையம் ஆகியவை செயல்பட்டுவந்தாலும் இந்தியாவில் மதச் சிறுபான்மையினர் அச்சுறுத்தப்படுவது, தாக்கப்படுவது, கலவரங்களின்போது அவர்களது சொத்துகள் சூறையாடப்படுவது போன்றவை தொடர்ந்து நடந்து வருகின்றன.
அரசுகள் சிறுபான்மையினர் நலன் குறித்துப் பேசினாலும், அரசின் அமைப்புகள், காவல்துறை போன்றவை சிறுபான்மையினரை அணுகும் விதத்தில் பாரபட்சம் இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறது. சிறுபான்மையினர், அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ற விதத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதில்லை என்கிற புகாரும் இருக்கிறது.
இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களின் சிறைகளில், அந்த மாநிலங்களில் உள்ள சிறுபான்மையினரின் சதவீதத்தைவிட அதிக அளவிலேயே சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த சிறைக் கைதிகள் இருப்பதை தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
"ஜனநாயகத்தில் உள்ள ஒரு சிக்கல் என்னவென்றால் அது எளிதில் பெரும்பான்மை வாதமாக மாறிவிடும் ஆபத்தையும் உள்ளடக்கியது என்பதுதான். எதாவது ஒரு வகையில் சிறுபான்மையினராக இருப்பவர்களை எதிரிகளாகச் சித்தரித்து பெரும்பான்மையினரின் வாக்குகளைப் பெற அரசியல் கட்சிகள் முயலும். அது நடந்தும் இருக்கிறது. இந்தப் போக்கு இந்தியாவில் மட்டுமல்ல, ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா என எல்லா கண்டங்களிலும் நடந்துவருகிறது.
ஜனநாயகத்தில் ஆட்சி என்பது பெரும்பான்மையினரால் தேர்வுசெய்யப்படலாம். ஆனால், அங்கே உள்ள சிறுபான்மையினரின் மகிழ்ச்சிதான் அந்த ஜனநாயகத்தின் தரத்தை நிர்ணயம் செய்கிறது. சிறுபான்மையினர் உரிமை தினம் சுட்டிக்காட்டுவது அதைத்தான். பழங்குடியினத் தலைவரை முதல்வராகத் தேர்ந்தெடுத்து, நாட்டின் சிறுபான்மை சமூகங்களுக்கு அரசாங்கத்தால் முக்கியத்துவம் அளிப்பது சமீப காலமாக ஊக்கமளிக்கிறது.