shabd-logo

1. சுடர்க்கொடி

15 January 2024

2 பார்த்தது 2

சரித்திரம், பூமி, வாழ்க்கையின் கர்ம பலன்கள் ஆகிய சகலத்திலும் ஒரு சுழற்சியும் தொடர்ச்சியும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுவதில் எத்தனை உண்மையிருக்கிறதென்பதை, சுற்றிலும் தன்னை எரித்துக்கொண்டிருந்த மணற்பரப்பை நோக்கிய மார்வார் ராஜபுத்திரனான ராவ்ஜோடா சந்தேகமறப் புரிந்துகொண்டான். எங்கும் வெள்ளை வெளேரென்று தெரிந்த அந்தப் பாலைவனத்துக்கு தனது கிரணங்களால் அதிகப்படியான தீட்சண்யத்தையும் பளபளப்பையும் பிற்பகல் கதிரவன் அளித்து அழகு செய்தாலும், அந்த அழகே தன்னைக் கொன்றுவிட முடியும் என்ற முடிவுக்கும் வந்த அந்த வாலிபன், “அழகினால் ஆபத்தே தவிர சுகம் ஏதுமில்லை” என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, கொல்லும் வெயிலிலும் தன்னைச் சுமந்துகொண்டிருந்த புரவியின் முதுகில் ஒருமுறை தனது கையால் தட்டிக் கொடுத்ததன்றி, அதன் முதுகிலிருந்து கீழே இறங்கவும் செய்தான். அப்பொழுது அவன் கிட்டத்தட்ட அந்தப் பாலைவனத்தைத் துண்டு செய்து ஓடிக்கொண்டிருந்த லூனி என்ற உப்பனாற்றங்கரைக்கு வந்துவிட்டதால் தன்னை இரண்டு நாட்களாகத் துரத்தி வந்த ஆபத்து விலகிவிட்டதென்ற நினைப்பில் ஆற்றங்கரையை நடந்தே அணுகிய மார்வார் ராஜபுத்திரன் ஆற்றில் இறங்கி அதன் நீரை வாரித் தன் முகத்தில் அடித்துக்கொண்டான். பின்னால் தொடர்ந்து தன்னுடன் ஆற்றில் இறங்கிய புரவியின் முகத்திலும் நீரை அள்ளித் தெளித்தான். அந்த சைத்தியோபசாரத்தால் புரவி உடல் சிலிர்த்து, முகத்தை அந்த வாலிபன் தோளிலும் வைத்துப் புரட்டியது. அதன் முகத்தைத் தனது வலது கையால் தட்டிக் கொடுத்த ராவ்ஜோடா, மீண்டும் லூனி நதிக்குப் பின்னாலிருந்த பாலைவனத்தை உற்றுநோக்கினான். பழையபடி ஆரம்பத்தில் மனத்தில் உதயமான தத்துவத்தை எண்ணிப் பார்த்து அது முற்றிலும் சரி என்று மனத்துக்குள் சொல்லியும் கொண்டான்.
“காமத்வஜமென்றும் கனோஜ் என்றும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்ட கன்னோசியிலிருந்து, கங்கைக்கரையில் அமைந்திருந்த விஸ்தாரமான வளப்பமான நாட்டிலிருந்து, ஏன் இந்த மாரூஸ்தலி என்றும் மாரூஸ்தானமென்றும் அழைக்கப்பட்ட மரண பூமிக்கு சரித்திரம் எங்களைத் தள்ளிவிட்டது?” என்று வினாவைத் தொடுத்த அந்த ராஜபுத்திரன் “எங்கள் மூதாதையரான ஜெயசந்திரன் தனது மகளைத் தூக்கிச் சென்று கடிமணம் புரிந்த பிருதிவிராஜனை நசுக்கும் எண்ணத்துடன் கோரி நவாபான ஷாபுடீனை வரவழைத்தான். ஷாபுடீன் பிருதிவிராஜனையும் அழித்தான்; ஜெயசந்திரனையும் அழித்தான். ஆகவே, ஜெயசந்திரன் சந்ததிகளில் ஒருவரான சேவாஜி இந்த மாரூஸ்தலி என்ற மரண பூமியில் அரசை நிறுவினார். ஜெயசந்திரன் செய்த பாவம், அவர் சந்ததியை கங்கையின் உயிரூட்டும் வளமிக்க பூமியிலிருந்து விரட்டியது மட்டுமல்ல, மார்வார், மாரோவார், மாரூஸ்தலி என்றெல்லாம் அழைக்கப்பட்ட இந்த வரண்ட பாலைவனத்து, மரணபூமிக்கு அனுப்பிவிட்டது. இப்பொழுது மீண்டும் என் தந்தை அதே சிதோதயர்களுக்கு துரோகம் செய்தார். இதோ நான் மரண பூமிக்கு மீண்டும் வந்துவிட்டேன். ஜெயசந்திரன் பாவத்திலிருந்து சிறிது மீட்சி, சிறிது புண்யம், சேவாஜியின் முயற்சியால், இப்பொழுது எனது தந்தையின் துரோகத்தால் மீண்டும் அதே பழைய பாலைவனம் ஒரு சுழற்சி, பாவ புண்யங்களின் ஒரு சுற்று முடிந்துவிட்டது. சரித்திரம்கூட ஒரு சுற்று சுற்றிவிட்டது. உயர்ந்த சாம்ராஜ்யம் சிதைந்து இருநூறு வீரர்களுடன் இந்தப் பாலைவனத்தை அடைந்த சேவாஜி இங்கு அரசை நிறுவினார். அந்த அரசு இப்பொழுது ஆட்டங்கண்டிருக்கிறது. நான் மீண்டும் அவரைப்போல் நிர்க்கதியாக இங்கு வந்திருக்கிறேன். சரித்திரமும் சுழன்றுவிட்டது ஒரு முறை. இத்தனைக்கும் காரணம் பூமி சக்கரமாயிருப்பதாலா? அது சுழல்வதால் வாழ்க்கையும் சுழலுகிறதா? சக்கரத்தில் வைக்கப்படும் ஒரு பொட்டுப்போல வாழ்க்கையும் உருண்டு, ஒருசமயம் மேலும் இன்னொரு சமயம் கீழுமாகச் சுழல்கிறதா? அப்படித்தானிருக்க வேண்டும்” என்று தனது கேள்விக்குப் பதிலும் சொல்லிக்கொண்டான் ராவ்ஜோடா.
இப்படி சிந்தனை வசப்பட்டுக்கொண்டே சித்தூரில் மேவார் வம்சத்தவனும் பரம தியாகியுமான சந்தசிம்ஹனால் கொல்லப்பட்ட தனது தந்தைக்கு லூனியில் இறங்கி மூழ்கி நீராடவும் செய்தான் மார்வார் இளவரசன். பிறகு புரவியின் மீது சொட்டச் சொட்ட இருந்த உடைகளுடனும் தலை மயிருடனும் ஏறி ஆற்றைக் கடந்து திரும்பி அக்கரையில் நீண்ட தூரத்தில் தெரிந்த ஆராவலி மலைத்தொடரை நோக்கி ஒரு முறை பொறாமைப் பெருமூச்சும் விட்டான். “ஆராவலி வலிமை மிக்கவர்களின் இருப்பிடம். என்ன அழகான பெயர்” என்றும் சொல்லிக்கொண்டு மார்வாரின் தென் பகுதியிலிருந்த அந்த மலைத்தொடரை நோக்கி இரண்டாம் முறையும் பெருமூச்சு விட்டான்.
“ஆராவலி! வலிமை மிக்கவர்களின் புகலிடம்! மகாவீரர்களான சித்தூர் ராணாக்களுக்கு, சிதோதய வம்சத்தாருக்கு அதுதானே புகலிடம்? அந்த வம்சத்தை அந்த மலைத்தொடர் எவ்வளவு தூரம் பாதுகாத்திருக்கிறது! சரித்திரமே இதற்குச் சான்று” என்றும் சொல்லிக்கொண்ட மார்வார் இளவரசன் “சித்தூர் ராணாவுக்கு சதி செய்யப் போய்த்தானே இந்த கதி எனக்கு வந்தது?” என்றும் கேட்டுக்கொண்டான் மனத்துள். இரண்டு நாட்களுக்கு முன்னர் முடிந்த கதை அப்பொழுதும் அவன் மனக்கண்ணில் எழுந்தது.
வயோதிக வயதிலிருந்த மேவார் மன்னர் லக்க ராணாவுக்கு தமது மகளைக் கொடுத்தார் மார்வார் மகாராஜா ரின்மல். அவளுக்கு மகன் பிறந்தால் அவன்தான் அரசாள வேண்டும் என்ற நிபந்தனையையும் ஏற்படுத்தினார். அதற்கு லக்கராணா சம்மதிக்காவிட்டாலும் அவரது மூத்த மகனும் பட்டத்துக்குரியவனும் மகாவீரனுமான சந்தன் சம்மதித்தான். தான் சிம்மாசனம் ஏறுவதில்லையென்று சபதமும் செய்தான். அப்படியே தந்தை இறந்ததும் தனது இளைய தாயாரின் மகனான மோகுல்ஜியை சிம்மாசனத்தில் ஏற்றி முடிசூட்டி, தான் பக்கபலமாக நின்று அரசாண்டான். மோகுல்ஜியை சந்தன் வெறும் கைப்பொம்மையாக்கிவிட்டான் என்று சிற்றன்னை புகார் செய்தாள். சந்தன் அவள் எண்ணங்களுக்குத் தலைதாழ்த்தி தனது வீரர்களுடன் நாட்டை விட்டு அகன்றான். சிற்றன்னையின் பிறந்தகத்தார், தகப்பன், மாமன்-சகலரும் சித்தூரை வசப்படுத்திக்கொண்டார்கள். இளையராணி தனது மடத்தனத்தை உணர்ந்து சந்தனுக்கு சொல்லியனுப்பினாள். சந்தன் தனது வீரர்களுடன் தசராவின் கடைசி நாளன்று மாறுவேடம் புனைந்து சித்தூருக்குள் நுழைந்துவிட்டான். சிதோதய வீரர்கள் மார்வார் ராஜபுத்திரர்களை வெட்டிச் சாய்த்தார்கள். மார்வார் மகாராஜாவின் முடிவு கேவலமாகவும் கேலிக்கு இடமாகவும் இருந்தது. தனது மகளின் பணிப்பெண்ணுடன் சரசமாட முற்பட்டு, அவள் கொடுத்த மதுபானத்தை அருந்தி மயக்கமாகப் படுத்திருந்த மகாராஜாவை, பணிப்பெண் அவர் தலைப்பாகையைக் கொண்டே அவரைக் கட்டிலில் கட்டினாள். அப்பொழுது நுழைந்த சிதோதய வீரர்கள் மார்வார் அதிபதியை வெட்டிப் போட்டார்கள். இப்படி தன்னுடைய சதிக்கு துர்க்கதியால் பிராயச்சித்தம் செய்தார் மகாராஜா ரின்மல். அவரது மகன் ராவ்ஜோடா அப்பொழுது சித்தூர் நகரில் வேறொரு மூலையில் இருந்ததால், செய்தி கேட்டு புரவியிலேறி அதன் வேகத்தால் தப்பினான். தப்பியும் பயனென்ன? இரண்டு நாள் பயணம் மாரூஸ்தலியில், மரணத்தின் பிடியில்.
இந்த நிகழ்ச்சிகளை எண்ணி “மேவாருக்கு இழைத்த பாவப் பாசியை மார்வார் தனது ரத்தத்தால் துடைத்துவிட்டது” என்று தீர்மானித்த ராவ்ஜோடா “இந்த மார்வார் ராஜ்யத்தை மீண்டும் நிலைநிறுத்துகிறேன். மார்வார் ராஜவம்சத்தில் இன்னுமொருவன், இந்த ராவ்ஜோடா, சாகவில்லை இருக்கிறான்’ என்று தனது மார்பை ஒருமுறை வலது கையால் தட்டிக்கொண்டான். அந்த பெருமிதத்துடன், உறுதியுடன் ஏக்கத்தை உதறி தூரத்தே கண்ணுக்கெழுந்த மலைச்சிகரமொன்றை நோக்கினான். அங்குதான் தனக்கு விடிமோட்சமிருக்கிறதென்பதையும் புரிந்துகொண்டான். பாகுர்ச்சிரா (பட்சிகளின் சரணாலயம்) என்று பிரசித்தி பெற்ற அந்த மலைச்சிகரம் பட்சிகளைப் போலவே தனக்கும் அடைக்கலம் அளிக்க முடியும் என்று எண்ணி அதை நோக்கிப் புரவியை நடத்தினான்.
நாழிகைகள் ஓடின. மெள்ள அந்த மலை உச்சி, மலைவாயிலில் கதிரவன் விழுந்துவிட்ட நேரத்தில் நன்றாகவே கண்ணுக்குத் தெரிந்ததால், மனத்தில் நிம்மதியுடன் புரவியைச் செலுத்தி அதன் அடிவாரத்துக்கு ராவ்ஜோடா வந்த நேரத்தில் இருள் ஓரளவு அடர்ந்தேவிட்டது. இருளில் பெரும் பிசாசு போல் உயர்ந்து நின்ற அந்த மலையும், மலையின் அடர்த்தியான மரங்களும், சலசலவென்று எங்கோ ஓடிய இரண்டொரு அருவிகளின் ஒலியும், மலைச்சிகரத்தை அடைந்து கூண்டுகளில் புகுந்துவிட்ட பட்சி ஜாலங்களின் நானாவித கூச்சல்களும் அச்சத்தையும் இன்பத்தையும் கலந்தே அளித்தாலும், அச்சமென்பதை லவலேசமும் அறியாத அந்த ராஜபுத்திர வீரன் இன்பத்தை மட்டும் மனத்தில் வாங்கி புரவியை மலைமீது ஏறவிட்டான்.
எத்தனையோ சுகதுக்கங்களை தனது எஜமானுடன் பகிர்ந்து கொண்டிருக்கும் அந்த வீரப்புரவியும் செங்குத்தான அந்த மலையில் சற்று கஷ்டத்துடனேயே ஏறிச் சென்றது. கரடு முரடான பாதையில் அதன் கால்கள் சிற்சில சமயங்களில் கற்களை இடறி உருட்டினாலும், மரங்கள் சில உடலில் உராய்ந்தாலும், அவற்றையெல்லாம் சமாளித்துக்கொண்டு ஏறிய புரவியும் உச்சிக்கு சிறிது தூரத்தில் வந்ததும் வயிறு ஏறி இறங்கி இறைக்க வாயில் நுரை தள்ள சிறிது நின்றது. அதன் சிரமத்தை உணர்ந்த ராவ்ஜோடா அதன் முதுகிலிருந்து இறங்கி தனது சட்டைத் துணியில் அதன் வாயிலிருந்த நுரையைத் துடைத்துவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தான். அவன் தேடி வந்த இடம் கண்ணுக்குத் தெரியவில்லை. மலையின் உச்சியைச் சுற்றி வாயைத் திறந்து கொண்டிருந்த எத்தனையோ குகைகளில் எந்தக் குகையில் வனப்பிரஸ்த ஜோகி இருப்பார் என்று எண்ணிப் பார்த்தான் சில விநாடிகள். பிறகு மலைச்சரிவில் ஏறினான் கால் நடையாக. அவன் கண்களில் பக்கத்து மரங்களிலிருந்து தொங்கிய இரண்டொரு கயிறுகள் படவே ஜோகியின் இருப்பிடம் பக்கத்தில்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் இருபுறம் தலையைத் திருப்பி நோக்கிய ஜோடாவின் கண்களில் சிறிது தூரத்திலிருந்த ஒரு வெளிச்சம் தெரியவே அதை நோக்கி நடந்தான்.
அந்த வெளிச்சம் தெரிந்த இடம் கிட்டே வரவர அதன் ஜ்வாலையும் நன்றாகத் தெரிந்தது அவன் கண்களுக்கு. புரவி பின்னால் நடந்துவர அந்த ஜ்வாலையை நோக்கி நடந்த ராவ் ஜோடா, அது இருந்த இடத்தை சமீபித்ததும் தான் தேடிவந்த மலைக்குகை அதுதானென்பதைப் புரிந்துகொண்டதால் மகிழ்ச்சியையும் தன் துக்க சிந்தனையில் வரவழைத்துக் கொண்டு ஜ்வாலையை அணுகினான்.
அதே சமயத்தில் அந்த ஜ்வாலையும் குகைக்குள்ளேயிருந்து நகர்ந்து அந்த வாலினை நோக்கி வந்தது. குகைவாயிலை அடைந்ததும் ஜ்வாலை நகர்ந்து வந்த காரணத்தை மார்வார் இளவரசன் புரிந்து கொண்டான். அந்தப் பந்தத்தை ஏந்தி குகை வாயிலில் நின்றிருந்தாள் ஒரு பெண். மலையின் செழிப்பெல்லாம் அவள் வனப்பில் தெரிந்தது. உடை அதிகமாக இல்லை. மரவுரிதான் தரித்திருந்தாள். ஆனால் அவள் நாசியை அலங்கரித்த வைர நத்து அவள் துறவியல்லவென்பதை அறிவித்தது. அவள் கண்கள் ஜோடாவைக் கண்டதும் பளபளத்தன பந்தத்தின் வெளிச்சத்தில்.
“இங்கு ஏன் வந்தாய்?” என்ற அவள் கேள்வியில் குரூரம் இருந்தது.
“வனப்பிரஸ்த ஜோகியைப் பார்க்க வந்தேன்” என்றான் மார்வார் இளவரசன்.
அவள் சிறிது சிந்தித்தாள். “உன் கைகளை அதோ அந்தச் சுனையில் சுத்தம் செய்துகொண்டு வா” என்று கூறினாள், சிறிதும் கருணை ஒலிக்காத வரண்ட குரலில்.
“லூனியில் நீராடித்தான் வந்திருக்கிறேன்” என்றான் ராவ் ஜோடா.
“ரத்தம் படிந்த உன் கைகளை லூனி போக்க முடியாது. அந்த அருவியால் முடியும்” என்றாள் அந்த மலைப்பெண். மீண்டும் அருவியைச் சுட்டிக் காட்டினாள் தலையின் லேசான அசைப்பினால்.
“ரத்தமா? ஏது ரத்தம்?” என்று தனது கைகளை பந்த வெளிச்சத்தில் காட்டினான் மார்வார் அரசகுமாரன்.
“பாவத்தின் ரத்தம் பந்தத்தில் தெரியாது. போய் சுத்தம் செய்து வா” என்றாள் அந்த அழகி மீண்டும்.
அதிர்ச்சியுற்று நின்றான் மார்வார் இளவரசன். பந்தத்தின் சுடரின் பக்கத்தில் நின்றிருந்தாள் அந்த சுடர்க்கொடி. அவள் முகத்தில் எந்தவித உணர்ச்சியுமில்லையென்று சொல்ல முடியாது. வெறுப்பு தாண்டவமாடவே செய்தது.
அவளை மீண்டும் ஒருமுறை நோக்கிய அரசகுமாரன் அவள் கண்களில் தெரிந்த உறுதியால் சட்டென்று திரும்பி அருவியை நோக்கிச் செல்லக் காலடி எடுத்து வைத்தான்.
“நன்றாக அலம்பு சிசோதய வம்சத்துக்குச் செய்த பாவத்தின் கறையை” என்ற இரக்கமற்ற அவள் சொற்கள் அவன் காலடியைத் தேக்கின. சிந்தனையையும் தூண்டின.
திரும்பி நோக்கினான் அவளை ராவ்ஜோடா. “யார் சொன்னது உனக்கு?” என்று வினவினான்.
“முக்காலமும் அறிந்தவர்.”
“ஜோகியா?”
பதிலுக்கு தலையை மட்டும் அசைத்தாள் அவள். அந்த அசைப்பில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்ததை அந்த வாலிப வீரன் புரிந்து கொண்டான்.

சாண்டில்யன் மூலம் மேலும் புத்தகங்கள்

40
கட்டுரைகள்
மலை அரசி
0.0
மாலை அரசி தமிழ் மொழியில் எழுதப்பட்ட ஒரு அற்புதமான வரலாற்று நாவல். பிரபல தமிழ் எழுத்தாளர் சாண்டில்யன் இந்த மனதை மயக்கும் புத்தகத்தை எழுதியுள்ளார். சாண்டில்யன் வரலாற்றுப் புனைகதைகளுக்காகப் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார், மேலும் அவர் தனது வரலாற்று, காதல் மற்றும் சாகச நாவல்களுக்காக நன்கு அறியப்பட்டவர், இது பெரும்பாலும் சோழ மற்றும் பாண்டிய பேரரசுகளின் காலங்களில் அமைக்கப்பட்டது.
1

1. சுடர்க்கொடி

15 January 2024
0
0
0

சரித்திரம், பூமி, வாழ்க்கையின் கர்ம பலன்கள் ஆகிய சகலத்திலும் ஒரு சுழற்சியும் தொடர்ச்சியும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுவதில் எத்தனை உண்மையிருக்கிறதென்பதை, சுற்றிலும் தன்னை எரித்துக்கொண்டிருந்த மணற்பரப்

2

2. விளக்கில் விரிந்த கதை

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் மலைக்குகை வாயிலில், மரங்கள் அடர்த்தியாயிருந்ததால் இருள் கடுமையாக இருந்த அந்தப் பிராந்தியத்தில், பந்தத்தை கையில் ஏந்தி அதன் சுடர் முகத்தில் வீச சுடர்க்கொடியென்ற காரணப் பெயருக்கு முற

3

3. துணைவன்!

15 January 2024
0
0
0

விரிந்து படர்ந்து எரிந்த விளக்கின் சுடரை விந்தைக் கண்களுடன் நோக்கிய ராவ்ஜோடா. அதில் விரிந்த கதையைக் கண்டதும் மெய்சிலிர்த்துப் போனான். முதலில் அந்தச் சுடரில் ஏதும் தெரியாததால் புரியாமல் விழித்த மார்வ

4

4. இரு விந்தைகள்

15 January 2024
0
0
0

மலை அரசியின் மதுர இதழ்களில் இருந்து உதிர்ந்த அந்தக் கொடுமையான சொற்களைக் கேட்டதும், வியப்பும் அச்சமும் கலந்த உணர்ச்சிகள் ராவ்ஜோடாவின் இதயத்தை மளடுருவிச் சென்றன. அப்படி அவன் நடுங்கியதை பக்கத்தில் உட்கார

5

5. நான் வருவேன்

15 January 2024
0
0
0

வனப்பிரஸ்த ஜோகியின் குகையைவிட்டு வெளியேறிய மலை அரசி, வேகமாக மலையின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடந்து சென்றதும், விளைவித்த இரண்டு விந்தைகளும் மகாவீரனான மார்வார் இளவரசனை திகில் கொள்ளச் செய்தன என்றால்,

6

6. பெண் துணை!

15 January 2024
0
0
0

பெண்ணின் லாவண்யத்தால் ஆண்மகன் அறிவு அழிந்துவிடுகிறது. கவர்ச்சியான கன்னியின் முன்பாக எந்த ஆண்மகனும் சுயபுத்தியை இழந்துவிடுகிறான். இந்தப் பழைய நிகழ்ச்சிகளுக்கு அத்தாட்சியாக நின்றான் ராவ்ஜோடா. “உனது வீ

7

7. சாகுந்தலம்

16 January 2024
1
0
0

பந்தத்தையும் அணைத்துவிட்டு இருண்ட குகைக்குள் தன்னை வா வா என்று அழைத்த அந்த பருவப் பாவையின் துணிவை நினைத்து ஜோடா திகிலுக்கு இலக்காகி நின்ற நேரத்தில், மலைஅரசியே குகை வாயிலைவிட்டு அவனை அணுகி, அவன் கையைப்

8

8. காட்டு மலர்

16 January 2024
1
0
0

பாவின் வாலிப முரட்டு முகம் அவள் வழவழத்த கழுத்தில் திடீரென அழுந்திப் புரண்டபோது, மலை அரசியின் இதயமும் அந்த வாலிபன் உள்ளத்தைப்போலவே உணர்ச்சி அலைகளில் உருண்டது. அத்தனை உணர்ச்சி எழுச்சியிலும் அரசகுமாரன்

9

9. நிலையற்ற அரசு

16 January 2024
1
0
0

மலை அரசியை “காட்டு மலர்” என்று குறிப்பிட்டதோடு தனது பேச்சை ஜோடா நிறுத்திக்கொண்டு இருந்தால் ஜகத்சிம்மனின் கோபம் தலைக்கு ஏறியிருக்காது. “இவள் மார்வார் ராணி” என்றும் சொல்லவே ஜகத்சிம்மனுக்கு கோபத்துடன் தி

10

10. பறந்த கிளி! தொடர்ந்த துன்பம்!

16 January 2024
1
0
0

மலை அரசியின் சொற்களோ உத்தரவுகளோ மந்திராலோசனை சபையில் இருந்தவர்களுக்குக் கட்டோடு பிடிக்காதிருந்தாலும் அவள் சொன்னதற்கு எல்லாம் ஜோடா தலையை ஆட்டியதால், அவள் கட்டளைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் எல்லோருமே முன

11

11. மண்டோர் ரணகளம்

16 January 2024
1
0
0

மண்டோரின் பெரும் கதவுகள் சாத்தப்பட்டதாலும் போர்முரசு பலமாக ஒலித்ததாலும் வருவது என்னவென்பதை அறிந்த புது மகாராஜாவான ராவ்ஜோடா, புரவியின் கடிவாளத்தை பிடித்த நிலையிலேயே திகைத்து அமர்ந்துவிட்ட சமயத்தில் மலை

12

12. குகையில்...!

16 January 2024
1
0
0

பெற்றோர் புரிந்த பாவம் சிலரைப் பிடித்து வாட்டுகிறது. உற்றார் செய்த பாவமும் சிலரை விடுவதில்லை. பெற்றோரும் உற்றாரும் விளைவித்த பாவங்களுக்கு எப்பாவமும் அறியாத ஜோடா இலக்கானான். பேரனான மோகுல சிம்மனை சீராட்

13

13. அவள் கனவு!

16 January 2024
1
0
0

மலை அரசியைப் பார்த்து மார்வார் இளவரசனாயிருந்து அரசனாகி, நாட்டையும் பறிகொடுத்த ராவ்ஜோடா, அத்தகைய ஒரு கேள்வியைக் கேட்டான் என்றால், அதற்கு மூலகாரணம் அவளுடைய விபரீதமான பதில்தான். “நாம் தனித்திருப்பது உனக்

14

14. தண்டனை!

17 January 2024
1
0
0

மலை அரசியை தரையில் கிடத்திவிட்டு குகையின் வாயிலுக்கு வந்த ராவ்ஜோடாவின் செவிகளில் ஜகத்சிம்மனும் மற்ற வீரர்களும் ஏறிவந்த புரவியின் குளம்படி ஒலிகள் கூடக் கேட்கவில்லை. குகைக்கு உள்ளே மலை அரசியின் அருகாமைய

15

15. ஹர்பா சங்க்லா!

17 January 2024
0
0
0

மலை அரசியால் மன்னிக்கப்பட்டு ஜோடாகிருக்குச் செல்லும்படி பணிக்கப்பட்ட ஜகத்சிம்மன் உடனடியாகத் திரும்பவில்லை தனது புரவியை நோக்கி நின்ற இடத்திலேயே அசைவற்று நின்றான் பல விநாடிகள். பிறகு சட்டென்று வேகமாக நட

16

16. அந்தி வானம்

17 January 2024
0
0
0

அதிர்ஷ்டம் என்பது ஒரு மனிதனைப் பிடித்துக்கொண்டால் அவனை அது லேசில் விடுவது இல்லை. கூடியவரையில் விடாமல் தொடர்கிறது. துரதிர்ஷ்டக்காரனுக்கு புத்தி பேதலிக்கிறது. காலம் கைகொடுப்பது இல்லை. எதையும் காலங்கடந்த

17

17. வாளின் கதை!

17 January 2024
0
0
0

ஜோடாவைப்பற்றி விசாரித்ததும் மலை அரசியின் மதிமுகம் அந்திவானம் போல் சிவந்துவிட்டதைக் கண்டதுமே நைஷ்டிக பிருமச்சாரியும், எந்தப் பெண்ணையும் கண்ணெடுத்துப் பார்க்காதவரும், பிருமச்சாரி விரதம் கெடக்கூடாது என்ப

18

18. தேடி வந்த அதிர்ஷ்டம்!

17 January 2024
0
0
0

மார்வார் மன்னனையும் மலைக்க வைத்த அந்த விசித்திரக் கதையைச் சொல்லுமுன்பு பிருமச்சாரி அந்தச் சிறு வீட்டின் முற்றத்தை வளைத்திருந்த சுற்றுக் கட்டடத்தின்மீது உட்கார்ந்து கீழ் இருந்த முற்றத்தில் தமது கால்களை

19

19. பாலைவனக் கூடாரம்

17 January 2024
0
0
0

இரவு தந்த இருளில், மலைக்காடு வீசிய இதமான காற்றில், சாளரத்துக்கு அருகில் இருந்த மகிழ மரம் பரவவிட்ட சுகந்தத்தின் சூழ்நிலையில், மலை அரசியை சூழ்ந்து நெருக்கிய ஜோடாவின் கரங்கள் நெருக்கியதோடு நில்லாமல் இன்ப

20

20. கரிய புரவி! கழுத்தில் ஈட்டி!

18 January 2024
0
0
0

ஜோடாவின் பரம விரோதியான சந்தசிம்மனின் மூத்த மகன் காந்தாஜி தன் வாளை உருவிக்கொண்டு ராவ் ஜோடாவை அணுகுவதற்கு முன்பே ஜோடா பிருமச்சாரியளித்த தனது பெரிய வாளை உருவி எதிரியைத் தடுத்தான். அவனைச் சேர்ந்த பத்து பத

21

21. மலைச்சாரல் ஓசை

18 January 2024
0
0
0

கழுத்தில் பதித்திருந்த ஈட்டி சற்றும் அசையாமல் இருந்தாலும் அதில் ஒரு திடமும், ஈட்டியைப் பிடித்திருந்தவன் கையில் ஈவு இரக்கமற்ற ஓர் உறுதியும் இருந்ததைக் கவனித்த ராவ்ஜோடா, தான் சிறிது அசைந்தாலும் அந்த ஈட்

22

22. பரீட்சை

18 January 2024
0
0
0

பாபுஜியின் நூறு புரவிகள் ஏதோ பெரும் புயலைப் போல் மலைச்சரிவில் வந்ததாலும், அவை கண்ணிமைக்கும் நேரத்தில் தனது புரவியில் இருந்து தன்னை வீழ்த்திவிட்டதாலும் மலைப்பாறையில் புரண்ட ஜோடா வெகு துரிதமாகப் பாறையில

23

23. அடவியில் ஒரு காட்சி!

18 January 2024
0
0
0

நீண்டநாள் பிரிந்த மகனை ஆர்வத்துடன் தழுவும் தந்தை போல ஜோடாவை பல விநாடி தழுவி நின்ற பாபுஜி, கடைசியில் அவனுக்குத் தமது கைகளில் இருந்து விடுதலை அளித்தபோது அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் இரண்டு தே

24

24. காதல் பாபமா?

18 January 2024
0
0
0

அடர்ந்த அந்த அடவிக்குள் நாலைந்து பங்கஜங்களை நீர்மட்டத்துக்குமேல் காட்டிக்கொண்டிருந்த சிறு வாவியின் கரையில் மலை அரசியும் ஜோடாவும் உட்கார்ந்திருந்த நிலையைக் கண்டதும் இரண்டு பிருமச்சாரிகளும் தங்கள் பிரும

25

25. ஜோடாவின் துணிவு!

18 January 2024
0
0
0

பாபுஜியும், பிருமச்சாரியும் விழிப்பதைப் பார்த்த ஜோடா, “உங்கள் இருவருக்கும் வரவர சுயநம்பிக்கை போய்விட்டது” என்று ஓர் அம்பை வீசினான். அதுவரை தாங்கள் கண்ட காட்சியால் குழப்பத்தில் இருந்த இரு பிருமச்சாரி

26

26. சாவுகாரைப் பிடித்த சனியன்!

18 January 2024
0
0
0

மண்டோர் அரசின் முதலமைச்சராயிருந்து, சந்தசிம்மன் ஆக்கிரமிப்புக்குப் பின்பு அந்தப் பதவியில் இருந்து விலகி, அரண்மனையில் தமக்கு முன்னாள் மன்னனால் அளிக்கப்பட்டு இருந்த இடத்தையும் சந்தசிம்மனிடம் ஒப்புடைத்து

27

27. அடைத்த கதவு!

18 January 2024
0
0
0

காந்தோஜியின் குறுவாள் அழுந்தியதாலும், எச்சரிக்கையாலும், அவன் பின்னால் நின்றிருந்த மஞ்சாஜியின் உதடுகளில் துளிர்த்திருந்த குரூரப் புன்முறுவலாலும், சாவுகார் அஞ்சி நடுநடுங்கிவிடுவார் என்றோ, முன்னே நடந்துவ

28

28. வேடர் குடிசை மர்மம்!

18 January 2024
0
0
0

கோட்டைக் காவலன் சொன்ன செய்தியால் மலைத்த இருவரில் சாவுகாரே முதலில் திகைப்பை உதறிக்கொண்ட தன்றி சமயாசந்தர்ப்பம் தெரியாமல் கோப்தையும் காட்டினார். “காவலனே! வணிகர்களைத் தடை செய்யும் வழக்கம் மார்வாரில் கிடைய

29

29. உள்ளே ஒரு பெண் குரல்!

18 January 2024
0
0
0

அன்று பகல் முழுவதும் மார்வார் படைத்தலைவனான ஜகத்சிம்மனுக்கும் மண்டோர் கோட்டை காவலனுக்கும் உணவு முதலிய விஷயங்களில் ராஜோபசாரம் நடந்தாலும், அவ்விருவரும் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் எந்த வேடனும் நேரடியாக ப

30

30. ஜோடாவின் துன்மார்க்கம்!

19 January 2024
1
0
0

மூன்று குணங்களை மனிதன் தவிர்ப்பது நல்லது. தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் அக்கறை காட்டுவது, ஒன்று. ஒட்டுக் கேட்பது, இரண்டு. காலதாமதம் செய்வது, மூன்று. இந்த மூன்றில் ஏதாவது ஒரு குணமே யாரையும் இக்கட்ட

31

31. மணக்கோலம்!

19 January 2024
1
0
0

வீரனாகப் படைகளை இயக்கி, இழந்த அரசை மீட்பதில் சித்தத்தை செலுத்த வேண்டிய மார்வார் மன்னன், கேவலம், பெண் மோகம் கொண்டவனாகக் குடிசையில் மறைந்து கொண்டு காலத்தை ஓட்டுவதை நினைத்த ஜகத்சிம்மன் வேடவர் குடிசைக் கூ

32

32. சந்திர முகம்

19 January 2024
1
0
0

மண்டோர் படைத்தலைவனான ஜகத்சிம்மன் தனது மன்னனின் திருமணத்தையே நிறுத்த முயன்றதும், அதற்காகக் கூச்சலிட்டதும் பலருக்கு கோபத்தையும் சிலருக்கு வியப்பையும் உண்டாக்கினாலும், பிருமச்சாரி ஹர்பாசங்க்லாவோ, திருமணப

33

33. இழந்த சொர்க்கம்

19 January 2024
1
0
0

ராவ்ஜோடாவின் அணைப்பில் இருந்த அழகியின் சந்திர வதனத்தைக் கண்டதும் ஜகத்சிம்மன் திகைப்பும் அதிர்ச்சியும் ஒருங்கே அடைந்தான் என்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. அந்த முகம் மலை அரசியின் முகம்! முகத்

34

34. பதவி இறக்கம்!

19 January 2024
1
0
0

மலை அரசியின் மறுபிம்பம் போன்ற மின்னிடையாளுடன், ஜோடா கலந்து விளையாட இருந்த சமயத்தில் பிருமச்சாரி ஹர்பாசங்கலா அங்கு தோன்றியதும் கதவைத் தட்டியதும் பரமானந்தமாயிருந்தது, மண்டோர் படைத்தலைவன் ஜகத்சிம்மனுக்கு

35

35. மீண்டும் வந்தாள்!

19 January 2024
1
0
0

மண்டோரின் படைத்தலைவனாக இருந்த தன்னை திடீரென உபதளபதியாக்கிவிட்ட மன்னன் செயலைக் கண்டு மனம் துடித்த ஜகத்சிம்மன் அந்த அவமானத்தில் இருந்து எப்படி மீளலாம் என்று சிந்தித்தான். அது தவிர இந்த திடீர் பதவி இறக்க

36

36. மண்டோர் சமர்

19 January 2024
1
0
0

கேவலம், ஒரு பெண், புரவியில் இருந்து இறங்க, அவள் காலுக்குப் படியாக தனது இரு கைகளையும் கோத்து நீட்டிய பிருமச்சாரியிடம் பெரிதும் வெறுப்புக் கொண்டான், ஜகத்சிம்மன். பிருமச்சாரி உண்மையில் பெரும் போலி பிருமச

37

37. மணலில் தோய்ந்த ரத்தம்

19 January 2024
1
0
0

மண்டோர் போரில் மாவீரர்களான சந்தசிம்மன் புதல்வர்கள் அடைந்த தோல்விக்குக் காரணம் தாங்கள் போரிடும் எதிரிகளின் திறனை அவர்கள் தவறாக எடைபோட்டதுதான் என்று கர்னல் ஜேம்ஸ்டாட் தமது ராஜபுதன வரலாற்று நூலில் தெளிவா

38

38. துரோகி!

19 January 2024
1
0
0

மலை அரசி தனது வளையல் கரங்களை நீட்டி தன்னைக் கைது செய்யும்படிக் கேட்டுக்கொண்டதும் காந்தோஜி தனது தம்பியின் மரணத்தையும் மறந்து வியப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே அடைந்தான். அப்பொழுதும் மலை அரசி வேட்டுவர

39

39. வேகம்! தாகம்!

19 January 2024
1
0
0

மேவாரின் தலைநகரான சித்தூரில் இருந்து தப்பி ஓடிவந்து லூனி ஆற்றின் உப்பு நீரில் தந்தையின் மரணத்துக்கு நீராடிய அதே துறையில், கிட்டத்தட்ட அதே இடத்தில் தங்கள் வம்ச துர்ப்பாக்கியத்துக்கும் அவப் பெயருக்கும்

40

40. அரசி ஆன, மலை அரசி!

19 January 2024
1
0
0

மலை அடிவாரப் புதரில் மலை அரசி மல்லாந்து கிடந்த கோலம் மண்டோர் மன்னனின் வெறியைக் கிளறிவிடவே, அவன் உலகத்தையே மறந்து, அதுவரை நேர்ந்த நிகழ்ச்சிகளால் மனம் ஏற்படுத்திய கட்டுப்பாடுகளையும் தடைகளையும் உதறி அவள்

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்