மலை அரசி தனது வளையல் கரங்களை நீட்டி தன்னைக் கைது செய்யும்படிக் கேட்டுக்கொண்டதும் காந்தோஜி தனது தம்பியின் மரணத்தையும் மறந்து வியப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே அடைந்தான். அப்பொழுதும் மலை அரசி வேட்டுவர் உடையையே அணிந்திருந்ததால், காந்தோஜி அவள் கையில் காட்சியளித்த மங்கல கங்கணத்தை மட்டுமின்றி, கழுத்தில் துலங்கிய மங்கல சூத்திரத்தையும் பார்க்க முடிந்தது.
அவற்றில் இருந்து மலை அரசி ராவ்ஜோடாவுக்கு மாலையிட்ட மனைவி என்பதை உணர்ந்த காந்தோஜி மலை அரசியை உற்று நோக்கி, “மகாராணி! மேவார் அரச குமாரர்கள் இன்னும் பெண்களைச் சிறை செய்யும் அளவுக்குத் தாழ்ந்து விடவில்லை. ஆனால், பின்வாங்கிச் செல்லும் படைமீது விழுந்து அழிக்க முயலும் ராஜபுத்திரனை, அதாவது மண்டோர் மன்னனை நாங்கள் விட்டுச் செல்ல முடியாது” என்று கூறினான்.
இதைக் கேட்ட மலை அரசியின் கண்களில் துன்பச் சாயைக்குப் பதில் அனுதாபத்தின் சாயையே விரிந்தது.
“காந்தோஜி! மன்னர், பிருமச்சாரியுடன் உங்களைத் தனியாக அணுகியிருக்கிறார் என்பதில் இருந்து ஏதும் புரியவில்லையா உங்களுக்கு?” என்று வினவினாள் மலை அரசி.
“என்ன புரிய வேண்டும்?” என்று சற்று கோபத்துடன் வினவிய காந்தோஜி மணலில் இருந்து பிருமச்சாரியால் தூக்கப்பட்ட தம்பியின் சடலத்தின் மீது தனது கண்களை ஓட்டினான்.
இதற்கு மலை அரசி பதில் சொல்லுமுன்பு பிருமச்சாரியே முந்திக்கொண்டார்.
“காந்தோஜி! இந்தப் போர் மூள்வதற்கு முன்பே, நீங்கள் பின்வாங்கும் பட்சத்தில் உங்களை துரத்தக் கூடாது என்றும், மண்டோர் மண்ணில் மேவார் ரத்தம் எதுவும் சிந்தக்கூடாது என்றும் மண்டோர் மன்னர் திட்டவட்டமாக உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். அதையும் மீறி வந்தான் ஜகத்சிம்மன். அதற்குக் காரணமும் இருக்கிறது. அவன் மேவாருக்கும் துரோகி; மண்டோருக்கும் துரோகி. ராஜபுதனத்தை அழிக்க வந்த கோடரிக்காம்பு அவன். அவன் மீது குறுவாளை வீசியது ராவ்ஜோடாதான். இதோ என் கையில் இருக்கும் உன் தம்பியின் சடலத்தின்மீது ஆணையாகச் சொல்கிறேன்” என்றார் பிருமச்சாரி. அத்துடன் மஞ்சாஜியை மேவார் வீரர்களிடம் ஒப்படைத்துவிட்டு மண்ணில் பொய் மயக்கம் கொண்டு கிடந்த ஜகத்சிம்மனைத் தூக்கி நிற்க வைத்தார்.
“இவன் காயம் அற்பமானது. இவனை விசாரணைக்குக் கொண்டுவர வேண்டும் என்றே ஜோடா தமது குறுவாளை இவன் இடைக்குக் குறி வைத்தார்” என்று கூறி அந்தக் குறுவாளைப் பிடுங்கி மன்னனிடம் கொடுத்து ஜகத்சிம்மன் காயத்துக்குக் கட்டும் கட்டினார்.
சுற்றிலும் தனது வீரர்களும் மேவார் வீரர்களும் நிற்க, பிருமச்சாரியால் பலவந்தமாகத் தூக்கி நிறுத்தப்பட்ட ஜகத்சிம்மன் மிரள மிரள விழித்தான் ஒரு விநாடி. பிறகு தைரியமாகக் கேட்டான், “நான் செய்ததில் தவறு என்ன?” என்று.
“பின்வாங்கிய எதிரிகளைத் துரத்தியது; மன்னர் உத்தரவுக்கு எதிராக நடந்து கொண்டது” என்றாள் மலை அரசி.
“இதில் தவறு என்ன? முன்பு ராவ்ஜோடா சித்தூரில் இருந்து தப்பி ஓடி வந்தபோது மேவார் வீரர்கள் அவரைத் துரத்தி வரவில்லையா? அவர்களைத் தலைமை வகித்து நடத்தி வந்ததும் சந்தசிம்மன் புதல்வர்கள்தானே?” என்று கேள்வியை வீசினான் ஜகத்சிம்மன்.
காந்தோஜியின் கண்கள் குறுகின ஒரு விநாடி. பிறகு, “ராவ்ஜோடா தப்பி ஓடியதைச் சொல்லி துரத்தச் சொன்னது நீதானே?” என்று கேட்டான் ஜகத்சிம்மனை நோக்கி காந்தோஜி.
“கதை நன்றாகத் தொடர்கிறது” என்றான் ராவ்ஜோடா.
“என்ன கதை ஜோடா” பிருமச்சாரி வினவினார் சிறிது சந்தேகத்துடன்.
ஜோடா, ஜகத்சிம்மனைக் கூர்ந்து நோக்கினான்.
“என் தந்தை வெட்டப்பட்டதை அறிவித்து சித்தூரைவிட்டு என்னை ஓடச் சொன்னவனும் ஜகத்சிம்மன்தான்” என்ற ராவ்ஜோடா, மேலும் சொன்னான், “அதுமட்டுமல்ல! என்மீது பிருமச்சாரிக்குப் பகை உண்டாக்க முயன்றவனும் இவன்தான். எனக்கும் இன்னொரு பெண்ணுக்கும் உறவு உண்டு என்று சொல்லி எங்கள் திருமணத்தையும் நிறுத்தப் பார்த்தான் இவன்” என்று சொல்லி மலை அரசியை நோக்கினான்.
“ஆம். இவன் மகா துரோகி” என்றாள் மலை அரசி.
அந்தக் குரலைக் கேட்ட ஜகத்சிம்மன் தேள் கொட்டியவன்போல் துள்ளினான். “இவள் மலை அரசி அல்ல, இவள்தான் அந்த வேட்டுவச்சி” என்று கூவினான்.
அப்பொழுதும் மலை அரசி மசிந்தாள் இல்லை.
“இவன் மகா துரோகி” என்று இரண்டாம் முறை சொன்னாள்.
இம்முறை பேயறைந்தவன்போல் நின்றான். “இவள் மலை அரசிதான்; சந்தேகமில்லை. இந்தக் குரல் மலை அரசியுடையதுதான். இவள் அவள் அல்ல” என்று உளறினான்.
“எவள் எவளல்ல?” என்று சீறினான் காந்தோஜி.
“ஆம். சொல் ஜகத்சிம்மா?” என்று மரியாதையை விட்டுப் பேசினாள் மலை அரசி.
இதைக் கேட்டதும் திகைத்தான் ஜகத்சிம்மன்.
“இந்தக் குரல் வேட்டுவப் பெண்ணுடையது....” என்று கூறிய மண்டோர் படைத் தலைவன் “அடி மோசக்காரி! நீயே இரண்டு குரலில் பேசி என்னை மோசம் செய்தாயா?” என்று அவள்மீது பாயப் போனான்.
அவன் ஊட்டியை காந்தோஜியின் வாள் தடவி நின்றது.
“நில் அப்படியே. இல்லையேல் பிணமாகிவிடுவாய்” என்று காந்தோஜியின் குரலும் கடுமையாக ஒலித்தது. அதனால் நின்ற இடத்தில் ஜகத்சிம்மன் நின்றுவிடவே காந்தோஜி வினவினான், “ராவ் ஜோடா! மலை அரசி எதற்காக இரு குரலில் பேசுகிறாள்?” என்று.
“ஜகத்சிம்மன் துரோகி என்பதை நான் அறியுமுன்பே இவள் அறிந்து இருந்தாள். என்னிடமும் சொன்னாள். நான் நம்பவில்லை. என்னை நம்பவைக்க இரட்டைப் பிறவியாக நடித்தாள், பேசினாள். அது புதிதும் அல்ல. இவளுக்கு ஜோகியின் குகைக்கு அருகே உள்ள காடுகளில் பறவைகளுடனும் மிருகங்களுடனும் பழகியிருக்கிறாள். அந்தப் பறவைகளின் மொழி இவளுக்குப் பழக்கம். ஆகையால் குரலை மாற்றிப் பேசுவது இவளுக்கு ஒரு கஷ்டமல்ல” என்ற ராவ்ஜோடா, “ஜகத்சிம்மன் முதலில் என்னை ஓடவைத்தான் சித்தூரில் இருந்து. என்னைக் கோழையென பறைசாற்றினான். பிறகு எனக்காக வேவு பார்ப்பதாகச் சொல்லி மண்டோர் நகரிலும் வசித்தான். ஆனால் அங்கு எனக்கு எதிராகப் பிரசாரம் செய்துகொண்டு இருந்தான். இவன் அறிவிக்காவிட்டால் நான் மாளிகையில் இருந்தது மேவார் வீரர்களுக்குத் தெரிய நியாயமில்லை. பலவித நாடகங்கள் ஆடினான், சதி செய்தான், மலை அரசியையும் என்னையும் பிரிக்க முயன்றான்” என்று விளக்கினான்.
“பொய்! பொய்! முழுவதும் கட்டுக்கதை” என்று கூவினான் ஜகத்சிம்மன். ஆனால் அவன் முகம் அவன் சொல்வது பொய் என்பதைத் தெளிவாகக் காட்டியது. மண்டோர் படைத்தலைவன் முகத்தில் அச்சமும் விவரிக்க இயலாத வெறுப்பும் கலந்து தாண்டவமாடின.
“இந்த ஜோடா ஒரு கோழை, இவன் ஓடியதற்கு நான் பொறுப்பாளி அல்ல” என்றும் பதற்றத்துடன் பேசினான் ஜகத்சிம்மன்.
மன்னனிடம் அடியோடு மரியாதையைக் கைவிட்டு ஜகத்சிம்மன் பேசியதை அனைவரும் கவனித்தனர். ஆனால் வேறு யாரும் அவனுடன் பேசவில்லை. காந்தோஜியே கேட்டான், “எதற்காக நீ மண்டோரின் துரோகியாக மாறினாய்?” என்று.
“காரணம் நான் சொல்கிறேன்” என்ற ஜோடாவின் குரல் பயங்கரமாக ஒலித்தது.
“சொல் ஜோடா. இத்தனை நாள் நீ அடக்கி வைத்திருந்த உண்மை வெளிவரட்டும்” என்று ஊக்கினார் பிருமச்சாரி.
ஜோடா சிறிது தயங்கினான். பிறகு மெதுவாகச் சொன்னான், “மண்டோர் அரியணைக்கு எனக்கு அடுத்த வாரிசு ஜகத்சிம்மன்” என்று.
ஜோடா சொன்னது உண்மை என்பதற்கு சாட்சியம் தேவையில்லாமல் இருந்தது. ஜகத்சிம்மன் முகத்தில் சாட்சியம் எழுதி ஒட்டியிருந்தது. காந்தோஜி அந்த சமயத்தில் கேட்டான் கோபத்துடன், “என் வாளை இவன் கழுத்தில் இப்படியே அழுத்திக் கொன்றுவிடட்டுமா?” என்று.
“வேண்டாம்” என்றான் ஜோடா.
“ஏன்?” காந்தோஜியின் குரலில் வியப்பும் இருந்தது, வெறுப்பும் இருந்தது.
ஜோடா சொன்னான்: “முதலில் வீரனான மஞ்சாஜியின் ரத்தம் சிந்திய இடத்தில் இந்த துரோகியின் ரத்தம் சிந்தக்கூடாது. இந்த இடத்தில் மஞ்சாஜியின் நினைவுச் சின்னமாக நான் பெரிய வெற்றித்தூணைக் கட்டப்போகிறேன். தவிர இவன் மாளவேண்டியது என் கையால்.”
அத்துடன் ஜோடா தனது வாளை உருவிக்கொண்டான்.
“பிருமச்சாரி! இந்தத் துரோகியை நான் செல்லும் இடத்திற்கு அழைத்து வாருங்கள். எங்கள் சண்டையை லூனி ஆற்றங்கரையிலேயே தீர்த்துக்கொள்கிறோம்” என்று கூறி நதியின் கரையோரமாக நடந்து சென்றான்.
அவன் தீர்மானித்த இடத்தில் நின்றதும் ஜகத்சிம்மன் கையில் அவன் வாளும் கொடுக்கப்பட்டது.
ஜகத்சிம்மன், ஜோடா தயார் ஆகுமுன்பே அவன்மீது பாய்ந்தான் தனது வாளை உருவிக்கொண்டு. அதை அனாயாசமாகத் தடுத்த ஜோடா அந்த இரவில் பயங்கரமாக நகைத்தான்.
“உன்னிடம் நான் எதிர்பார்த்தேன் இதை” என்றும் கூறினான் நகைப்பின் ஊடே. பிறகு இருவருக்கும் மிகப் பயங்கரமாக சண்டை தொடர்ந்தது.
ஜகத்சிம்மன் பாய்ந்தும் முரட்டுத்தனமாகவும் போரிட்டான். அதனால் பலமுறை ஜோடாவின் வாள் முனையின் எல்லைக்குள் வந்தான். ஆனால், ஜோடா அவனைக் கொல்ல மறுத்தான். முதலில் ஜோடாவின் வாளின் நுனி ஜகத்சிம்மனின் ஒரு கண்ணில் பாய்ந்தது. பிறகு இந்திரஜாலம்போல் சுழன்று ஒரு காதை அறுத்து எறிந்தது. பிறகு மூக்கின் நுனியை மட்டும் சீவித் தள்ளியது. அடுத்து எதிரியின் உதடுகள் நடுவில் வெட்டப்பட்டன. கன்னத்தில் ஆழமான ஒரு காயம். அடுத்து ஜகத்சிம்மன் வாள் ஆகாயத்தில் பறந்தது. இத்துடன் போரை முடித்த ஜோடா “உன் உயிரைக் கொடுத்துவிட்டேன். போ” என்று வெறுப்புடன் கூறினான்.
அடுத்து நடந்தது யாரும் எதிர்பாராதது. ஜகத்சிம்மன் தனது குறுவாளைக் கச்சையில் இருந்து எடுத்து தனது வயிற்றில் புதைத்துக்கொண்டான். பிறகு, தள்ளாடி நடந்து லூனியின் உப்பு நீரில் விழுந்தான். அவன் குருதி உப்பு நீரில் கலந்து அதை செந்நீர் ஆக்கியது. விதியின் விந்தையை நினைத்து வியந்தான் ராவ் ஜோடா. மேவாரில் இருந்து வந்த போது அதே இடத்தில்தான் அவன் முதன் முதலாக இறங்கினான்.