கேவலம், ஒரு பெண், புரவியில் இருந்து இறங்க, அவள் காலுக்குப் படியாக தனது இரு கைகளையும் கோத்து நீட்டிய பிருமச்சாரியிடம் பெரிதும் வெறுப்புக் கொண்டான், ஜகத்சிம்மன். பிருமச்சாரி உண்மையில் பெரும் போலி பிருமசாரியாக இருக்க வேண்டும் என்றும் நினைத்தான். அவன் நினைப்பு ஊர்ஜிதமாக பிருமச்சாரி இன்னொரு பணியிலும் இறங்கினார்.
ராவ்ஜோடாவின் கூடாரத்துக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்ற பிருமச்சாரி, அவளை அவன் கூடாரத்துக்குள் செல்லப் பணித்து, மேலே செருகியிருந்த கூடார வாசல் படுதாவையும் இழுத்துத் தொங்கவிட்டு மன்னருக்கும் அந்த மங்கைக்கும் சிறிது அந்தரங்கத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது அவன் இதயத்தை எரிமலையாக்கியது. ஆகவே, மீண்டும் அவர் அவனிடம் வந்தபோது “உங்கள் பணி வர வர சிறப்பாக இருக்கிறது” என்று இகழ்ச்சி ததும்பும் குரலில் கூறினான் ஜகத்சிம்மன்.
பிருமச்சாரி உபதளபதியை விஷமப் பார்வையாகப் பார்த்து “சிறப்பான பணியைத் தவிர வேறு எதிலும் இறங்கும் பழக்கம் ஹர்பாசங்க்லாவுக்குக் கிடையாது என்பதை ராஜபுதனம் அறியும்” என்று கூறினார்.
“நீர் இப்பொழுது செய்தது...” என்று இழுத்தான் உபதளபதி.
“கடமை” என்ற பிருமச்சாரி அதற்குமேல் உபதளபதியைப் பேசவிடக் கூடாது என்றுதான் நினைத்தார். ஆனால் உபதளபதி வாயை மூட மறுத்து “அரசரிடம் பெண்ணைச் சேர்ப்பதுதான் உமது கடமையா?” என்று கேட்டான்.
“அரசியை பெண் என்று சாதாரணமாக அழைப்பது ராஜத்துரோகம். இதற்கு உமது தலையைச் சீவலாம்” என்று பிருமச்சாரி சர்வ சாதாரணமாகச் சொன்னார்.
“இவள் அரசியா!” பெரும் வியப்பு ஒலித்தது ஜகத்சிம்மன் குரலில்.
“வேறு எப்படி நினைக்கிறீர்?” பிருமச்சாரி நகைத்தார்.
“அப்படியானால் மலை அரசி?”
“அவளும் அரசிதான்.”
“மன்னருக்கு இரண்டு ராணிகளா?”
“இல்லை. ஒரு ராணிதான்.”
“பிருமச்சாரி!”
“உப தளபதி.”
“நீர் உளறுகிறீர்.”
“அதனால் உமக்கு என்ன நஷ்டம்?”
“உள்ளே சென்றவள் வேட்டுவச்சி.”
“அதனால் என்ன? வேட்டுவச்சி அரசியாகக்கூடாது என்று எங்கு சொல்லியிருக்கிறது?”
ஜகத்சிம்மனுக்கு என்ன பேசுவது என்று தெரியாததால் பிருமச்சாரியை மிரட்டலானான்.
“இது மலை அரசிக்குத் தெரிந்தால் என்ன ஆகும்?” என்று வினவினான்.
“எதுவும் ஆகாது” என்ற பிருமச்சாரி, மேற்கொண்டு விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, “உபதளபதி! உம்மை தூது செல்லப் பணித்தேன். முதலில் அதைக் கவனியும்” என்று திட்டவட்டமாக அறிவித்து, கையை அசைக்கவே இரண்டு தாரைகள் பலமாக ஊதப்பட்டன.
அதே சமயத்தில் மண்டோர் கோட்டை மீது ஒரு வீரன் தோன்றினான். “என்ன வேண்டும் உங்களுக்கு?” என்று இரைந்து வினவவும் செய்தான்.
அதுவரை புரவிமீது அமர்ந்து இருந்த ஜகத்சிம்மன் புரவியைக் கோட்டை வாசலை நோக்கி நடக்கவிட்டு “உங்கள் தலைவர்கள் இருவரையும் பார்க்க வேண்டும், கதவைத் திற என்று கூறினான்.
“எதற்காக?”
“தூது சொல்ல வேண்டும்.”
இதை உப தளபதி கூறியதும் கதவுகள் திறந்தன. ஜகத்சிம்மன் புரவியை கம்பீரமாகச் செலுத்தி மண்டோர் நகரத்துக்குள் நுழைந்தான். காந்தோஜியும் மஞ்சாஜியும் அவனை ஆஸ்தான மண்டபத்தில் சந்தித்தார்கள். சந்தசிம்மன் புதல்வர்களும், போரில் இணையற்றவர்கள் என்று பிரசித்தி பெற்றவர்களுமான இரு ராஜபுத்திரர்களும் இரட்டையர் போல் ஒரே ஆசனத்தில் அக்கம் பக்கத்தில் அமர்ந்து இருந்தார்கள். அவர்கள் கம்பீரத்தையும் முகத்தில் துலங்கிய அலட்சியத்தையும் கவனித்த ஜகத்சிம்மன் “சந்தசிம்மன் புதல்வர்களே! நீங்கள் அமர்ந்து இருக்கும் ஆசனம் உங்களுடையது அல்ல. ராவ்ஜோடா உட்கார வேண்டிய இடத்தில் உட்கார்ந்து இருக்கிறீர்கள். நீங்கள் உடனடியாக இந்த நகரத்தை விட்டு அகன்றால் உங்களைத் தடை செய்ய மாட்டோம். இல்லையேல் இன்றே போர் துவங்கும்” என்று தனது தூதைச் சொன்னான்.
உபதளபதியை ஏற இறங்கப் பார்த்தான், காந்தோஜி. “தளபதி! தூது வர உங்கள் படையில் யாரும் இல்லையா?” என்று வினவினான்.
ஜகத்சிம்மன் கண்களில் சிறிது கபடம் படர்ந்தது.
“இப்பொழுது நான் தளபதி அல்ல” என்று பதில் அளித்தான்.
“வேறு யார் தளபதி?” மஞ்சாஜியின் குரல் சந்தேகத்துடன் ஒலித்தது.
“பிருமச்சாரி.” ஜகத்சிம்மன் கபடமாகப் பேசினான்.
“யார், ஹர்பா சங்க்லாவா?” காந்தோஜி வினவினான் வியப்புடன்.
“ஆம்”
“நீர்?”
“உப தளபதி ஆக்கப்பட்டேன்.”
“யாரால்?”
“பிருமச்சாரியால்?”
“இதற்கு உங்கள் மன்னனும் உடந்தையா?”
“ஆம்.”
இதைக் கேட்ட மஞ்காஜி நகைத்தான்.
“உம்மை சரியாகத்தான் எடைபோட்டு இருக்கிறான் ஜோடா” என்றும் சொன்னான்.
அந்த நகைப்பு ஜகத்சிம்மன் இதயத்தை எரிமலை ஆக்கியது.
“மஞ்சாஜி, எங்கள் மன்னரின் நடவடிக்கைகளை விவாதிக்க நான் வரவில்லை. தூதுக்கு என்ன பதில்?” என்று வினவினான் கோபம் குரலிலும் அள்ளித் தெளிக்க.
“சந்தசிம்மன் புத்திரர்கள் சொல்லக்கூடியது ஒரே பதில்தான். நீர் வெளியே சென்ற நான்கு நாழிகைக்குள் உங்கள் படை தாக்கப்படும். படையா அது? மொத்தம் எழுநூறு பேர்கூட இருக்காத ஒரு சிறு கூட்டம். நீங்கள் போராடுவதைவிட தற்கொலை செய்துகொள்ளலாம் என்றான் மஞ்சாஜி.
காந்தோஜி சொன்னான். “சொல் உங்கள் மன்னரிடம், வீணாக வீரர்களை பலிகொடுக்க வேண்டாம். இப்பொழுதே மண்டோர் வாசலை விட்டு அகன்றால் நாங்கள் துரத்த மாட்டோம்” என்று.
ஜகத்சிம்மன் இதழ்களில் இளநகை அரும்பியது. தலை தாழ்த்தி விடை பெற்று கோட்டைக்கு வெளியே வந்தான்.
அவனை ராவ்ஜோடா, அந்த வேட்டுவப்பெண், பிருமச்சாரி மூவரும் ஒன்றாய் நின்று வரவேற்றார்கள். காந்தோஜியின் பதிலை அவர்கள் மூவருக்கும் எதிரில் நின்று அறிவித்தான் ஜகத்சிம்மன்.
பிருமச்சாரி பதில் ஏதும் பேசவில்லை ஒரு விநாடி. அவர் முகத்தில் அனுதாபம் நிரம்பி நின்றது.
“ஜோடா! ஜகத்சிம்மா! இருவரும் கேளுங்கள் உன்னிப்பாக. இன்று உள்ள நிலைமையை சந்தசிம்மன் மக்கள் சரியாக எடை போடவில்லை. அவர்கள் தோல்வி திண்ணம். ஆனால் ஒன்று சொல்கிறேன். அவர்கள் தப்ப முயன்றால் யாரும் தடை செய்யக்கூடாது. அவர்கள் ஓடினால் எல்லை வரை துரத்தலாம். ஆனால் மேவார் வம்ச இரத்தம் நமது மண்ணில் சிந்தக்கூடாது” என்று திட்டமாக அறிவித்த பிருமச்சாரி “சந்தசிம்மன் புதல்வர்கள் நமது எண்ணிக்கையைக் கண்டு அசட்டை செய்கிறார்கள். எண்ணிக்கை எப்பொழுதும் போரை வெற்றி கொண்டதில்லை. தவிர, எழுநூறு அல்ல நமது எண்ணிக்கை, அதோ பாருங்கள்” என்று கையைக் காட்டினார் தெற்கு நோக்கி. தூரத்தில் பெரும் தூசி கிளம்பிக் கொண்டு இருந்தது. போர் முரசை உடனே கொட்ட உத்தரவு இட்ட பிருமச்சாரி ஓடிச் சென்று தமது பெரும் புரவியில் ஏறினார். ஜோடாவும் புரவியில் ஏறினான். அந்த இரட்டைப் பிறவியும் ஏறினாள். ஆனால் போர்க்களத்தில் நிற்கவில்லை அவள். வேட்டுவர் மலை இருந்த திசையை நோக்கி விரைந்தாள்.
பிருமச்சாரி தமது எழுநூறு பேரையும் மூன்றாகப் பிரித்தார். அதில் ஒரு பிரிவு பெரும் மரத்தண்டு ஒன்றைக் கொண்டு கோட்டைக் கதவுகளைப் பிளக்க முயன்றது. ஆனால் அதற்கு அவசியம் இல்லாது போயிற்று. கதவுகள் கணவேகத்தில் திறந்தன. வாட்களை உயர ஆட்டிய வண்ணம் சந்தசிம்மன் புதல்வர்கள் பிருமச்சாரியின் படைக்குள் தங்கள் படையை ஊடுருவ விட்டார்கள். எதிரி படை ஊடுருவ இடம் கொடுத்த பிருமச்சாரி கொம்பு ஒன்றை தாமே வாங்கி தெற்கு நோக்கி ஊதினார். தூரத்தே தெரிந்த புழுதி மறைந்து பாபுஜியின் புரவிப்படை அசுர வேகத்தில் வந்தது. அவை மொத்தம் ஐநூறுதான். இருந்தாலும் அவற்றின் வேகத்தை சந்தசிம்மன் புதல்வர்கள் தாங்க முடியாததால் மேவார் படை சிறிது பின்னடைந்தது. எதிரியை ஊடுருவ இடம் கொடுத்த பிருமச்சாரியின் படை திடீரென நெருங்கிற்று ஒரு பக்கத்தில். மற்றொரு பக்கத்தில் பாபுஜி வாயு வேகமாகப் பாய வைத்தார் தமது அசுரவேகப் புரவிகளை. அதே சமயத்தில் வடக்கேயிருந்த மலையில் இருந்து விஷந்தோய்ந்த அம்புகள் எதிரி படைகளை நோக்கிப் பறந்து வந்தன.
இத்தனைக்கும் காந்தோஜியின் படைபலம் அதிகமாதலாலும் சகோதரர் இருவரும் மகா வீரர்கள் ஆதலாலும் போர் மும்முரமாக நடந்தது. பிருமச்சாரி பெரிய ராட்சசன் போல் மிக நீண்ட கோடரி ஆயுதத்தைக் கையில் எடுத்தார். அதைக் கொண்டு எதிரி வாட்களைத் தடுத்தும் எதிர்ப்பட்டவர்களை வெட்டி வீழ்த்தியும் அனாயாசமாக முன்னேறினார். அதேசமயத்தில் ராவ்ஜோடா காந்தோஜியையும் மஞ்சாஜியையும் நோக்கி முன்னேறினான்.
காந்தோஜியின் வாள் ஜோடாவின் வாளைத் தடுத்தது. மஞ்சாஜி வாளை ஓங்கவில்லை. அண்ணனையும் ஜோடாவையும் மட்டும் சமரிடவிட்டு வேறு பக்கம் திரும்பினான். அவனை நோக்கி வந்த பாபுஜியின் மலைச்சாரல் புரவிகள் அவன் படையை ஒரு கலக்கு கலக்கியது. அவன் புரவியில் இருந்து விசிறி எறியப்பட்டான். அதேசமயத்தில் ராவ் ஜோடாவின் வாள் காந்தோஜியின் வாளை ஆகாயத்தில் பறக்க விட்டது.
சந்தசிம்மன் புதல்வர்களின் பெரும்படை கட்டுக் குலைந்து கொண்டிருந்தது. மீண்டும் சந்தசிம்மன் படை நகரத்திற்குள் செல்ல முயன்ற சமயத்தில் நகரத்தில் பெரும் கூச்சல் கிளம்பியது. ஆயிரக்கணக்கான பந்தங்களைப் பிடித்துக்கொண்டு மண்டோர் மக்கள் சந்தசிம்மன் புதல்வர் படையை பின்புறத்தில் தாக்கினார்கள். அடங்கிக் கிடந்த மக்கள் எழுந்துவிட்டார்கள் என்பதை சகோதரர்கள் புரிந்துகொண்டதால் கொம்பை எடுத்து ஊதினார்கள். பிருமச்சாரியின் சிறிய படையை தாங்கள் தவறாக எடை போட்டதை உணர்ந்துகொண்டதால் படையுடன் மேவாரை நோக்கிப் பின்வாங்க முற்பட்டார்கள்.
பிருமச்சாரியின் வீரர்கள் பிசாசுகள் போல் போரிட்டதால் எதிரியின் படை பெரிதும் நசித்தது. எந்த அணிவகுப்பு முறைக்கும் சம்பந்தம் இல்லாத அணிவகுப்பை அன்று சந்தசிம்மன் புதல்வர்கள் கண்டார்கள். அடிக்கடி சிறுசிறு கூட்டங்களாகப் படையைப் பிரித்துப் போராடும் முறையை அன்றுதான் அவர்கள் கண்டார்கள். கண்டதால் வியப்புடன் வேறு வழியின்றி பின்வாங்கினார்கள். அத்துடன் கதை முடிந்தது என்று நினைத்தான் ராவ்ஜோடா. ஆனால் முடியவில்லை. ஒரு பகுதிப் படையுடன் பின்வாங்கிய மேவார் சகோதரர்களை துரத்திச் சென்றான் ஜகத்சிம்மன். அப்பொழுதுதான் அந்த எதிர்பாராத விபரீதம் நிகழ்ந்தது.