ராவ்ஜோடாவின் அணைப்பில் இருந்த அழகியின் சந்திர வதனத்தைக் கண்டதும் ஜகத்சிம்மன் திகைப்பும் அதிர்ச்சியும் ஒருங்கே அடைந்தான் என்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. அந்த முகம் மலை அரசியின் முகம்!
முகத்தில் அத்தனை ஒற்றுமையிருந்தும் அது மலை அரசியாக இருக்க முடியாது என்று திட்டவட்டமாக எண்ணினான் ஜகத்சிம்மன். மலை அரசியின் குரலை அவன் ஏற்கனவே கேட்டிருந்ததால், அந்தக் குரலுக்கும் இந்த மலை அரசியின் பிரதிபிம்பத்தின் குரலுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருந்ததை சந்தேகத்துக்கு இடமின்றி உணர்ந்திருந்தான். மலை அரசியின் குரலும் மதுரம் என்றாலும் அதில் சற்று அதிகாரமும் திட்டவட்டமான திடகாத்திரமும் உண்டு என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால், இந்தப் பெண்ணின் குரல், குயிலின் குரல். பெரிதும் குழைந்து கொஞ்சுவது போன்ற மெல்லிய குரல். மலை அரசியின் குரலின் திடம் இதில் கிடையாது. அச்சம் கலந்த சங்கீதம் இழைந்தோடும் இன்பக் குரல். சிறிது கீச்சுக் குரலும்கூட. “இருவர் குரலுக்கும் இருந்த வித்தியாசம் மலைக்கும் அருவிக்கும் உள்ள வித்தியாசம்” என்று உவமையும் சொல்லிக்கொண்டான் படைத்தலைவன்.
அந்தச் சமயத்தில் சந்திரனை நோக்கி மல்லாந்து தலைதாழ்த்திய அந்தப் பெண் லேசாக நகைத்து “இன்று உங்கள் திருமண நாள்” என்று கொஞ்சிப் பேசினாள்.
பின்னால் அவள் தலையைச் சாய்த்ததால் தன் அணைப்பில் இருந்த இடைக்கு மேலேயிருந்த அவள் அழகிய மார்பகங்கள் இரண்டும் ஜோடாவின் கண்ணுக்கு இலக்காகவே அவன் பதிலேதும் சொல்லாமல் அவற்றை வெறித்து நோக்கினான்.
அவள் மேலும் லேசாக நகைத்தாள். “ஏன் நான் சொன்னது உங்கள் காதில் விழவில்லையா?” என்று வினவினாள் நகைப்பின் ஊடே.
இந்தக் கேள்வி ஜகத்சிம்மன் எண்ணத்தை உறுதி செய்தது, “ஆம், இவள் வேறுதான், ஒருவேளை மலை அரசியின் இரட்டைப் பிறவியாயிருப்பாளோ?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்ளவும் செய்தான்.
மேற் கொண்டு எதுவும் எண்ண அவனுக்கு அவகாசமில்லை. ஜோடா திடீரெனக் குனிந்து அவள் வெண்மைக் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்தான். அவள் தனது கண்களை உணர்ச்சி மிகுதியால் மூடிக்கொண்டாள். ஜோடாவின் உதடுகள் அவள் கழுத்தில் ஆழப் புதைந்திருக்க அவன் தலை மட்டும் இப்படியும் அப்படியும் லேசாக அசைந்து அவள் உணர்ச்கிளுக்குத் தீ மூட்டியது. அவள் உணர்ச்சி மிகுதியால் “இன்று உங்கள் மணநாள். இது முறையல்ல. இன்று நீங்கள் அவள் இருக்கும் அறைக்குப் போக வேண்டும்” என்று கண்களை மூடியவண்ணம் பேசினாள்.
“யார் அவள்?” என்று சற்று இறைந்து கேட்டான் ஜோடா.
பதிலுக்கு அவள் “உஸ்” என்று எச்சரித்தாள் அவனை. கண்ணையும் விழித்தாள். “அதற்குள் மறந்துவிட்டீர்களா?” என்றும் கேட்டாள்.
“எதை?” ஜோடா கேட்டான் சொப்பன சொர்க்கத்தில் இருந்தபடி.
“உம். விழித்துக் கொள்ளுங்கள். யாராவது வரப் போகிறார்கள்.”
“யார் வந்தாலும் கொன்றுவிடுகிறேன்.”
“கொல்லும் நாள் இல்லை, இது.”
“ஏன் இல்லை. நீதான் என்னைக் கொல்லுகிறாயே.”
“நானா!”
“ஆம்.”
“பொய்.”
“உண்மை. உன் உள்ளத்தைக் கேட்டுப் பார்.”
“சரி சரி, விடுங்கள் என்னை.”
அவளுடைய இந்த கோரிக்கைக்குப்பின் ஜோடா நிதானத்தை இழந்தான். “உன்னை விடுவதா? அடிகள்ளி. நீ ஆட்டும் பொம்மையா நான்?” என்று இன்பவெறி காட்டி அவள் மார்பகச் சீலையை விலக்க முயன்றான். அவள் இரண்டு கைகளும் அவன் கையைப் பிடித்துத் தடை செய்தன.
“வாருங்கள் மாளிகைக்குச் செல்வோம்” என்று கூறி மெள்ள தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றாள்.
இந்தச் சமயத்தில் நல்ல கரிய மேகம் ஒன்று சந்திரனை மூடிவிடவே காட்டில் அந்தகாரம் புகுந்தது. அந்த அந்தகாரத்தில் எட்ட நடந்தது என்னவென்று தெரியவில்லை ஜகத்சிம்மனுக்கு. ஏதோ இருவர் அசையும் ஒலி மட்டும் கேட்டது.
“சரி வா! மாளிகைக்குப் போவோம். அங்கு உன்னை பக்கத்து விடுதிக்கு அழைத்துப் போகிறேன்” என்ற ஜோடாவின் குரலும் தெளிவாகக் கேட்டது.
“என்ன துணிவு இவனுக்கு? கட்டிய மனைவி மாளிகையில் இருக்க, அவள் பள்ளியறைக்குச் செல்லாமல், பக்கத்து விடுதிக்கு இவளை அழைத்துப் போகிறானாமே. பார்ப்போம் இவன் போவதை” என்று சீறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.
அவன் மாளிகையை அடைந்தபோது நள்ளிரவு. வாயிலில் பிருமச்சாரி உலாவிக்கொண்டு இருந்தார் தீர்க்க சிந்தனையுடன்.
அவரை நோக்கிச் சென்ற படைத்தலைவன் “பிருமச்சாரி! என்ன யோசிக்கிறீர்கள்?” என்று வினவினான்.
“மன்னரைக் காணவில்லை” என்றார் ஹர்பாசங்க்லா.
“இப்பொழுது வருவார்” என்றான் ஜகத்சிம்மன்.
“எங்கிருந்து?”
“காட்டுக்குள் இருந்து.”
“அங்கு யார் இருக்கிறார்கள்?”
“மலை அரசியின் இரட்டைப் பிறவி.”
“என்ன உளறுகிறீர்?”
“உளறுகிறேனா அல்லவா என்பது இன்னும் சிறிதுநேரத்தில் தெரியும்.”
பிருமச்சாரி படைத்தலைவனைக் கூர்ந்து நோக்கினார்.
“அடபாவமே” என்று அனுதாபப்பட்டுக் கொண்டார்.
“என் மூளை சரியாகத்தான் இருக்கிறது” என்றான் ஜகத்சிம்மன் கோபத்துடன்.
“அப்படியா?” என்றும் படைத்தலைவன் முகத்தை ஆராய்ந்தார் பிருமச்சாரி.
“சந்தேகமாக இருக்கிறதா?” சீறினான் படைத்தலைவன்.
“இல்லை. அணுவளவும் சந்தேகமில்லை” என்ற பிருமச்சாரி, “எதற்கும் நீங்கள் போய் படுத்துக்கொள்ளுங்கள்” என்று உபதேசமும் செய்தார்.
“படுத்துக் கொள்கிறேன். ஆனால், என்னைப் பைத்தியம் என்று நினைக்க வேண்டாம்” என்றான் ஜகத்சிம்மன்.
“இல்லை.”
“ஒப்புக்கொள்கிறீர்களா?”
“ஆம்.”
இதற்குமேல் பிருமச்சாரி பேசவில்லை. ஒரு காவலனை மட்டும் விளித்து “இவருக்கு படுக்க வசதி செய்யுங்கள்” என்று கூறினார்.
காவலனுடன் ஜகத்சிம்மன் சென்றான். அவனை அடுத்த விடுதிக்கு அழைத்துச் சென்ற காவலன் ஓர் அறையைக் காட்டி “இங்கு நீங்கள் படுக்கலாம்” என்றான்.
அறை சிறியதுதான். பஞ்சணை ஏதுமில்லை. ஒரு பெரிய மான் தோல் மட்டும் விரிக்கப்பட்டுக் கிடந்தது கீழே. அதில் படுத்த ஜகத்சிம்மனுக்கு உறக்கம் வரவில்லை. சென்ற சில நாட்களில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் அவன் மனதில் எழுந்து அவனைப் பெரிதும் உருட்டிக் கலக்கிக் கொண்டிருந்தன. அவன் தன்னையே பல கேள்விகள் கேட்டு பதில் சொல்லிக்கொண்டான்.
“நான் கண்டதெல்லாம் கனவா?”
“இல்லை.”
“கேட்டதெல்லாம்?”
“பொய்யல்ல, உண்மை எப்படிப் பொய்யாகும்?”
“மலை அரசி இன்னொருத்தி இருக்க முடியுமா?”
“ஏன் முடியாது? இரட்டைப் பிறவிகள் உலகத்தில் இயற்கைதானே?”
“அப்படியானால் அது மலை அரசிக்குத் தெரியாதிருக்குமா?”
“தெரிந்திருக்கலாம். ராஜபுதனச் சூழ்நிலையில், சதா போர் விளையும் பூமியில் நகரங்களைவிட்டு மக்கள் ஓடும் நிலையில் எதுவும் நிகழலாம். இரட்டைப் பிறவிகள் பிரிக்கப்பட்டிருக்கலாம் குழந்தைப் பருவத்திலேயே.”
“ஆனால், ஜோடாவினால் இந்தப் பெண்ணை இங்கு எப்படி மறைக்க முடிந்தது?”
“கொண்டுவந்து காட்டில் வைத்திருக்கலாம்.”
“இங்கு இந்த விடுதிக்கு அழைத்துவரப் போவதாகச் சொன்னாரே.”
“வந்தால் முடிந்தது கதை. பிருமச்சாரி அவரை சும்மாவிடமாட்டார்.”
இப்படிக் கேள்வியும் பதிலும் தானே சொல்லி சுய விசாரணையில் இறங்கியபோதுதான் பக்கத்து அறையில் பேச்சு அரவம் கேட்டது.
“சொன்னபடி செய்துவிட்டேன், பார்த்தாயா?” என்று கேட்டான் ஜோடா.
“நீங்கள் பலே கெட்டிக்காரர்” என்றாள் அந்தப் பெண்.
“பிருமச்சாரி கண்ணில்...”
“மண்ணைத் தூவிவிட்டீர்கள்.”
“இந்த விடுதிக்கு இந்த வழியிருப்பது அவருக்குத் தெரியாது.”
“இந்த இடத்துக்கு அவர் சொந்தக்காரர் அல்லவா?” என்று கேட்டாள் அவள்.
“அவர் பிருமச்சாரி. இந்தத் திருட்டு வழியை அவர் கண்டுபிடிக்க அவசியமில்லை” என்றான் ஜோடா.
இதைக் கேட்ட அவள் நகைத்தாள். அதே இன்ப நகைப்பு. குழந்தைக் குரல். “உங்கள் மனைவி தனித்திருப்பாளே” என்றாள் அவள் நகைப்பின் ஊடே.
“உன்னால் மட்டும் தனித்திருக்க முடியுமா?” என்ற ஜோடா “சரி! இரவு முழுவதையும் பேசியே கழிக்க. வேண்டாம்” என்றான்.
அதே சமயத்தில் பிருமச்சாரியின் குரல் பலமாக ஒலித்தது.
“யார் இந்த விடுதிக்குள் வந்தது சற்று முன்பாக?” என்று கர்ச்சித்தார் பிருமச்சாரி. அத்துடன் வேகமாக உள்ளேயும் வந்தார். அவர் காலடிகள் தாழ்வரையில் உலக்கை தட்டுவதுபோல் ஒலித்தன.
அடுத்த விநாடி, அடுத்த அறை பலமாகத் தட்டப்பட்டது. ஜோடாவின் சொர்க்கமே இடிந்துவிழப் போவதாக நினைத்தான் ஜகத்சிம்மன்.