அகமதாபத் ரசிகர்களை பலரும் கடுமையாக சாடி வரும் நிலையில், சென்னை ரசிகர்கள் குறித்து முன்னாள் இந்திய கேப்டனும், சி.எஸ்.கே கேப்டனுமான எம்.எஸ் தோனி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த சனிக்கிழமை அகமதாபத்தில் நடந்த லீக் போட்டியில் பரம போட்டியாளர்களான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்தப் போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்நிலையில், இந்த போட்டியின் போது அகமதாபத் மோடி மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்களை நோக்கி "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷம் எழுப்பியது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதமாகியுள்ளது. அங்கிருந்த ரசிகர்கள், டாஸ் போட வந்த கேப்டன் பாபர் அசாமை கேலி செய்வது, முகமது ரிஸ்வான் ஆட்டமிழந்த ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பியது, மைதானத்தில் "ஜெய் ஸ்ரீ ராம்" பாடலை ஒலிக்கவிடுவது என்று பல்வேறு சர்ச்சைகள் விவாதமாகியுள்ளது.
மேலும், அகமதாபத் ரசிகர்களை பலரும் கடுமையாக சாடி வருகிறார்கள். பல்வேறு தரப்பினரும் தங்களது கடுமையான கண்டங்களை பதிவு செய்து வருகிறார்கள். சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான மரியாதயை பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், சென்னை ரசிகர்கள் குறித்து முன்னாள் இந்திய கேப்டனும், சி.எஸ்.கே கேப்டனுமான எம்.எஸ் தோனி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 2021ஆம் ஆண்டு சென்னையில் தோனி பேசுகையில், 'சென்னை அணியுடனான பந்தம் எனக்கு 2008 ஐ.பி.எல் தொடரின் போது தொடங்கியது. ஆனால் அதற்கு முன்பாக சேப்பாக்கம் மைதானத்தில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டேன். ஐ.பி.எல் ஏலத்தின் போது சி.எஸ்.கே அணியால் வாங்கப்படுவேன் என்று நினைக்கவில்லை. அதுதான் தமிழ்நாடு மற்றும் சென்னையின் கலாச்சாரம் பற்றி புரிந்துகொள்வதற்கு வாய்ப்பு அளித்தது.
ஏனென்றால், நான் பிறந்த மண்ணில் இருக்கும் கலாச்சாரம் வேறு மாதிரியான இருக்கும். எனது பெற்றோர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதன்பின் அது உத்தரகாண்ட் என்று மாறியது. நான் ராஞ்சியில் பிறந்தேன். அது முதலில் பீகாருடன் இருந்தது. பின்னர் ஜார்க்கண்ட் மாநிலத்துடன் பிரிக்கப்பட்டது. அதன்பின் 18 வயதில் மேற்கு வங்கத்தில் உள்ள கரக்பூர் ரயில்வே-யில் பணியாற்றினேன்.
அதன்பின் தான் சென்னைக்கு வந்தேன். நான் எப்படி இருக்க வேண்டும், விளையாட்டை எப்படி பாராட்ட வேண்டும் என்று தமிழ்நாடு நிறையவே கற்றுக் கொடுத்தது. சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய போட்டிகளின் போது ரசிகர்கள் சிறந்த ஆதரவை கொடுத்துள்ளார்கள். ஆனால் வழக்கமாக நமக்கு பிடித்த அணி மட்டுமே சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற மனப்பான்மை ரசிகர்களுக்கு இருக்கும்.