பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உட்பட தமிழ்நட்டில் 5 முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. அதன்படி யார் யார் எந்தெந்த துறைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.
பள்ளிக்கல்வித்துறை: பள்ளிக்கல்வித்துறை செயலாளராக குமர குருபரன் ஐ.ஏ.எஸ். நியமனம். இவர் தகவல் தொழில்நுட்ப துறை செயலாளராக பணியாற்றி வந்த நிலையில் இந்த மாற்றம்.
தகவல் தொழில்நுட்பத்துறை: தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராக தீரஜ் குமார் ஐ.ஏ.எஸ். நியமனம். இவர் வணிகவரித்துறை ஆணையராக பணியாற்றி வந்த நிலையில் புதிய பதவிக்கு மாற்றம்.
சுற்றுலாத் துறை: சுற்றுலாத்துறை செயலாளர்/இயக்குநராக காகர்லா உஷா ஐ.ஏ.எஸ். பணியிட மாற்றம். இவர் இதற்கு முன்னதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளராக பணியாற்றி வந்த நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் ஐ.ஏ.எஸ். நியமனம். இவர் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநராக இருக்கும் நிலையில் மாற்றம்.
தமிழ்நாடு தொழில் வளர்சிக் கழகம்: தமிழ்நாடு தொழில் வளர்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக சந்தீப் நந்தூரி ஐ.ஏ.எஸ். நியமனம். இவர் சுற்றுலாத்துறை செயலாளர்/ இயக்குநராக பதவி வகித்து வரும் நிலையில் மாற்றம். மேற்கண்ட பணியிட மாற்றங்களில் பள்ளிக்கல்வித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை ஆகிய இரண்டு துறைகளில் நடைபெற்றிருக்கக் கூடிய மாற்றங்கள் மட்டுமே கவனிக்கத்தக்கது.
ஆசிரியர்கள் போராட்டத்தை ஆரம்பத்திலேயே தடுக்கத் தவறியதன் எதிரொலியாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதவியிலிருந்து காகர்லா உஷா ஐ.ஏ.எஸ். மாற்றப்பட்டிருக்கலாம் எனக் காரணம் கூறப்படுகிறது. தூத்துக்குடி, கரூர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்று அதிரடி மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இனியும் டிரான்ஸ்ஃபர் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.