தமிழ்நாடு அரசு புதிய வாகனங்களுக்கான சாலை வரியை அதிரடியாக உயர்த்தியுள்ளதால், தமிழகத்தில் புதிய கார், பைக் வாகனங்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு புதிய வாகனங்களுக்கான சாலை வரியை அதிரடியாக உயர்த்தியுள்ளதால், தமிழகத்தில் புதிய கார், பைக் வாகனங்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருசக்கர வாகனங்கள், கார்கள், ஷேர் ஆட்டோக்கள், டாக்சிகள், லாரிகள் உள்ளிட்ட புதிய வாகனங்களுக்கான வரி விகிதத்தை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது.
இதனால் புதிய வாகனங்களை வாங்குவதற்கும் இயக்குவதற்கான செலவுகள் அதிகரித்து வாகனங்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, இந்த வரி உயர்வு சரக்கு போக்குவரத்து மற்றும் பயணச் செலவுகள் இரண்டையும் பாதிக்கும்.
அதுமட்டுமில்லாமல், வாகன உரிமையாளர்கள் பதிவுக் கட்டணங்கள், பசுமை வரிகள், காப்பீட்டு பிரீமியங்கள் மற்றும் பிற கையாளுதல் கட்டணங்களையும் செலுத்த வேண்டும். இந்த நடவடிக்கை ஆட்டோமொபைல் துறை பிரதிநிதிகள் மற்றும் புதிய வாகனங்கள் வாங்க உள்ளவர்களின் எதிர்ப்புக்கு இலக்காகி உள்ளது. இந்த வரி உயர்வு நடுத்தர மக்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழில்துறையை எதிர்மறையாக பாதிக்கும் என்று கூறுகிறார்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் புதன்கிழமை நிகழ்வில், தமிழக அரசு வாகனங்களுக்கான வரி விதிப்பை உயர்த்தியுள்ள நிலையில், தமிழகத்தில் புதிய இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் பிற வாகனங்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷேர்-ஆட்டோக்கள், டாக்சிகள் மற்றும் டிரக்குகள் அதிக வரிகளை செலுத்த வேண்டியிருப்பதால் இது சரக்கு போக்குவரத்து மற்றும் பயணச் செலவுகளை அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள்.
தமிழ்நாடு அரசின் கட்டண ஒழுங்குமுறை முயற்சிகளுக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்திய தனியார் ஆம்னி பேருந்துகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் ஆகிய இரண்டு வகை வாகனங்களுக்கு மட்டும் வரி விகிதம் மாறாமல் உள்ளது.
தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் வரிவிதிப்புச் சட்டம் 1974-ல் செய்யப்பட்ட திருத்தங்களின்படி, 1 லட்சத்துக்கும் அதிகமான இரு சக்கர வாகனத்தை வாங்கும் நபர், வாகனத்தின் விலையில் இதுவரை 8% வாழ்நாள் வரியாக செலுத்தி வந்த நிலையில், இனிமேல் 12% வாழ்நாள் வரியாக செலுத்த வேண்டும். அதாவது, முன்பு ரூ.9,600 வரி செலுத்திய ஒருவர், இனிமேல் ரூ.14,400 வரி செலுத்த வேண்டி இருக்கும்.
அதேபோல, ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலான கார்களுக்கு 18% வரி விதிக்கப்படும். ரூ. 20 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட விலை கொண்ட கார்களுக்கு 20% வரி செலுத்த வேண்டும். அதாவது குறைந்தபட்சம் வரி ரூ. 4 லட்சம் ஆகும்.
வரிகளுக்கு மேல், வாகன உரிமையாளர்கள் விரைவில், வாகன ஷோரூம்களில் புதிய வாகனத்தை முன்பதிவு செய்யும் போது பதிவுக் கட்டணம், பசுமை வரிகள், இன்சூரன்ஸ் பிரீமியம் மற்றும் பிற கையாளுதல் கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.
ஆட்டோமொபைல் டீலர்கள் சங்க கூட்டமைப்பு மாநில தலைவர் எஸ். ராஜ்வேல் ஆங்கில செய்தி இணையதளம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், “அண்டை மாநிலங்கள் எதுவும் அதிக வரி வசூலிக்காததால், தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் தொழில் பாதிக்கப்படும். ஏற்கனவே, கடந்த ஆண்டில் அனைத்து வாகனங்களின் எக்ஸ்ஷோரூம் விலையும் 40% உயர்ந்துள்ளது. இது விலையில் மேலும் அதிகரிக்கச் செய்து விற்பனையை பாதிக்கும். இரு சக்கர வாகனங்கள் சொகுசு வாகனங்கள் அல்ல, அத்தியாவசியப் வாகனம் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
“சென்னையில் ரயில் சேவையில் அடிக்கடி ஏற்படும் இடையூறுகள் மற்றும் அரசுப் பேருந்துகளின் சேவை குறைவால், அதிகமானோர் தங்கள் அலுவலகங்களுக்குச் செல்ல இருசக்கர வாகனங்களை வாங்கத் தொடங்கினர். மேலும், அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். நகரின் புறநகர்ப் பகுதிகளில், பைக்குகளுக்கான தேவை தொடரும். இந்த கட்டத்தில் வரி உயர்வு இந்த நடுத்தர வருமானக் குழுக்களை பெரிதும் பாதிக்கும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான முன்பதிவுகள் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் கொண்டு வரப்படும் வாகனங்களுக்கும் அதிக வரி செலுத்த வேண்டும்.” என்று வாகன ஓட்டிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதே போல, இந்த வரிவிதிப்பு மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், மாநிலத்தில் உள்ள பெரும்பாலான வணிக வாகனங்கள் வழக்கமான வரியை விட கிட்டத்தட்ட இரு மடங்கு செலுத்தும். ஷேர்டு-ஆட்டோ மற்றும் டாக்ஸி உரிமையாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு வரியாக ரூ. 6,000 செலுத்துவார்கள். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ்நாடு ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் சங்கத்தைச் சேர்ந்த எஸ் அன்பழகன், ஏற்கனவே ஓலா மற்றும் உபேர் போன்ற நிறுவனங்களுக்கு தங்கள் வருவாயில் கணிசமான பகுதியை இழந்து வருகிறார்கள் என்று கூறினார்.
இந்த நடவடிக்கை தாங்கள் கொண்டு செல்லும் பொருட்களின் விலையில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று சரக்கு வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். “டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி விலை மற்றும் பராமரிப்பு செலவுகள் காரணமாக இங்கு பதிவுசெய்யப்பட்ட 30% லாரிகள் இயக்கப்படவில்லை” என்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் எஸ் யுவராஜ் தெரிவித்தார்.