மண்டியா: தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறக்காதே என 40 நாட்களாக போராடி வரும் கன்னட விவசாயிகள் தற்போது காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையத்தை கலைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய காவிரி நதிநீர் பங்கீட்டு மாநிலங்கள் எப்படி நீரை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை விவரித்தது காவிரி நடுவர் மன்றம். இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளின் மழை, கர்நாடகா அணைகளின் நீர் இருப்பு உள்ளிட்டவைகளை ஆராய்ந்து தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிடுவதை காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைக்கும். இப்பரிந்துரையை பரிசீலனை செய்து காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடும். தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு மாதமும் திறக்கப்பட வேண்டிய காவிரி நீரை கர்நாடகா முறையாக திறப்பது இல்லை.
காவிரி நதிநீரை நினைத்தால் திடுமென அதிகமாக திறப்பது; இல்லையென்றால் சொற்ப நீரை திறப்பது என்கிற போக்குகளைத்தான் கர்நாடகா அரசுகள் கடைபிடிக்கின்றன. தமிழ்நாட்டுக்கு 24,000 கன அடி நீர் தேவை என்கிற போது ஒழுங்காற்று குழு 5,000, 3,000 கன அடிநீரை பரிந்துரைத்தது.
காவிரி மேலாண்மை ஆணையம் இதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்தது. இந்த உத்தரவுகளை கர்நாடகா மதிக்கவே கூடாது என 40 நாட்களாக மண்டியாவில் தொடர் போராட்டம் நடத்துகின்றனர் கன்னட விவசாயிகள், கன்னட அமைப்புகள். 40 நாட்களில் பல்வேறு கட்ட போராட்டங்களை கன்னட அமைப்பினர் நடத்தி உள்ளனர். தமிழ்நாட்டுக்கு வழக்கம் போல சொற்ப நீரை திறப்பதும் பின்னர் நிறுத்துவது, திடீரென அதிகமான நீரை திறப்பது என்கிற கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறது கர்நாடகா.
டெல்லியில் நேற்று கூடிய காவிரி மேலாண்மை ஆணையமும் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கன அடி நீரை திறக்க உத்தரவிட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்து மேல்முறையீடு செய்வோம் என்கிறது கர்நாடகா. இதனிடையே 40-வது நாளாக மண்டியா, சாம்ராஜ்நகரில் தொடர் போராட்டங்கள் நேற்றும் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களில் மண்டியா மாவட்ட மருத்துவர்களும் இணைந்தனர். மேலும் காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு எதுவுமே தேவை இல்லை; அத்தனையையும் கலைக்க வேண்டும் எனவும் கன்னட விவசாயிகள், இனவாதிகள் குரல் எழுப்பி வருகின்றனர்.