இந்தியா ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்று, ஆப்கானிஸ்தான் ராணுவ அதிகாரியான எய்டி மொஹமத் அமனி ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் செல்லாமல், வாழ்வாதாரத்திற்காக இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்,இந்தியா ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்று, ஆப்கானிஸ்தான் ராணுவ அதிகாரியான எய்டி மொஹமத் அமனி ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் செல்லாமல், வாழ்வாதாரத்திற்காக இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்தியாவில் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில், 2 வருடங்களுக்கு முன்பு எய்டி மொஹமத் அமனி என்பவர் ராணுவ பயிற்சி பெற்று ராணுவ அதிகாரியாக பொறுப்பேற்றார். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதால், இவர் மீண்டும் அங்கு செல்ல விரும்பவில்லை. மேலும் இவர் பெற்ற பயிற்சியை செயல்முறைபடுத்த முடியாததால், இவர் இந்தியாவில் இருந்துவிட்டார். இவரைப்போன்ற ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் மீண்டும் சொந்த நாட்டுக்கு திரும்ப விரும்பவில்லை.
மொஹமத் அமனி தற்போது அமிர்தசரஸ் பகுதியில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். ஜாலியன் வாலாபாக் தொடர்பாக இயக்குநர் ராம் மத்வானி இயக்கும் வெப் சீரிஸில், பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார்.
அவர் பேசியதாவது: “ இந்திய ராணுவ அகாடமியில் கடந்த டிசம்பர் 2021 ராணுவ பயிற்சி பெற்றேன். நான் பூஞ்ச் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். ராணுவ அணி வகுப்பு நடைபெறும் போது, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்-தான், அதை ஆய்வு செய்வார்” என்று கூறினார்.
ஆப்கானிஸ்தான், குல்பஹரில் உள்ள அல் பெரோனி பல்கலைக்கழத்தில் பத்திரிக்கை துறையில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். தற்போது இவர் டெல்லியில் உள்ள மால்வியா நகரில், வசித்து வருகிறார். இவருக்கு நிரந்தரமான பணி எதுவும் இல்லை.
இந்நிலையில் இது தொடர்பாக அவர் கூறுகையில் “ மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பும் சூழல் இல்லாததால், இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பை குறித்து நான் யோசித்தேன். ஆனால் அப்படி பதவியில் அமர்த்தும் நடைமுறை இந்திய ராணுவத்தில் இல்லை.
எங்களை போன்று ஐ.எம்.ஏ மற்றும் ஒ.டி.ஐ-ல் பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகள் பெரும் நெருக்கடியில் உள்ளனர். ஆப்கானிஸ்தானின் தூதரகம் மூடப்பட்டுள்ளது. எங்களது விசா காலாவதி ஆகிவிட்டது. எங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த இந்தியாவில் எங்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை. இதனால் எங்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது.
எனது குடும்பத்தினர் ஆப்கானிஸ்தானில் உள்ளனர். அப்பா இறந்துவிட்டார். தாய் மற்றும் சகோதிரிகள் அங்கே இருக்கின்றனர். தற்போது அங்கு நிலவும் சூழலால் என்னால் திரும்பிப்போக முடியவில்லை. மூத்த ராணுவ அதிகாரிகளிடம் வேலை கிடைக்க உதவி கேட்டுள்ளேன். திரைபடத்திலாவது ராணுவ அதிகாரியாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது” என்று கூறினார்.