சென்னை: குமரி மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற சதி நடப்பதாகவும், இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவை எனவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, "கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அதிர்ச்சியூட்டும் பல உண்மைகள் வெளியாகியுள்ளன. மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் யார் என்பது தெளிவாக தெரியும் நிலையில், அவர்களைக் காப்பாற்ற காவல்துறை அதிகாரிகளே துணை போவது கண்டிக்கத்தக்கது.
குலசேகரத்தில் உள்ள மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மயக்கவியல் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த, தூத்துக்குடி நகரத்தைச் சேர்ந்த மாணவி சுர்ஜிதா கடந்த 6 ஆம் தேதி ஐயத்திற்கிடமான வகையில் அவரது அறையில் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதை மூடி மறைப்பதற்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் முயற்சிகள் நடைபெற்ற நிலையில், தமது தற்கொலைக்கு காரணமானவர்கள் மூவர் குறித்து மாணவி சுர்ஜிதா எழுதி வைத்த தற்கொலைக் கடிதம் வெளியானதையடுத்து அதுகுறித்த விவரங்கள் தெரியவந்தன.
இவ்வளவுக்குப் பிறகும் மாணவியின் தற்கொலைக்கு காரணமான மருத்துவக் கல்லூரி பேராசிரியர், சக மாணவி, மாணவர் ஆகிய மூவர் மீதும் வழக்கு மட்டும் தான் பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல், காப்பாற்ற விசாரணை அதிகாரி ஜானகியும், உயரதிகாரிகளும் முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பேராசிரியர் உள்ளிட்ட மூவரும் மாணவி சுர்ஜிதாவை தற்கொலைக்கு தூண்டியதாக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 306 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தப் பிரிவின் கீழ் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அதிக அளவாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இது பிணையில் வெளிவரமுடியாத குற்றப்பிரிவு ஆகும். இந்த பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்களை காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை. இவை அனைத்துக்கும் மேலாக இந்த வழக்கில் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சேர்க்கப்படவில்லை. அதனால், இந்த வழக்கு நியாயமான நடக்குமா? என்ற ஐயம் எழுந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் குலசேகரம் காவல்நிலைய ஆய்வாளர் ஜானகியின் நேர்மை குறித்து பல்வேறு ஐயங்கள் எழுப்பப்படுகின்றன.