மன்னன் ராஜ ராஜ சோழனின் 1038 வது சதய விழாவை முன்னிட்டு பெருவுடையார் மற்றும் பெரியநாயகி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற உள்ளன. சதயவிழா கொண்டாடப்படும் நாளான வரும் 25ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மாமன்னர் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்று கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இதனை முன்னிட்டே ஆண்டு தோறும் தஞ்சை மாவட்ட நிர்வாகம் ராஜராஜனின் பிறந்த நட்சத்திர தினத்தை சதய விழா என்ற பெயரில் இரண்டு தினங்கள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
அருண்மொழி வர்மன் என்ற இயற்பெயரைக் கொண்ட ராஜராஜ சோழன், சுந்தர சோழன் எனும் இரண்டாம் பரகேசரிக்கும் வானவன் மாதேவிக்கும் 947ஆம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என்கிறது வரலாறு. அதே சதய நட்சத்திரத்தில் 985ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்று 1014ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தான் என்கிறது வரலாறு. சைவர்கள் போற்றும் திருமுறைகளை மீட்டுத் தந்தவன் ராஜராஜன். தஞ்சை கோயில் வடித்தெடுக்கவும் அங்கு வழிபாடுகள் நடக்கவும் ஒரு பொன் காசு கொடுத்தவர்களைக்கூட மறக்காமல் கல்வெட்டில் பொறித்து வைத்துள்ளார் ராஜ ராஜ சோழன்.
பொன்னியின் செல்வன் என்பது உள்ளிட்ட 40க்கும் அதிகமான சிறப்புப் பெயர்களால் போற்றப்படுபவர் ராஜராஜன். அதனால்தான் அவரது புகழ் தமிழர்கள் வாழும் இடமெல்லாம் போற்றப்படுகிறது. இவர் பதவியேற்ற 985ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டே சதய விழா கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டு ராஜ ராஜ சோழனின் 1038 வது சதய விழா வருகிற அக்டோபர் 24ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதற்காக இன்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 வது சதய விழா அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கும் நிலையில் சதய நட்சத்திர நாளான 25ஆம் தேதி ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி பட்டிமன்றம், நாட்டியம் ,நாடகம் ,திருமுறை அரங்கம் ,கருத்தரங்கம், கவியரங்கம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
அத்துடன் பெருவுடையார் மற்றும் பெரியநாயகி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறவுள்ளன. ராஜராஜ சோழ மன்னரின் 1038வது சதய விழாவை ஒட்டி தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.