பாரிஸ்: உலகம் தொடர்ந்து வெப்ப மயமாகிக்கொண்டிருக்கிறது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது காலநிலை மாற்றம் தொடங்கிவிட்டது என்பதை உணர்த்துவதாகவும் எச்சரித்துள்ளனர்.
கடந்த 1900களில் தொடங்கிய தொழில் புரட்சி காரணமாக உலகின் வெப்ப நிலை மெதுவாக உயர்ந்து வந்த நிலையில், தற்போது இது மிக தீவிரமாக அதிகரித்திருக்கிறது. சூரியனிலிருந்து பூமிக்கு வரும் வெப்பம் மீண்டும் பூமியிலிருந்து வெளியேறும். ஆனால் தொழிற்சாலைகள் போன்றவற்றிலிருந்து வெளிவரும் புகைகள் வளிமண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதால் இந்த வெப்பம் வெளியேறாமல் அப்படியே பூமியில் தங்கிவிடுகிறது. இதனால் பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண கடந்த 2015ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற வருடாந்திர ஐ.நா மாநாட்டில் ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. இது பாரிஸ் ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி தொழில் புரட்சிக்கு முன்பு இருந்ததைவிட 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் உலக வெப்பநிலை உயராமல் கட்டுப்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 195 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
இதை சாத்தியப்படுத்த வேண்டும் எனில் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதாவது பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற பூமிக்கு அடியிலிருந்து எடுத்து பயன்படுத்தப்படும் புதை படிம எரிபொருளின் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க வெண்டும். அப்படி செய்தால்தான் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த முடியும். இப்படியான விவாதங்கள் ஒருபுறம் சென்றுக்கொண்டிருக்கையில் மறுபுறம் பூமியன் வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது.