ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான தேதியை திடீரென மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். ராஜஸ்தானில் 5 ஆண்டு சட்டசபை காலம் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு இந்திய தேர்தல் ஆணையம் ராஜஸ்தானுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது.
அதன்படி நவம்பர் மாதம் 23ம் தேதி ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் இன்று சட்டசபை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மாற்றி கூறியுள்ளது. அதன்படி ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் என்பது நவம்பர் 25ம் தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் டிசம்பர் மாதம் 3 ம் தேதி எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் தான் சட்டசபை தேர்தல் தேதியை மாற்றியதன் பின்னணியில் முக்கிய காரணம் ஒன்று உள்ளது. அதாவது நவம்பர் 23ம் தேதி என்பது முகூர்த்த தினமாக உள்ளது. ஏராளமான திருமணங்கள் நடத்த வாய்ப்புள்ளது.
இதனால் பொதுமக்கள் ஓட்டளிப்பதை தவிர்க்க வாய்ப்புள்ளது. இதனால் தேர்தல் தேதியை மாற்றம் செய்ய வேண்டும் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து தான் நவம்பர் 23ம் தேதிக்கு பதில் நவம்பர் 25ம் தேதி ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.