தென்சென்னை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்; நாளை முதல் நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் ரத்து; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தென்சென்னை பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நாளை முதல் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும் வளர்ச்சி மற்றும் நலத்திட்டப்பணிகளையும் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார்.
அந்த வகையில், நேற்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து, ஆய்வு மேற்கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு செல்லும் வழியில், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து இன்று, சென்னை, செங்கல்பட்டு , காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு ஆலோசனை நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அரங்கில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ”மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தினமும் காலை பத்திரிகை படிக்க வேண்டும், தொடர்ந்து ஊடகங்களை பார்த்து வரவேண்டும். இவ்வாறு பார்த்தால்தான் நாட்டில் என்ன நடக்கிறது, உங்கள் மாவட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை உங்களால் தெரிந்துகொள்ள முடியும். நீங்கள் காணும் செய்திகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும், அவ்வாறு தீர்வு காணப்பட்ட செய்திகளை ஊடகத்திற்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும். இதனை உங்களின் காலை பணியாக வைத்துக் கொள்ள வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த நல்ல தருணத்தில் நான் இரு முக்கிய அறிவிப்புகளை இந்த கூட்டத்தின் வாயிலாக அறிவிக்கிறேன். தென் சென்னை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இந்த அரசு பதவி ஏற்றவுடன் ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்ப சாலையில் உள்ள பெருங்குடி சுங்கச் சாவடியில் சாலை பயன்பாட்டு கட்டணம் வசூலிப்பது கைவிடப்பட்டது. இதனால் இப்பகுதி வழியாக செல்வோரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோரும் பெரும் பயனடைந்தனர்.
தற்போது இந்த சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. இதனால் சாலையின் பல பகுதிகள் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதே சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடியிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற கோரிக்கை எழுந்தது. இதையேற்று நாளை முதல் நாவலூர் சுங்க சாவடியில் சுங்க கட்டணம் வசூல் செய்வது நிறுத்தி வைக்கப்படும் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறு அடுக்குமாடி குடியிருப்பு, பொதுக் குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ 8 முதல் ரூ 5.50 காசாக குறைக்கப்படுகிறது. அதாவது 10 வீடுகளுக்கும் குறைவாக 3 மாடிகளுக்கும் மிகாத, மின்தூக்கி வசதி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மின்கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும். சிறு குடியிருப்புகளுக்கான பொது விளக்கு, மின் மோட்டார்களுக்கு சலுகை அமலாக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி திட்டப் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும். உரிய காலத்திற்குள் திட்டப்பணிகளை முடிக்காவிட்டால் செலவு அதிகரிக்கும், மக்களும் பாதிக்கப்படுவார்கள். விளிம்பு நிலை மக்கள், பட்டியலினமக்களுக்கான திட்டங்கள் விரைவில் அவர்களை சென்றடைய வேண்டும். ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் உள் கட்டமைப்பு பணிகள் பெரும் முதலீட்டில் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.