திருச்சி: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்பது பாஜகவின் கண் துடைப்பு நாடகம் என வெளுத்து வாங்கியுள்ளார் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. திருச்சியில் நடைபெற்ற திமுக மகளிர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் இதனைக் கூறினார். மேலும், அந்த நிகழ்ச்சியில் கனிமொழி பேசியதாவது;
இந்த கூட்டம் என் கண்ணுக்கு மலர்களாக தெரியவில்லை ; தீப்பந்தம் போல் தான் தெரிகிறது. நாம் சுழன்று எறிவோம். முதன் முதலில் திராவிட கழகம் தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா என முடிவெடுத்த மண் இந்த திருச்சி மண்! திராவிட இயக்கம் என்பது பெண்கள் உழைப்பை மதிக்கக் கூடிய, பெண்களின் உரிமைகளுக்காகப் போராடக்கூடிய இயக்கம் தான் திராவிட இயக்கம். மற்ற மாநிலங்களில் வாக்குரிமைக்குப் போராடினார்கள்.
தமிழ்நாட்டில் எந்த போராட்டமும் பண்ணாமல் நமக்கு வாக்குரிமை கொண்டு வந்தது திராவிட இயக்கம். பெண்கள் படிக்க வேண்டும், சொத்துரிமை, உதவி திட்டம் கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி, இதற்கு அடுத்தாற்போல் பெண்கள் உரிமை தொகையை கொண்டு வந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தார் கலைஞர். அடுத்த தேர்தலில் 50 சதவீத பெண்கள் வெற்றி பெற்றார்கள்.
கொரோனாவிற்குப் பிறகு மிகப்பெரிய அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருந்தது. பணிக்கு, படிக்க செல்பவர்கள் தடைப்படக்கூடாது என இலவச மகளிர் பேருந்து கொண்டுவரப்பட்டது. தடைகளையும் ஒவ்வொன்றாக உடைக்கக் கூடியது திராவிட முன்னேற்றக் கழகம். ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பெண்களின் சிந்தனை மாற்றக் கூடிய திட்டமாகும். விடுதலைக்கான வித்து என்றால் மகளிர் உரிமைத் தொகை தான். மகளிர்க்கான மசோதாவை கொண்டு வர வேண்டும் என டெல்லியில் போராட்டம் நடத்தினோம். நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில், நாடாளுமன்றம் கூடிய உடன் மகளிர் மசோதா கொண்டு வரப்படும் என தெரிவித்தார்கள்