ஐய்ஸ்வால்: மிசோரம் மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது; தொங்கு சட்டசபைதான் உருவாகும் என Small Box India-ன் இறுதி கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநில சட்டசபைக்கு நவம்பர் 7-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மிசோரம் மாநிலத்தப் பொறுத்தவரையில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் ஆகியவை பிரதான போட்டியாளர்கள். இம்மாநிலத்தில் பாஜகவும் களத்தில் இருக்கிறது. 1987-ம் ஆண்டு மிசோரம் மாநில அந்தஸ்து பெற்றது முதல் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் மிசோ தேசிய முன்னணி அல்லது காங்கிரஸ் ஆட்சிகளே மாறி மாறி அமைந்தன. 2018 தேர்தலில் மிசோ தேசிய முன்னணி ஆட்சி அமைத்தாலும் மத்தியில் ஆளும் கட்சி என்பதாலும் பாஜகவும் தம்மை கூட்டணி அரசில் இருப்பதாக காட்டிக் கொண்டது.
மிசோரம் சட்டசபை தேர்தல் இன்னும் சில வாரங்கள் நடைபெறும் நிலையில் Small Box India தமது இறுதி கட்ட கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பில் பெரும்பான்மைக்கான 21 இடங்களை எந்த கட்சியும் பெறாது; தொங்கு சட்டசபைதான் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் முதல் முறையாக தொங்கு சட்டசபை அமையக் கூடும் என்கிறது இக்கருத்து கணிப்பு.
இந்த கருத்து கணிப்புகளின் முடிவின் அடிப்படையில் காங்கிரஸ்- ஜோரம் மக்கள் இயக்கம் இரண்டும் இணைந்து ஆட்சி அமைக்கக் கூடிய சாத்தியம் உள்ளது. 2018-ம் ஆண்டு தேர்தலில் மிசோ தேசிய முன்னணி 26 இடங்களிலும் காங்கிரஸ் 5 இடங்களிலும் ஜோரம் மக்கள் இயக்கம் 8 இடங்களிலும் வென்றன. இம்முறை காங்கிரஸ் உயிர்த்தெழுந்து இழந்த அதிகாரத்தை கூட்டணி ஆட்சி மூலம் கைப்பறறும் வாய்ப்புகள் இருப்பதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.