என் மனைவி துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு செல்கிறார் என்று பார்ப்பதுதான் பா.ஜ.க.,வினரின் ஒரே வேலையாக உள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா கோயிலுக்கும்தான் என் மனைவி செல்கிறார்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
என் மனைவி துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது அவரது தனிப்பட்ட விருப்பம். அதை நான் தடுக்க விரும்பவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னையில் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம் இன்று நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், ”பாராட்டுகளைப் போல விமர்சனங்களையும் நான் விரும்புகிறேன். விமர்சனங்களில் தனிப்பட்ட நலனை விட பொதுநலன் தான் அதிகம். எனவே அதை விரும்புகிறேன். தி.மு.க.,வை கற்பனையில் கூட அழிக்க முடியாது. கொள்கை என்றால் கிலோ எவ்வளவு என கேட்பது அ.தி.மு.க. பா.ஜ.க.,வும், அ.தி.மு.க.,வும் நாணயம் இல்லாத நாணயத்தின் இரு பக்கங்கள். மிரட்டலுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் என்பதால் பொய் மூட்டைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள். போலியான பெருமைகள் தேவையில்லை. உண்மையான உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்தால் போதும்.
நமது கருத்துகள் தமிழகத்தைத் தாண்டி இந்தியா முழுமைக்கும் ஒலிக்க வேண்டும். தமிழர்களை தலை நிமிர வைக்க பிறந்த இயக்கம்தான் திராவிட இயக்கம். சமூகத்தை பின்னோக்கி இழுத்துக் கொண்டிருந்த நோய் கிருமிகளை ஒழிக்க உருவான மருந்துதான் நம்முடைய திராவிட இயக்கம். என் பேச்சை லைக் மட்டும் செய்யாமல் ஷேர் செய்யுங்கள். இன்று சீவிடுவேன் என்று சொல்கிறார்களே. அதற்காகத்தான் இதை சொல்கிறேன். வலை தளங்கள் ஒருவரை ஒரே நாளில் புகழின் உச்சிக்கு கொண்டு போய் சேர்க்கும். நெகட்டிவ் பிரச்சாரம் மூலம் பிறரை வீழ்த்தக் கூடாது. பாசிட்டிவ் பிரச்சாரம் மூலம் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆரிய ஆதிக்கத்திற்குதான் நாங்கள் எதிரி, ஆன்மிகத்திற்கு அல்ல. என் மனைவி துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு செல்கிறார் என்று பார்ப்பதுதான் பா.ஜ.க.,வினரின் ஒரே வேலையாக உள்ளது. அங்கே சென்று போட்டோ எடுத்துவிட்டு, இதோ பார்த்தீர்களா கோயிலுக்கு போகிறார் என பரப்புவார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா கோயிலுக்கும்தான் என் மனைவி செல்கிறார். அது அவருடைய விருப்பம். அதை தடுக்க நான் விரும்பவில்லை.
தி.மு.க ஆட்சியில் கோவில்கள் இடிக்கப்பட்டதாக தகவல்கள் பரவுகின்றன. வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளம் மூலம் வதந்தி பரவுகிறது. கோயிலையும் பக்தியையும் பா.ஜ.க. தன்னுடைய அரசியலுக்கு சாதகமாக மாற்ற நினைக்கிறது. ஆன்மீகத்தையும் அரசியலையும் மிகச்சரியாக பகுத்துப் பார்க்கத் தெரிந்த பகுத்தறிவுவாதிகள்தான் தமிழ்நாட்டு மக்கள். 1000 கோயில்களுக்குக் குடமுழுக்கு விழா நடத்திய, 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை மீட்ட ஆட்சிதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி" என்று கூறினார்.