இந்தியாவில் இருந்து 41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுவதுடன், கனடா இப்போது சண்டிகர், மும்பை மற்றும் பெங்களூரு தூதரகங்களில் விசா மற்றும் தூதரக சேவைகளை நிறுத்தியுள்ளது.
கனடாவின் சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், கனடா - இந்தியா இடையான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கனடாவுக்கான இந்திய தூதர் திரும்ப பெறப்பட்டார். இதற்கு பதிலடியாக, இந்தியாவுக்கான கனடா தூதர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த சம்பவம் உலக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து 41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுவதுடன், கனடா இப்போது சண்டிகர், மும்பை மற்றும் பெங்களூரு தூதரகங்களில் விசா மற்றும் தூதரக சேவைகளை நிறுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள கனடா தூதரகத்தில் மட்டும் சேவைகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை கனட வெளியுறவுத் துறை அமைச்சர் மெலனி ஜோலி வெளியிட்டுள்ளார். அதில், இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் மோதல் காரணமாக 41 தூதர்கள் மற்றும் அவர்களது 42 குடும்ப உறுப்பினர்களை இந்தியாவிலிருந்து திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளார்.