கடன் வசூலிக்க சென்ற அரசு மற்றும் வங்கி அதிகாரிகள் மீது குண்டர்கள் தாக்குதல்; திருச்சியில் வருவாய்த் துறையினர் கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணா; பணிகள் பாதிப்பு
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காஜாமலை பகுதியில் ஏ.சி.எல் என்ற சாஃப்ட்வேர் நிறுவனத்தை பக்கிரிசாமி, கார்த்திகேயன், ரெங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் நடத்தி வந்துள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு கனரா வங்கியில் ரூ.22 கோடி கடன் வாங்கிவிட்டு 2019 ஆம் ஆண்டு நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.
இதனையடுத்து வங்கியில் பெற்ற கடனுக்காக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவின்படி, காஜாமலை பகுதியில் உள்ள அவர்களுக்கு சொந்தமான ரூ.44 லட்சம் மதிப்புள்ள வீட்டை மண்டல துணை வட்டாட்சியர் பிரேம்குமார், கனரா வங்கி ஊழியர்களுடன் ஜப்தி செய்ய சென்றபோது, அடையாளம் தெரியாத 20-க்கும் மேற்பட்ட நபர்கள் சரமாரியாக உருட்டு கட்டைகளால் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயம் அடைந்த மண்டல துணை வட்டாட்சியர், கனரா வங்கி ஊழியர்கள் படுகாயத்துடன் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால், அவர் வீட்டிற்கு ஜப்தி செய்ய சென்ற மண்டல துணை வட்டாட்சியர் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பணியை புறக்கணித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தில் 750 வருவாய் துறையினர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
முன்னதாக, காஜாமலை பகுதியில் செயல்பட்டு வந்த நிறுவன உரிமையாளரின் வீட்டினை ஜப்தி செய்ய சென்ற அரசு ஊழியர்களை தாக்கியவர்களில் 3 பேரை இன்று கே.கே.நகர் போலீஸார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.