அகமதாபாத் : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 8வது முறையாக வீழ்த்தி இந்திய அணி தங்களுடைய சாதனையை தொடர்ந்து வருகிறது. அகமதாபாத்தில் ஒரு லட்சம் மக்களுக்கு முன்பு நடத்தப்பட்ட இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
பாகிஸ்தான் அணி பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் நல்ல பார்மில் இருந்ததால் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை ஆட்டத்தின் பாதியில் தலைகீழ் மாறியது.பாகிஸ்தான அணி 155 ரன்கள் இரண்டு விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த போது அடுத்த 36 ரன்கள் சேர்ப்பதற்குள் எட்டு விக்கெட்டுகளை இழந்தது. 192 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் அதிரடியாக விளையாடி வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் இந்தியாவில் வெற்றிக்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இதில் முதல் காரணமே டாசில் சரியாக பந்துவீச்சை தேர்வு செய்தது தான். ஏனென்றால் பாகிஸ்தான் அணிக்கு ஒரு இலக்கை கொடுத்து விட்டால் அவர்கள் அதனை எட்டுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. மேலும் அகமதாபாத் ஆடுகளம் இரவு நேரத்தில் ரன் குவிப்புக்கு சாதகமாக மாறுகிறது.
இதன் காரணத்தால் இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதேபோன்று கேப்டன் ரோகித் சர்மாவின் அபாரமான நுணுக்கங்களால் பாகிஸ்தான அணி கடுமையாக தடுமாறியது. குறிப்பாக அவர் பாகிஸ்தான் அணியின் நடுவரிசை வீரர்கள் தளத்திற்கு வந்தபோது குல்தீப் யாதவையும் பும்ராவையும் மாற்றி பயன்படுத்தினார். இதன் மூலம் விக்கெட்டுகள் சரிந்தது. இதேபோன்று முஹமது சிராஜ் மீது அவர் வைத்த நம்பிக்கையும் வீண் போகவில்லை. அவரும் பாபர் அசாமின் விக்கெட்டை வீழ்த்தி ரோஹித் வைத்த நம்பிக்கையை காப்பாற்றினார்.