சென்னை: உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ் அப் செயலியில் புதிய சேனலை ஆரம்பித்துள்ளார் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின். அப்டேட் ஆவதில் ஆர்வம்: காலத்தின் மாற்றத்திற்கேற்ப சமூக வலைதளப் பக்கங்களில் தங்களை அப்டேட் செய்து கொள்வதில் அரசியல் கட்சித் தலைவர்கள் இப்போது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன.
ஏனெனில் இனி எதிர்காலமே சமூக வலைதளங்களும், டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களும் தான் என்றாகிவிட்டது. இதனால் வாக்காளர்களை கவர குறிப்பாக இளைஞர்களை தங்கள் பக்கம் ஈர்க்க வாட்ஸ் அப், எக்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், என எல்லா வகைகளிலும் தங்களின் சமூகவலைதள செயல்பாடுகளை அரசியல் கட்சித் தலைவர்கள் அதிகரித்துள்ளனர்.
வாட்ஸ் அப் சேனல்: இந்திய அளவில் வாட்ஸ் அப் சேனல் வைத்திருக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் யார் யார் என்று பார்த்தோம் என்றால் பிரதமர் மோடி முதல் இடத்தில் இருக்கிறார். அவரை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சேர்த்து 9 மில்லியன் பின் தொடர்வோர் உள்ளனர். அவருக்கு அடுத்தபடியாக ராகுல் காந்தியை எடுத்துக்கொண்டால், அவரை 7 லட்சத்து 38 ஆயிரத்து 846 பேர் வாட்ஸ் அப் சேனலில் பின் தொடர்கிறார்கள். பிரியங்கா காந்தியை 41 ஆயிரத்து 786 பேர் ஃபாலோ செய்து வருகிறார்கள். உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை 1 லட்சத்து 86 ஆயிரத்து 678 பேர் பின் தொடர்கிறார்கள்.
முக்கியத் தலைவர்கள்: இவர்களை போலவே அமித்ஷா, மனோஹர் லால் கட்டார், நவீன் பட்நாயக், சிவ்ராஜ் சிங் சவுகான், பினராயி விஜயன், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷணவ், அபிஷேக் பானர்ஜி, தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, சித்தராமையா, கமல்நாத், ஆதித்யா தாக்கரே, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், அகிலேஷ் யாதவ், உள்ளிட்ட இன்னும் பலர் வாட்ஸ் அப் சேனல் வைத்துள்ளனர். இதன் மூலம் தாங்கள் பங்கேற்கும் நிகழ்வுகள் குறித்த விவரங்களை உடனுக்குடன் தெரியப்படுத்தி வருகின்றனர்.
தமிழகத் தலைவர்கள்: தமிழகத்தை பொறுத்தவரை முதலமைச்சர் ஸ்டாலின் இப்போது தான் வாட்ஸ் அப் சேனல் ஆரம்பித்துள்ளார். அதேபோல் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா சில நாட்களுக்கு முன்னர் தான் வாட்ஸ் அப் சேனல் ஆரம்பித்தார். மற்ற தலைவர்கள் எல்லாம் வாட்ஸ் அப் சேனலை ஆரம்பிக்க இப்போது தான் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.