தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் (83) உடலநலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார். அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
பங்காரு அடிகளார் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அஞ்சலி செலுத்துகிறார்.
மேலும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கரும்பாக்கம் கிராமத்தில் பிறந்த பங்காரு அடிகளார், சிறுவயது முதலே ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர், வேப்பமரத்தின் அடியில் குறிசொல்லி வந்தார்.
இந்த நிலையில், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை கடந்த 1970-ம் ஆண்டு நிறுவினார். பக்தர்களால் ‘அம்மா’ என்று அழைக்கப்பட்ட அடிகளார் கோயில் கருவறைக்கே சென்று பெண்கள் நேரடியாக வழிபாடு செய்யும் முறையை ஏற்படுத்தினார். இது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் ஆதிபராசக்தி என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவினார்.
இதன்மூலம், மருத்துவம், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அறக்கட்டளை மூலம் சுற்றுப்புற கிராமங்கள் உட்பட பல பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வந்தார்.
இந்த நிலையில், வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பங்காரு அடிகளார் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் மறைந்தார். அவரது உடல், பக்தர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் அருகே உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டது.
பங்காரு அடிகளார் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அடிகளாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மேல்மருவத்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப் புரம், திருவண்ணாமலை மாவட் டங்களை சேர்ந்த 2,000 போலீஸார்அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக பங்காரு அடிகளாரின் மறைவையொட்டி இன்று (அக்:20) மதுராந்தகம் கோட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.