அக்டோபர் 19ஆம் தேதி (நாளை) வெளியாக உள்ள விஜய்யின் லியோ படத்தைப் பாராட்டிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் முக்கிய ரகசியத்தை கசியவிட்டுள்ளார்.
தளபதி விஜய் நடித்துள்ள லியோ படம் பெரும் சட்டப்போராட்டங்களுக்கு பிறகு வழக்கம்போல் நாளை காலை 9 மணிக்கு தமிழகத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தை பார்த்த அமைச்சரும் முன்னாள் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம்மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து்ளளது.
இதற்கு முன்பு வெளியான படத்தின் அப்டேட்கள், பாடல்கள் மற்றும் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசின் சார்பில் படத்திற்கு சிறப்பு காட்சி திரையிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் காலை 4 மணி காட்சிகள் கேட்டு பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடினாலும் அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை.
அதேபோல் காலை 7 மணி காட்சி கேட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தபோதும் அதற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்காத நிலையில், நாளை லியோ படம் வழக்கமாக காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே லியோ படத்தை பார்த்த அமைச்சரும் முன்னாள் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் வைத்திருக்கும் உதயநிதி, லியோவின் சிறப்பு நிகழ்ச்சியைப் பார்த்ததாகத் கூறப்படுகிறது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பட விநியோகஸ்தர், விஜய்யை ‘தளபதி அண்ணா’ என்று அழைத்து அவருக்கு தம்ஸ் அப் கொடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜின் இயக்குனர் திறனை பாராட்டியுள்ளார். அதேபோல் இந்த படம் எல்.சி.யூ-வின் ஒரு பகுதி என்ற தகவலை வெளியிட்டதற்காக ரசிகர்கள் சிலர் உதயநிதியை விமர்சித்து வருகின்றனர்.
படத்தின் நீண்டகால ரகசியத்தை வெளிப்படுத்தியதற்காக அவரை மீம்ஸ் மற்றும் ட்வீட்கள் மூலம் ட்ரோல் செய்து வருகின்றனர். லியோ கடந்த சில வாரங்களாக பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். புகைபிடிப்பதை ஊக்குவிப்பது தொடர்பாக படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை விமர்சித்த நிலையில், டிரெய்லரில் விஜய் கெட்டவார்த்தை பேசியது தொடர்பக பெரும் சர்ச்சை வெடித்தது. இதற்கிடையில், படத்தின் ப்ரீ-புக்கிங் மட்டும் சுமார் 34 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன் மூலம் ஜெயிலரின் முதல் நாள் வசூலை முறியடித்து இப்படம் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.