இஸ்ரேல்: கசா பகுதியில் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மீண்டும் மோதல் உச்சமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் நாட்டை ராணுவ வீரர்களை ஹமாஸ் படையினர் பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் கடந்த பல ஆண்டுகளாகவே காசா பகுதியில் மோதல் நிலவி வருகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை.
இந்த காசா பகுதியை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் என இரு தரப்பும் சொந்தம் கொண்டாடுவதே இதற்கு முக்கிய காரணமாகும். இதனால் பாலஸ்தீனில் உள்ள ஹமாஸ் படையை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
காசா : இதற்கிடையே மீண்டும் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது. அதிகாலை 6 மணிக்கு இந்தத் தாக்குதல் தொடங்கிய நிலையில், சில மணி நேரத்தில் சுமார் 5000 ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஹமாஸ் பயங்கரவாதிகள் நாட்டில் ஊடுருவியதாகவும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தங்களின் காசா பகுதி வழியாகப் பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டிற்குள் ஊடுருவியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. காசா பகுதியில் இருந்து சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடைபெற்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். காசாவில் பல்வேறு இடங்களில் இருந்து நடத்தப்பட்ட இந்த ஏவுகணை தாக்குதலில், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏவுகணை தாக்குதல்: அதிகாலை முதலே சுமார் 5000 ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கிப் பாய்ந்துள்ளது. இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் சைரன் உதவியுடன் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் போர் நிலையை இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் பதுங்கு குழிகளுக்கு அருகிலேயே இருக்குமாறும் எச்சரித்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் ராணுவம் தனது ட்விட்டரில், "கடந்த ஒரு மணி நேரமாக காசா பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும், ஹமாஸ் பயங்கரவாதிகள் பல்வேறு இடங்கள் மூலம் இஸ்ரேல் எல்லைக்குள் ஊடுருவினர்" என்று தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் இணையத்திலும் டிரெண்டாகி வருகிறது.