தமிழ்நாடு அரசு தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தலைவராக சைலேந்திர பாபுவை நியமனம் செய்ய கோரும் தமிழக அரசின் பரிந்துரையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் நிராகரித்துள்ளார். தமிழக அரசு தேர்வாணையத்திற்கு நீண்ட நாட்களாக தலைவர் பதவிக்கு ஆட்கள் நியமிக்கப்படவில்லை. அது போல் அந்த ஆணையத்தின் உறுப்பினர்கள் சிலரையும் தமிழக அரசு நியமிக்காமல் இருந்தது.
இந்த நிலையில் தமிழக டிஜிபியாக இருந்து கடந்த ஜூன் 30ஆம் தேதி ஓய்வு பெற்ற சைலேந்திர பாபு ஐபிஎஸ்ஸை நியமிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக சைலேந்திர பாபு ஓய்வு பெறும் மாதத்திற்கு சில மாதங்களுக்கு முன்பே சொல்லப்பட்டது. இந்த நிலையில் சைலேந்திர பாபு ஓய்வு பெற்றார். அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்குமாறும் 10 பேரை உறுப்பினர்களாக்குமாறும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பரிந்துரை செய்து கடந்த ஜூலை மாதம் கோப்புகள் அனுப்பப்பட்டன.
ஆனால் இந்த பரிந்துரை மீது முடிவு ஏதும் எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வந்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமனம் செய்வது தொடர்பான கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். பல்வேறு காரணங்களைக் கூறி கோப்புகளை திருப்பி அனுப்பிய ஆளுநர் நியமன அறிவிப்பை எப்படி வெளியிட்டீர்கள் என கேட்டிருந்தார்.
இதுகுறித்து ஆளுநர் வட்டாரங்களில் விசாரித்த போது டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியில் இருப்போரின் வயது வரம்பு 62 வயதாகும். அந்த வகையில் சைலேந்திர பாபுவை நியமித்தால் மீண்டும் 6 மாதங்களில் இன்னொரு தலைவரை நியமிக்க வேண்டியிருக்கும். அதாவது சைலேந்திர பாபுவின் வயது 62 ஆகிவிடும் என்பதால் ஆளுநர் நிராகரிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமனம் செய்வதற்கான காரணங்களை தமிழக அரசு விளக்கி ஆளுநருக்கு கடிதம் எழுதியது. நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் என்ன, யார் யார் விண்ணப்பித்தாரர்கள் போன்ற ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது. அத்துடன் சைலேந்திர பாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்குமாறு தமிழக ஆளுநருக்கு அரசு பரிந்துரைத்துள்ளது.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிக்க கோரும் பரிந்துரையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் நிராகரித்துள்ளார். சைலேந்திர பாபுவின் நியமன பரிந்துரையில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை. சைலேந்திர பாபுக்கு 62 வயது பூர்த்தியடைய இன்னும் 6 மாதங்கள் இருப்பதால் பரிந்துரை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.