அகமதாபாத் : ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் எட்டாவது முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாதித்தது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி.இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மோசமாக ஆடிய பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் சொதப்பி தோல்வியை தழுவியது.
1992 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் முதல் 2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் வரை ஏழு முறை உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதி இருக்கின்றன. அதில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இருந்தது. தற்போது எட்டாவது முறையாக நடந்த உலகக்கோப்பை மோதலில் பாகிஸ்தான் அணி தன் மோசமான சாதனையை மாற்றுமா? என்ற எதிர்பார்ப்பு பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
அதே போல, இந்திய ரசிகர்கள் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தும் என நம்பினர்.
அதை செய்து காட்டி இருக்கிறது தற்போதைய இந்திய அணி. இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 155 ரன்களுக்கு 3 விக்கெட்கள்; மட்டுமே இழந்து இருந்தது. ஆனால், அடுத்த 36 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து 191 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் 50, ரிஸ்வான் 49 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ரன்கள் ஆகும். துவக்க வீரர்கள் இமாம் உல் ஹக் 36, அப்துல்லா ஷபிக் 20 ரன்கள் சேர்த்தனர். மற்ற வீரர்களில் 12 ரன்கள் எடுத்த ஹசன் அலி தவிர அனைவரும் ஒற்றை இலக்க ரன்களே எடுத்து ஆட்டமிழந்தனர்.