இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த 15 பேர் அயலக தமிழர் நல வாரியத்தை தொடர்பு கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் வசிக்கும் தமிழர்கள் அயலக தமிழர் நலவாரியத்தை தொடர்பு கொண்டால் தூதரகம் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.
இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக இருப்பது காசா எனும் பகுதியாகும். காசா தற்போது பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த காசா பகுதியை கட்டுப்படுத்த இஸ்ரேல் முயற்சித்து வருகிறது. இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு இருக்கிறது.அதே நேரத்தில், பாலஸ்தீனத்துக்கு எகிப்து, ஈரான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளின் ஆதரவு உள்ளது. இதற்கிடையே யாருமே எதிர்பார்க்காத வகையில் இன்று அந்நாட்டு நேரப்படி காலை 6.30 மணிக்கு இஸ்ரேல் நாட்டை நோக்கி பாலஸ்தீன் ஹமாஸ் மிக மோசமான தாக்குதலை ஆரம்பித்தது.
இஸ்ரேல் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் இன்று காலை ஏவுகணை தாக்குதலை ஹமாஸ் படைகள் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் தீவிரவாதிகள் Al-Aqsa Flood ஆபரேஷன் என பெயர் வைத்துள்ளனர். உச்சக்கட்ட பதற்றம்: இதற்கு பதிலடி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி உள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு ‛ஆபரேஷன் அயர்ன் ஸ்வாட்ஸ்' (Operation Iron Swords) என பெயர் வைத்துள்ளது. இஸ்ரேலில் இருந்து ராணுவ போர் விமானங்களின் காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் உள்ள இடங்களில் தாக்குதலை தொடர்ந்துள்ளனர். இதனால் இஸ்ரேலில் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான மோதலில் பல்வேறு மேற்கத்திய நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் எனத் தெரிகிறது. இப்படி இஸ்ரேலில் உச்ச கட்ட பதற்றம் நீடித்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிவுறுத்தலில், உள்ளூர் நிர்வாகம் வெளியிடும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும், தனியாக இருப்பதை தவிர்த்து பாதுகாப்பு முகாம்களில் தங்க வேண்டும். இஸ்ரேலில் 15 தமிழர்கள்: மத்திய அரசு சார்பில் அவசர தேவைக்கு இஸ்ரேலில் உள்ள இந்திய இந்திய தூதரக அதிகாரிகளை அங்குள்ள இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம்" என அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த 15 பேர் அயலக தமிழர் நலவாரியத்தை தொடர்பு கொண்டுள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உதவி எண்கள்: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் மூண்டுள்ள நிலையில் அங்கு வசிக்கும் தமிழர்கள் தமிழ்நாடு அரசை தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. +91-87602 48625 +91-99402 56444 +91-96000 23645 மேலும் nrtchennai@tn.gov.in, nrtchennai@gmail.com என்ற இணையதளங்களின் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.