சென்னை : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.இந்தியா தங்களது முதல் ஆட்டத்தை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. சென்னையில் செல்ல பிள்ளையாகவே ஜடேஜா விளங்கி வருகிறார்.
10 ஆண்டுகள் மேல் சென்னையில் சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா விளையாடி வருவதால் சேப்பாக்கம் ஆடுகளம் எவ்வாறு செயல்படும். இங்கு எவ்வாறு பந்து வீசவேண்டும் என அனைத்து நுணுக்கங்களும் ஜடேஜாவுக்கு தெரியும்.இதே போல் இங்கேயே பிறந்து வளர்ந்த அஸ்வினும் அணியில் இருப்பதால் இருவரும் கூட்டணி போட்டுக்கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர்.
வெயில் சுட்டு எரித்ததால் ஆடுகளம் மிகவும் காய்ந்த நிலையில் இருந்தது. இதனை பயன்படுத்திக் கொண்டு ஜடேஜா அபாரமாக பந்து வீசி நெருக்கடியை கொடுத்தார். ஆஸ்திரேலிய அணி 74 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபஸ்சேன் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தது.அப்போது ஜடேஜா கையில் பந்து வந்தவுடன் அவர் தன்னுடைய கைவரிசையை காட்ட ஆரம்பித்து விட்டார்.
ஸ்மித் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா வீசிய பந்து ஒன்று கணிக்க முடியாமல் ஸ்மித் தடுமாறினார். அது இண்டிகேட்டர் போடாமலேயே திரும்பி ஸ்டெம்பை பதம் பார்த்தது. இதேபோன்று அந்த அணியின் நட்சத்திர வீரர் மார்னஸ் லாபஸ்சேன் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடஜாவின் அபார பந்துவீச்சால் ஸ்டெம்பிட் ஆனார்.இதேபோன்று அதே ஓவரில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரின் விக்கெட்டையும் ஜடேஜா கைப்பற்றினார்.இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி 11 ரன்கள் எல்லாம் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஜடேஜா தனி ஆளாக ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ்க்கு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டார்.