அழிய போகிறவர்கள் தான் அடுத்தவர்களை பார்த்து பேசுவார்கள். துரியோதனன் கூட்டம் என்றைக்கும் ஜெயித்ததில்லை' என எடப்பாடி பழனிச்சாமி குறித்து டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் அ.ம.மு.க சார்பில் நாளை நடைபெற உள்ள ஒருங்கிணைந்த கோவை மாவட்ட செயல்வீரர் கூட்டத்தில் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொள்கிறார். இதற்காக விமான மூலம் கோவை வந்தடைந்த அவர் கோவையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களின் சந்தித்தார்.
அப்போது பேசிய டி.டி.வி தினகரன், ஒன்றிணைந்த கோவை மாவட்ட செயல்வீரர் கூட்டத்திற்காக கோவை வந்துள்ளதாக கூறினார். 'வினாஷ காலே விபரீத புத்தி' என்பது போல் அழிய போகிறவர்கள் தான் அடுத்தவர்களை பார்த்து பேசுவார்கள் என எடப்பாடி பழனிச்சாமியை குறிப்பிட்ட அவர் துரியோதனன் கூட்டம் என்றைக்கும் ஜெயித்ததில்லை எனவும், துரியோதனன் கூட்டம் எங்களைப் பார்த்து சொல்வதாகவும் அவர்கள் வீழ்வது உறுதி எனவும் கூறினார்.
அ.தி.மு.க ஒன்றிணைப்பு குறித்த சசிகலா கூறியது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், தனக்கு தெரிந்து அ.தி.மு.க ஒன்றிணைய வாய்ப்பில்லை எனவும் எந்த காரணத்தை கொண்டும் பழனிச்சாமி உடன் அ.ம.மு.க ஒன்றிணைந்து செல்வதற்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார். ஓ.பி.எஸ் நடத்தும் நிகழ்ச்சியில் அழைப்பு வந்தால் அது குறித்து யோசிப்போம் என்றார்.
செல்லூர் ராஜு அடுத்த பிரதமர் மோடி தான், அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் என கூறியது பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் "நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அவர் ஒரு விஞ்ஞானி. விஞ்ஞானியின் பேச்சு சாதாரண மக்களாகிய நமக்கெல்லாம் புரியாது" என்று கூறினார்.
"அ.ம.மு.க - ஓ.பி.எஸ் நட்பு அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் நல்ல முறையில் தொடர்கிறது. பா.ஜக அ.தி.மு.க பிரிவு என்பது இரண்டு கட்சிகளும் ஒன்றாக இருந்தது, தற்போது பிரிந்து விட்டது என்று தான் பார்க்க வேண்டும். அ.ம.மு.க பாஜக கூட்டணியைப் பொறுத்தவரையில், யூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. எங்களுடைய நிலைப்பாடுகளை உரிய நேரத்தில் தெரிவிப்போம்" என்று அவர் கூறினார்.