பயிற்சியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆஃப் ஸ்பின் போட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.
13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நாளை (வியாழக்கிழமை) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் அரங்கேறும் 17வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டிக்காக இந்திய அணி தீவிர பயிர்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயிற்சியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆஃப் ஸ்பின் போட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், ரோகித் சர்மா ஆஃப் ஸ்பின் போட்டு பயிற்சி மேற்கொண்டு வருவதால் நாளைய போட்டியில் மூத்த ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிக்க மாட்டாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
நடப்பு உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருத்த சுழல் ஆல்ரவுண்டரான அக்சர் படேலுக்கு இலங்கையில் நடந்த ஆசிய கோப்பை போட்டியின் போது காயம் ஏற்பட்டது. அதனால், அவரது இடத்தில் அஸ்வினை சேர்க்க குரல்கள் வலுத்தன. இதனைக் கருத்தில் கொண்ட இந்திய அணி நிர்வாகம் அஸ்வினை உலகக் கோப்பை அணியில் சேர்த்தது.
அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் களமாடியும் இருந்தார். சென்னையில் நடந்த அந்தப் போட்டியில் அஸ்வின் 10 ஓவர்கள் வீசிய நிலையில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். ஆனால், அதன்பிறகு நடந்த 2 போட்டிகளிலும் (பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்) அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால், நாளை நடக்கும் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நேற்றைய இந்திய அணி பயிற்சின் போது விராட் கோலி வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்த்தும், ஸ்ரேயாஸ் ஐயர் த்ரோ டவுன் ஸ்பெஷலிஸ்ட்களுக்கு எதிராகவும் பேட்டிங் பயிற்சி செய்தனர். இதேபோல், இடதுகை ஆட்டக்காரனான இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால், கேப்டன் ரோகித் சர்மா மட்டும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடாமல், திடீரென பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டார்.
பேட்டிங் பயிற்சி செய்த ஜடேஜாவுக்கு ரோகித் மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் இணைந்து ஆஃப் ஸ்பின் வீசினர். சில பந்துகளை வீசிய ரோகித் அஸ்வினுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். வங்கதேச அணியில் டாப் 7 பேட்ஸ்மேன்களில் 4 பேர் இடதுகை பேட்ஸ்மேன்களாக உள்ளனர். இதனால் அஸ்வினுடன் கூடுதலாக இன்னொரு ஆஃப் ஸ்பின்னரை இந்திய அணி தயார் செய்து வருகிறது. தற்போது அந்தப் பொறுப்பை ரோகித் சர்மா எடுத்துக்கொண்டதாக தெரிகிறது.