தஞ்சை: நாள்தோறும் செயற்கைக்கோள் ஏவும் நிலை விரைவில் வரும் என இஸ்ரோ விஞ்ஞானியும் சந்திரயான் 1 திட்ட இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். தஞ்சை தொழில் வர்த்தக சங்கம் சார்பில் அரையாண்டு பொதுக் குழு மற்றும் சிறப்பு கூட்டத்தில் சந்திரயான் 1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் இந்தியாவில் திருவனந்தபுரத்தில் எளிமையான முறையில் செயற்கைகோள் அனுப்பும் பணி தொடங்கப்பட்டது.
இந்த துறையில் இந்தியா தற்போது படிப்படியாக முன்னேறியுள்ளது. அந்த முன்னேற்றம் இன்று உலக அளவில் விண்வெளி துறையில் சிறந்து விளங்கும் 3 நாடுகளில் இந்தியா ஒன்றாக வளர்ந்துள்ளது. நிலவுக்கு இதுவரை 3 முறை விண்கலன்களை அனுப்பியிருக்கிறோம்.
நிலவில் உள்ள கனிம வளத்தை இனி அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. அப்படி ஆராய்ச்சியின் முடிவில் என்னென்ன வளங்கள் நிலவில் இருக்கின்றன என்பதை தெரிந்து கொண்டு அடுத்த 10 ஆண்டுகளில் பூமிக்கு என்னென்ன கனிமங்கள் தேவையோ அவற்றை சந்திரனில் இருந்தே கொண்டு வர வாய்ப்பு உள்ளது.
முன்பெல்லாம் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கு அதிக செலவு ஏற்பட்டது. ஆனால் இப்போது மற்ற நாடுகளை காட்டிலும் நாம் குறைந்த செலவிலேயே செயற்கைக்கோள்களை ஏவி வருகிறோம். ஆண்டுக்கு ஒரு செயற்கைகோள் அனுப்புவது அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் 2021 இல் 1,200 செயற்கைகோள்களும் 2022 ஆம் ஆண்டு 2300 செயற்கைகோள்களும் 2023 இல் 3 ஆயிரம் செயற்கைகோள்களும் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நாள்தோறும் செயற்கைகோள் ஏவும் நிலை நிச்சயம் வரும்.
செயற்கைகோளை சிக்கனமான செலவில் விண்ணுக்கு அனுப்புவதில் இந்தியாவுக்கும் எலான் மஸ்குக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது. எலான் மஸ்கை விட குறைந்த செயற்கைகோளை அனுப்புவதற்கு குலசேகரப்பட்டினம் மண் உதவுகிறது. இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.