நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு `செரியாபனி' என்ற பயணிகள் கப்பல் போக்குவரத்து சில நாட்களில் முன் தொடங்கிய நிலையில் நாளை 20-ம் தேதியுடன் சேவை நிறுத்தப்படும் என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திடீர் நிறுத்தத்திற்கு என்ன காரணம்?
நாகை துறைமுகத்தில் இருந்து, இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இந்தக் கப்பலில் பயணம் செய்ய முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், வாரம் முழுவதும் இயக்கப்படுவதற்குப் பதிலாக, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நாகையிலிருந்து பயணிகள் கப்பல் கடந்த 16-ம் தேதி 15 பயணிகளுடனும், நேற்று 23 பயணிகளுடனும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு சென்றது. இந்நிலையில், வடகிழக்குப் பருவ மழை வரும் 23-ம் தேதி தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவும், நாகை துறைமுக விரிவாக்கப் பணி காரணமாகவும், நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்குச் செல்லும் பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளையுடன் (அக்.20) நிறுத்தப்படுகிறது.
நாளை காங்கேசன்துறைக்குச் செல்லும் பயணிகள் கப்பல், அங்கிருந்து கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு `செரியாபனி' என்ற பயணிகள் கப்பல் 25 கோடி ரூபாய் செலவில் சுமார் ஒரு வருடம் கொச்சினில் தயாரிக்கப்பட்டது. இந்தக் கப்பல் ஒரு மணிநேரத்திற்கு 36 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய திறன் கொண்டது.
இந்த சொகுசு கப்பலில் பயணிகளுக்கு தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்கள், நொறுக்கு தீனிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதுபோக குளுகுளு ஏசி வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ள கப்பலில் பொழுதுபோக்கிற்காக 6 தொலைக்காட்சி பெட்டிகள் தமிழ், ஆங்கிலம் மற்ற மொழியினருக்கு தேவையான வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து சேவையை டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் மோடி கடந்த 14-ம் தேதி துவக்கி வைத்த நிலையில் நாளையுடன் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்படுவது பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பலகோடி ரூபாய் தண்ணியில் கொட்டி செலவழித்து உருவாக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து ஓரிரு நாட்கள் பயணித்த நிலையில் மீண்டும் நாளையுடன் நிறுத்தப்படுவதால், அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வருமோ, வராதோ என்ற ஏக்கத்தில் வணிகர்களும், சுற்றுலா பயணிகளும் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.