பண்டிகை தினங்களை முன்னிட்டு இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு பேக்கரி மற்றும் ஹோட்டல்களில் இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற்பனை செய்யும் தயாரிப்பாளர்கள் மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பண்டிகை காலங்களில் மட்டும் இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பவர்கள் மற்றும் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளர்களுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "இனிப்பு கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப் பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் உணவு பொருட்களை தயாரித்து பாதுகாப்பான உணவுப் பொருட்களை வழங்க வேண்டும். கலப்படமான பொருள்களையோ அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக இனிப்பு கார வகைகளில் நிறமிகளையோ உபயோகிக்க கூடாது.
தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கொண்டு பொட்டலமிடுவது கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அச்சிடப்பட்ட செய்தித்தாள்களை தரையில் விரித்து எண்ணெண்யை உறிஞ்சும் வகையில் வைத்திருக்கும் நடைமுறையை பின்பற்றக் கூடாது, இனிப்பு வகைகளில் அனுமதிக்கப்பட்ட கலர் நிறமிகள் அனுமதிக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவிற்கு அதிகமாக நிறமிகளை சேர்த்து இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படு
இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்க பயன்படுத்தும் எண்ணெய் நெய் மற்றும் மூலப் பொருள்களின் விவரங்களை முழுமையாக அதன் கொள்ளளவு கேன்களில் லேபிளில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். பால் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை தனியாக இருப்பு வைக்க வேண்டும் மற்றும் அதனை உபயோகிக்கும் கால அளவை முழுமையாக அச்சிட்டிருக்க வேண்டும்.
மேலும் பால் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்புகளை மற்ற இனிப்பு வகைகளோடு சேர்க்காமல் தனியாக பேக் செய்து வழங்க வேண்டும். தூய்மையான குடிநீரைக் கொண்டே அனைத்தும் தயாரிக்கப்பட வேண்டும்.
தயாரித்த பிறகு அதற்கு உபயோகப்படுத்தப்பட்ட பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களை சுத்தமாக கழுவி பூஞ்சை தொற்று வராத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். பண்டிகை காலத்தில் மட்டும் சமுதாய கூடங்கள் பிற இதர இடங்கள் மற்றும் கல்யாண மண்டபங்களில் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக ("http://foscos.fssai.govt.in") என்ற இணையதளத்தில் தங்களது வணிகத்திற்கான உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும் இனிப்பு மற்றும் கார உணவு தயாரிப்பாளர்கள் விற்பனையாளர்கள் கையாளுபவர்கள் அனைவரும் ("FoSTaC") பயிற்சியினை பெற்றிருக்க வேண்டும் மற்றும் ("Medical Fitness Certificate") வைத்திருக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொது மக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே உரிமம் பெற்று காலக்கெடு முடிந்து இருந்தால் அதனை உடனடியாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.