நாட்டின் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான 'பேங்க் ஆப் பரோடா'வின் 'பாப் வேர்ல்டு' செல்போன் ஆப்பை புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்க ரிசர்வ் வங்கி தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. என்ன காரணம் என்பதை பார்ப்போம். பேங்க் ஆஃப் பரோடா நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாகும்.
அதேநேரம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் பார்த்தால் அரசுக்கு சொந்தமான மூன்றாவது பெரிய வங்கியாகும். இந்த வங்கிதனது ஊழியர்களின் வசதிக்காக 'பாப் வேர்ல்டு' என்ற செல்போன் ஆப்பை வழங்கி உள்ளது. இன்டர்நெட் பேங்கிங் வசதியும் உள்ளது.
இந்நிலையில் 'பாப் வேர்ல்டு' ஆப்பில் ஆன்போர்டிங் செயல்பாட்டில் ஏற்பட்ட குறைபாடுகளைத் தொடர்ந்து, தனது மொபைல் ஆப்பை புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க வேண்டாம் என்று பேங்க் ஆஃப் பரோடாவுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949ன் பிரிவு 35ஏ வின் கீழ் தற்காலிக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
சில பேங்க் ஆஃப் பரோடா ஊழியர்கள் குறிப்பிட்ட இலக்குகளை அடைவதற்காக மொபைல் வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அந்நியர்களின் மொபைல் எண்களைப் பயன்படுத்தியதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. தற்போதுள்ள மொபைல் ஆப் வாடிக்கையாளர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பரோடா வங்கியின் மொபைல் ஆப்பில், வாடிக்கையாளர்களை இணைப்பதில் சில குறைபாடுகள் இருப்பது கவனிக்கப்பட்டது. இதையடுத்தே இந்நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இக்குறைபாடுகளை வங்கி சரி செய்த பின்னர், ரிசர்வ் வங்கி ஆய்வு செய்யும். அப்போது திருப்தியடைந்த பின், புதிய வாடிக்கையாளர்களுக்கு மொபைல் செயலியை வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கும் என்று கூறப்படுகிறது. இதனிடையே பேங்க் ஆஃப் பரோடா வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"ரிசர்வ் வங்கியின் கவலைகளை நிவர்த்தி செய்ய வங்கி ஏற்கனவே சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். சில இடைவெளிகளை சரிசெய்வதற்கான கூடுதல் நடவடிக்கைகளை நாங்கள் தொடங்கியுள்ளோம்.