ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், ஒரு முறை பயன்படுத்தி வீசப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இந்த பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, வினியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்துக்கும் தடை விதிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு அளித்தது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும், தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரியும் தமிழ்நாடு – புதுச்சேரி பேப்பர் கப் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின் போது, தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் தடை முடிவால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து பெறப்படும் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் அங்கீகாரத்தை (EPR) பெற முடியாமல் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், தமிழ்நாடு -புதுச்சேரி பேப்பர் கப் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வாதிடப்பட்டது.
மேலும், தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் தடை அரசாணையை ரத்து செய்ய வேண்டும் அல்லது, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் அங்கீகாரத்தைப் பெறும் வகையில், அரசாணையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். உச்சநீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணை இன்று நடைபெற்றது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசின் அரசாணை செல்லும் என்ற தீர்ப்பை வழங்கியது. மேலும் பேப்பர் கப்புகள் மீதான தடை உத்தரவை மத்திய அரசின் நடைமுறைகள் அடிப்படையில் மறுபரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.