சென்னை: திமுக மகளிர் உரிமை மாநாடு நடைபெற்ற சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பாலூட்டும் தாய்மார்களுக்காக 5 பிரத்யேக அறைகள் அமைக்கப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது. இதுவரை இது போன்றதொரு ஏற்பாடு வேறு அரசியல் கட்சிகள் நடத்திய மாநாட்டில் செய்யப்பட்டிருந்ததா என்றால் அது சந்தேகமே. பாலூட்டும் தாய்மார்கள் கூட மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொண்டார்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
பக்கா முன்னேற்பாடு: மாநாடு என்றால் வெறுமனே மேடையும், நாற்காலிகளும் மட்டும் போட்டு நடத்திவிட வேண்டும் என எண்ணாமல் பெண்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பார்த்துப் பார்த்து செய்திருந்தார் கனிமொழி எம்.பி. அந்த வகையில் குடிநீர், கழிவறை, பாலூட்டும் தாய்மார்கள் அறை என பல்வேறு ஏற்பாடுகளை பக்காவாக செய்திருந்தார் கனிமொழி.
புத்தகங்கள் பரிசு: இதனால் வெளியூர்களிலிருந்து மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த பெண்கள் சிரமமின்றி காணப்பட்டனர். அதே போல் சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட அனைத்து பெண் தலைவர்களுக்கு புத்தகங்களை மட்டும் பரிசாக அளித்தார் கனிமொழி. இதுவும் திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
உணர்வுப்பூர்வமான தருணம்: முன்னதாக மாநாடு தொடங்குவதற்கு முன் தனது அண்ணனும், முதலமைச்சருமான ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து உணர்வூப்பூர்வமாக தனது மரியாதையை வெளிப்படுத்தினார் கனிமொழி. அதாவது பொன்னாடையை தனது அண்ணன் கையில் கொடுத்துவிட்டு நினைவுப் பரிசை கொடுக்க முற்பட்ட போது, ஸ்டாலின் அந்த பொன்னாடையை தனது தங்கை கனிமொழிக்கு அணிவிக்க முயன்றார். இதைப் பார்த்து பதறிப்போன கனிமொழி, இந்தப் பொன்னாடை உங்களுக்கு தான் என அண்ணனிடம் கூறி அதை தாமே அணிவித்தும் விட்டார்.
அண்ணன் தங்கை: இந்த தருணத்தில் அண்ணனும் தங்கையும் உணர்வுப்பூர்வமாக தங்கள் பாசத்தை வெளிக்காட்டியது மேடையில் இருந்தோரின் கவனத்தை ஈர்த்தது. மொத்தத்தில் சோனியா காந்தி உள்ளிட்டோரை சென்னைக்கு அழைத்து வந்து திமுக மகளிர் உரிமை மாநாட்டை வெற்றிக்கரமாக நடத்தி தேசியளவில் கவனம் ஈர்த்துள்ளார் கனிமொழி எம்.பி.