காந்தி உள்ளிட்டோர் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் அவர்களையும் சாதி சங்க தலைவராக மாற்றியிருப்போம் என்றும் சுதந்திர போராட்ட தியாகிகளை மக்கள் நினைவில் இருந்து அகற்ற தமிழக அரசு முயற்சி செய்கிறது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடுமையாக சாடியுள்ளார். மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது. இதில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி கலந்துகொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் ஆரியம் திராவிடம் கிடையாது. தமிழகம் புண்ணிய பூமி. இந்தியாவை பிரித்தாளும் கொள்கைக்காகவே கால்டுவெல் போன்றோர் இந்தியா அனுப்பி வைக்கப்பட்டனர். சுதந்திர தினத்தை கருப்பு நாள் என்று கூறியவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றார்கள்.
சிவகங்கையில் 144 தடை உத்தரவு போட்டிருக்கிறார்கள். அக்டோபர் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மக்கள் இயல்பாக நடமாட தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மருது சகோதரர்களின் தியாகம் மக்களால் கொண்டாடப்படக்கூடாது என தமிழக அரசு நினைக்கிறது. அரசியல் கட்சி தலைவரின் நினைவு தினத்தில் அரசால் இப்படி தடை போட முடியுமா?.
சுதந்திர போராட்ட தியாகிகளை மக்கள் நினைவிலிருந்து அகற்றுவதற்கு தமிழக முயற்சிக்கிறது. காந்தி உள்ளிட்டோர் தமிழகத்தில் பிறந்திருந்தால் அவர்களையும் சாதி சங்க தலைவர்களாக மாற்றியிருப்பர். தியாகிகளை சாதி தலைவர்களாக அடையாளப்படுத்தி மக்கள ஒன்று சேர விடாமல் தடுக்கின்றனர். இவ்வாறு ஆளுநர் ரவி கூறினார்.
l