சென்னை: திமுக எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகங்கள், மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுக எம்.பி.யாக இருந்தவர் ஜெகத்ரட்சகன். பின்னர் அவர் எம்.ஜி.ஆர். கழகம், வீரவன்னியர் பேரவை. அதைத் தொடர்ந்து ஜனநாயக முன்னேற்றக் கழகம் என தனிக்கட்சி தொடங்கினார். 2009-ம் ஆண்டு அந்த கட்சியை திமுகவுடன் இணைத்துவிட்டார் ஜெகத்ரட்சகன்.
இதனைத் தொடர்ந்து அவர் திமுக சார்பில் லோக்சபா தேர்தல்களில் போட்டியிட்டு மத்திய அமைச்சராகவும் ஆனார். அப்போது அவரது வருமானம் மிக அதிகமாக உயர்ந்ததாக ஒரு சர்ச்சை எழுந்தது. அதேபோல் நிலக்கரி சுரங்க முறைகேடு மற்றும் மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கு அதிக பணம் பெற்றது என பல சர்ச்சைகளில் சிக்கியவர் ஜெகத்ரட்சகன்.
கடந்த பல ஆண்டு காலமாகவே அவரது வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதும் ஆவணங்களை கைப்பற்றுவதும் வாடிக்கையாகவே உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்ததன் பேரில், ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும் வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டது தொடர்பாக, அவருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.இந்த நிலையில் நேற்று காலை முதல் ஜெகத்ரட்சகனின் வீடு, மருத்துவ கல்லூரி மற்றும் மதுபான ஆலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 70க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சூழலில், ஜெகத்ரட்சகன் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி வருமான வரித் துறையின் புலனாய்வு பிரிவுக்கும் புகார்கள் சென்றதை அடுத்து சோதனை நடைபெற்றது