சி.பி.ஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் இடை தரகர்கள் மூலம் தன்னை மிரட்டியதாக தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் இன்று தமிழக சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் தொழிலதிபர்களை குறி வைத்து அமலாக்கத்துறையினர் மிரட்டுகின்றனர் என்றும், சி.பி.ஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் இடை தரகர்கள் மூலம் தன்னை மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவு பேசுகையில், "சி.பி.ஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் இடைத்தரகர்கள் மூலம் என்னை மிரட்டின. ஊரை விட்டு எல்லாம் போக சொன்னார்கள், செல்போன் நம்பரை மாற்ற சொன்னார்கள். 3 மாதமாக இடைத்தரகர்கள் பலர் என்னிடம் பேசினார்கள்.
என்னைப்போன்று எல்லோருக்கும் மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் இடைத்தரகர்கள் மூலமாக மிரட்டல் விடுக்கின்றன.பண பேரம் பேசி படியவில்லை என்றால் நோட்டீஸ் அனுப்பி அமலாக்கத்துறை எச்சரிக்கிறது. நான் சரியாக இருக்கிறேன் என்ன வந்தாலும் மேலே இருப்பவர் பார்த்துக்கொள்வார் என்றேன்" என்று அவர் கூறியுள்ளார்.