திருச்சியில் நடிகர் விஜயின் லியோ 'லியோ' பட திரையிடலின் போது நிகழும் விதிமீறல்கள் தொடர்பாக புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் அலைபேசி எண் வெளியிட்டுள்ளார்.
Trichy: தமிழ்நாட்டில் உள்ள சினிமா திரையரங்குகளில் லியோ திரைப்படம் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சி அக்டோபர் 19 முதல் 24-ம் தேதி வரை திரையிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 4 காட்சிகளுக்கு பதிலாக திரையரங்குகளில் 5 காட்சிகள் வெளியிடலாம் என தமிழக அரசு அறிவித்தது. அதேநேரம், அதிகாலை 4, 7 மணி காட்சிகளுக்கு அனுமதி மறுத்துள்ளது.
இதுகுறித்த விபரம் வருமாறு:-
'லியோ' திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாட்டை தவிர பிற மாநிலங்களில் காலை 4 மணி அல்லது ஐந்து மணிக்கே சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனிடையே லியோ பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் 'லியோ' படத்தின் முதல் காட்சியை, அக்.19-ம் தேதி அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கும், 20-ம் தேதியில் இருந்து 24-ம் தேதி வரை காலை 7 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்கள்.
இந்நிலையில் தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசும் சமீபத்தில் அனுமதி வழங்கி இருந்தது. அதாவது நேரம் குறிப்பிடாமல் ஒருநாளுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியிருந்தது. இந்த நிலையில், தமிழக அரசு 'லியோ' படத்தின் சிறப்புக் காட்சி தொடர்பாக மீண்டும் சில அறிவுரைகளை வழங்கி உத்தரவிட்டது. அதன்படி 19-ம் தேதி முதல் 24ஆம் தேதிவரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டது.
அதனடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் லியோ திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் (19.10.2023) முதல் (24.10.2023) வரை மட்டும் நாளொன்றுக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் அதாவது, காலை 09:00 மணி முதல் மறுநாள் அதிகாலை 01:30 மணிக்கு முடிவடையும் வகையில் திரைப்படம் திரையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்காணிக்கவும், விதிமுறை மீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள், எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் விதிமுறைகளைப் பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழ்வருமாறு:
திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் : 9445000455
ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர்- 9445461797
லால்குடி வருவாய் கோட்டாட்சியர் -9445000456
முசிறி வருவாய் கோட்டாட்சியர் - 9445000457 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, துணிவு திரைப்படத்தை அதிகாலையில் பார்க்க போய் ரசிகர் இறந்த நிலையில், அதிகாலை காட்சியை அனுமதிப்பதில் சட்டம் ஒழுங்கில் சிக்கல் ஏற்படும் என்று தமிழக அரசு அதிகாலை காட்சிகளுக்கு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.