வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் இலங்கை சென்றால் அவர் மீது கற்கள் வீசப்படும் என்று இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸின் சகோதரர் ட்ரெவிஸ் மேத்யூஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 6ம் தேதி டெல்லியில் நடந்த 38வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - இலங்கை அணிகள் மோதின.
மேத்யூஸ் 'டைம் அவுட்'
இந்தப் போட்டியின் போது இலங்கை அணியின் சமரவிக்ரமா-வின் (6வது) விக்கெட்டுக்குப் பிறகு பேட்டிங் செய்ய களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் 'டைம் அவுட்' முறையில் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார். பேட்டிங் செய்ய களம் புகுந்த மேத்யூஸ், கிரீசை தொட்டு கும்பிட்டு விட்ட தனது ஹெல்மெட்டை சரிசெய்தார். ஆனால், ஹெல்மெட் இறுக்க பயன்படுத்தப்படும் பட்டை கீழே அவிழ்ந்து விழுந்தது.
அதனால், பேட்டிங் செய்யாத மேத்யூஸ் டக்-அவுட்டில் உள்ள தனது அணியினரை அழைத்து வேறு ஹெல்மெட் எடுத்து வர செல்லி சைகை காட்டினார். அவர்கள் எடுத்து வர கால தாமதம் ஆனா நிலையில், பேட்டிங் செய்யாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார். அதனால் ஆட்டம் 2 நிமிடங்களுக்கு மேல் தடை பட்டது.
அப்போது, வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கள நடுவர்களிடம் 'டைம் - அவுட்' அவுட் கொடுக்க அப்பீல் செய்தார். நடுவர்களும் கால தாமதம் கருதி டைம் -அவுட் முறையில் மேத்யூஸ் அவுட் என அறிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மேத்யூஸ் ஒருபந்து கூட விளையாடாமல் (0) ரன்னில் அவுட் ஆனார். 'டைம் - அவுட்' முறையில் ஒருவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது கிரிக்கெட் வரலாற்றில் அதுவே முதல் முறையாக இருந்து போனது.
சர்ச்சை
இந்நிலையில், ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் -அவுட் முறையில் அவுட் என அறிவிக்கப்பட்டது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறியது. ஒருபுறம் வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசனை இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக சாடி வருகிறார்கள். மறுபுறம், ஷாகிப் அல் ஹசன் டைம் -அவுட் முறையில் அப்பீல் செய்ததது தொடர்பாக பயிற்சியாளர் ஆலன் டொனால்டிடம் வங்கதேச கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்க உள்ளது. இப்படியாக டைம் -அவுட் சர்ச்சை தொடர்ந்து வண்ணம் இருந்து வருகிறது.
எச்சரிக்கை
இந்த நிலையில், ஷாகிப் அல் ஹசனுக்கு இனி இலங்கையில் நல்ல வரவேற்பு இருக்காது என்றும், அவர் அங்கு சென்றால் அவர் மீது கற்கள் வீசப்படும் என்றும் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸின் சகோதரர் ட்ரெவிஸ் மேத்யூஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக டெக்கான் குரோனிக்கிள் செய்தி நிறுவனத்துக்கு ட்ரெவிஸ் மேத்யூஸ் அளித்து பேட்டியில், "“நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம். வங்கதேச கேப்டனுக்கு விளையாட்டு வீரர் உணர்வு இல்லை. ஜென்டில்மேன் விளையாட்டில் மனிதாபிமானத்தை காட்டவில்லை.
ஷாகிப்புக்கு இலங்கையில் இனி வரவேற்பு இருக்காது. அவர் ஏதேனும் சர்வதேச அல்லது லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) போட்டிகளில் விளையாட இங்கு வந்தால், அவர் மீது கற்கள் வீசப்படும் அல்லது ரசிகர்களின் கோபத்தை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்று கூறியுள்ளார்.