தனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்து தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தனது 69-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள உலக நாயகன் கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், அவரின் வாழ்த்துக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். உலக நாயகன் என்ற பட்டத்துடன் தமிழ் சினிமாவில் வலம் வரும் இவா, மலையாளம் தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 200-க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு படங்களில் நடிக்காத கமல்ஹாசன் 4 வருட இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு விக்ரம் என்ற பெரிய வெற்றிபடத்தை கொடுத்திருந்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வரும் நிலையில், அரசியலிலும் அடுத்து வரும் தேர்தலுக்கான தனது கட்சியை தயார்படுத்தி வருகிறார். இதனிடையே நவம்பர் 7-ந் தேதி (இன்று) தனது 69-வது வயதில் கமல்ஹாசன் அடியெடுத்து வைக்கிறார்.இந்த நாளை கொண்டாடும் விதமாக கமல் அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ள தக் லைஃப் என்ற படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது. தொடர்ந்து கமல்ஹாசனுக்கு அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறது. அந்த வகையில் முதல்வர். மு.க.ஸ்டாலின் கூறிய பிறந்த நாள் வாழ்த்துக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.
கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நலம் சூழ வாழிய பல்லாண்டு என்று முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தற்போது இதற்கு பதில் அளித்துள்ள கமல்ஹாசன், இனிய நண்பரும், தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் செலுத்தும் ஆற்றல்மிகு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களே, உங்கள் அன்பான வாழ்த்தில் அகம் மகிழ்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சரும் முன்னாள் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், வாழ்த்துக்கும் நன்றி தெரிவித்துள்ள கமல்ஹாசன், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக நாளும் புதுச்சாதனைகள் படைப்பவருமான அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களே, என் மீது இடையறாது நீங்கள் பொழியும் அன்பில் ஆனந்தமடைகிறேன்.