திமுகவின் மூன்று அமைச்சர்கள் பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக சிறைக்கு செல்வார்கள் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கூறியுள்ளார். தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கு. அண்ணாமலை, மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை நடத்திவருகிறார்.
தற்போது இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில், தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் பசுபதி கோயில் என்ற இடத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அண்ணாமலை செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை (டிச.26) சந்தித்துப் பேசினார்.
அப்போது, “உயர்கல்வியை போதிக்க வேண்டிய அமைச்சர் பொன்முடி சிறை செல்ல இருக்கிறார். ஏற்கனவே ஒரு அமைச்சர் சிறையில் இருக்கிறார்.11 திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குள் மூன்று திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள்” என்றார்.அண்ணாமலையின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.