நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 185 தொகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தளபதி விஜயின் மக்கள் இயக்கம் தமிழகத்தில் உள்ள 185- தொகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுரை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், சமீப காலமாக தனது அரசியல் என்ட்ரிக்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக கடந்த சில மாதங்களாக அவ்வப்போது தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து வந்தார். ஏற்கனவே மக்கள் இயக்கம் சார்பில் உள்ளாச்சி தேர்தலில் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.
இதனிடையே அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தல் அல்லது தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள 185 தொகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து தளபதி விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் பேசி ஆய்வு செய்து வருகிறார்.
மேலும் பூத் கமிட்டி விவரங்களை வெளியிடுவது குறித்து குளறுபடி ஏற்பட்ட நிலையில், தாம்பரம் மாவட்ட தலைவர் மின்னல் குமார் என்பவரை தொடர்புகொண்ட விஜய், குளறுபடிகள் குறித்து விபரங்களை கேட்டுவிட்டு அவரை எச்சரித்துள்ளார். அவ்வப்போது இதுகுறித்து நிர்வாகிகளிடம் பேசி வரும் விஜய் சிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டும், இது போன்று குளறுபடி செய்யும் நிர்வாகிகளுக்கு அறிவுரையும் கூறி வருகிறார்.
சமீபத்தில் வெளியான லியோ படம் விஜய் திரை வாழ்க்கையில் பெரிய வசூல் செய்த படமாக மாறியுள்ள மகிழ்ச்சியில் இருக்கும் அவர், அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்புக்கு இடையில் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து வரும் விஜய் அரசியல் நிலவரங்கள் குறித்து தனது நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து வருகிறார்.